மணிப்பூரில் வன்முறைகள் நீடிப்பதால், பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் சேவையும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மணிப்பூரில் வன்முறை அதிகரித்து வருவதால், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்க்கவும், வதந்திகள் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையிலும் இணைய சேவை ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே ஜிரிபாமில் 6 பேர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து முதல்வர் பிரேன்சிங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வீடியோ செய்தியில், “மூன்று அப்பாவிக் குழந்தைகள் மற்றும் மூன்று அப்பாவிப் பெண்கள் குக்கி தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு கொல்லப்பட்டமை காட்டுமிராண்டித்தனமான செயலாகும்” என்று கண்டித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை அதிகரித்து பதற்றம் நீடிப்பதால், சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக கூடுதல் படைகளை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மெய்தி சமூகத்தினருக்கும், குக்கி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மேமாதம் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, இரு சமூகத்தினர் சார்ந்த ஆயுதக் குழுக்களும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுவதால் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. மோதலில் இதுவரை 230- இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு நிைலவரம் குறித்து ஆராய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் மக்களை வன்முறையில் இருந்து பாதுகாத்து, அமைதியை நிலைநாட்டும் வகையில் கூடுதலாக 5,000 வீரர்கள் அடங்கிய துணைஇராணுவப்படையை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது.
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஒரு கும்பல் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது. அதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதவுபா (20) என்ற போராட்டக்காரர் உயிரிழந்தார். இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.
மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க அரசு, அமைதியை நிலைநாட்டவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் தவறிவிட்டதாக கூறி தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி), பா.ஜ.கவுக்கு அளித்துவந்த ஆதரவை கடந்த 17- ஆம் திகதி வாபஸ் பெறுவதாக அறிவித்தது.
60 உறுப்பினர்களை கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் என்.பி.பி கட்சிக்கு 7 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். பா.ஜ.கவுக்கு பெரும்பான்மையாக 32 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதுதவிர, நாகா மக்கள் முன்னணியின் 5 எம்.எல்.ஏக்கள், ஐக்கிய ஜனதா தளத்தின் 6 எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எனவே, என்.பி.பி தனது ஆதரவை விலக்கிக் கொண்டாலும் பா.ஜ.க அரசுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
மணிப்பூர் மாநிலத்தில் 2 ஆண்டுகளாக தொடர்ந்து வன்முறை நீடித்து வரும் நிலையில், முதல்வர் பைரேன் சிங் உட்பட 50 எம்.எல்.ஏக்களும் தங்களது பதவியை உடனே இராஜினாமா செய்ய வேண்டும் என்று 13 பொதுமக்கள் அமைப்புகள் கெடு விதித்துள்ளதால், பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளன.
மணிப்பூரில் 6 மெய்தி இனக்குழுவினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வீடுகள் தாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் 2 ஆண்டுகளாக மெய்தி_- குக்கி இன மக்களிடையே தொடர் மோதல் நிகழ்ந்து வருகிறது. தற்போது குக்கி இன மக்கள் ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். குக்கி இன மக்கள் தங்களுக்கு தனி நிர்வாக அமைப்பை உருவாக்க கோருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் மெய்தி இனக்குழுவைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வீடுகளை மெய்தி இன மக்கள் தாக்கி தீ வைத்து எரித்தனர். மக்கள் கிளர்ச்சி ஓயாத நிலையில் அரசியல் ரீதியாக தீர்வு காண முடியாததால் முதல்வர் பைரேன் சிங் உட்பட 50 எம்.எல்.ஏக்களும் தங்களது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என 13 பொதுமக்கள் அமைப்புகள் இணைந்து கெடு விதித்துள்ளன.
இரண்டு தரப்பிலும் ஆயுத ஏந்திய குழுக்களும் இருக்கின்றன. குக்கி சமூகத்திற்கும், மெய்தி சமூகத்திற்கும் இடையிலான இடஒதுக்கீடு பிரச்சினை காரணமாக இந்த வன்முறை தொடங்கியது.
மணிப்பூரில் மெய்தி, நாகா மற்றும் குக்கி என மூன்று முக்கிய சமூகங்கள் வசிக்கின்றன. மெய்தி சமுகத்தினர் பெரும்பாலும் இந்துக்களாக இருக்கிறார்கள். அதேசமயம் நாகா மற்றும் குக்கி சமுகத்தினர் பெரும்பாலும் கிறிஸ்த்தவ மதத்தை பின்பற்றுகிறார்கள். இவர்கள் எஸ்.டி (ST) பிரிவின் கீழ் சலுகை பெற்று வருகிறார்கள்.
மணிப்பூர் மாநிலத்தில் குறிப்பாக பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள் மெய்த்தி இன மக்கள். மலை மீது வசிப்பவர்கள் குக்கி இன மக்கள். இந்த குக்கி மக்களுக்கு ஏற்கனவே எஸ்.டி மற்றும் பழங்குடியினர் சலுகை உள்ளது. எங்களுக்கும் இந்த சலுகை வேண்டும் என நீண்ட காலமாக மெய்த்தீ இன மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இந்த வழக்கை விசாரித்த மணிப்பூர் உயர்நீதிமன்றம் மெய்த்தீ சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) பிரிவில் சேர்க்க வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரைத்தது.
இதற்கு குக்கி இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து போராட்டம் வெடித்தது. பிறகு வன்முறை ஆட்டம் அரங்கேறியது. இரண்டு தரப்பிலும் சேர்த்து இதுவரை சுமார் 230 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 50,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு குடிபெயர்ந்து முகாம்களில் வசித்து வருகிறார்கள்.
மணிப்பூர் வன்முறையை அடுத்து, அங்கு அமைதி திரும்பக்கோரி பல போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. அதன்பிறகு சற்று அமைதி திரும்பியது. ஆனால் அந்த அமைதி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.