எத்தனை தான் வீராப்பாக இருந்தாலும் உடலில் முதிர்ச்சி தெரிகிறது. குத்துச் சண்டைக்காக கையில் அணிந்திருக்கும் உறை கூட உற்றுப் பார்த்தால் சுமை போல தெரியும். என்றாலும் மைக் டைசன் என்ற பெயருக்கு தனி மரியாதை உண்டு.
இல்லாவிட்டால் 58 வயதாகும் அவர் குத்துச்சண்டை மேடைக்கு மீண்டும் ஏறுகிறார் என்பதைக் கேட்டு 70,000 இற்கும் அதிகமான ரசிகர்கள் கூடியிருப்பார்களா!
யூடியுபராக புகழ்பெற்ற பின்னர் குத்துச்சண்டை வீரரான ஜக் போல், டைசனை விடவும் 31 வயது இளையவர். 27 வயதில் முறுக்கேறிய உடலுடன் டைசனை எதிர்கொள்வது அத்தனை சவாலாக இருக்காது என்பது இருவரையும் எதிர் எதிரே பார்த்தபோதே புரிந்துவிட்டது.
என்றாலும் டெக்சாஸில் கடந்த வாரம் நடந்த போட்டிக்கு முன்னர் இருவரும் தோன்றியபோது ஒரே குழப்பமாகப் போய்விட்டது. எடையை சோதிப்பதற்கான சந்திப்பில் ஜக் போலின் கன்னத்தில் டைசன் பளார் விட்டார். இருவருக்கும் இடையே வாக்குவதம் ஏற்பட்டதாகவும், டைசனின் காலை போல் மிதித்ததால் கோபப்பட்டே அவர் அறைந்ததாகவும் இந்த சம்பவத்திற்கு ஏகப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன.
எப்படியானாலும் அடுத்த நாள் குத்துச்சண்டைப் போட்டிக்கான மேலதிக விளம்பரமாக இது இருந்தது.
ஆனால், மிகப்பெரிய சண்டையை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டைசனின் குத்தில் முந்தைய பலமிருக்கவில்லை. ஜக் போலோ துல்லியமாக குத்துகளை விட்டு புள்ளிகளைச் சேர்த்தார். இதனைப் பார்த்த சில ரசிகர்கள் அரங்கை விட்டு முன்கூட்டியே வெளியேறிவிட்டார்கள். போட்டி முடிவதற்கு முன்னரே அரங்கில் சில பகுதிகள் காலியாகிவிட்டன.
ஒவ்வொன்று இரண்டு நிமிடங்கள் கொண்ட எட்டு சுற்றுகளில் நடைபெற்ற போட்டி முடிவில் மூன்று நடுவர்களில் முடிவும் 80–72, 79–73 மற்றும் 79–73 என ஜக் போலுக்கு சாதகமாகவே இருந்தது.
இந்த எட்டு சுற்றுகளிலும் ஒட்டுமொத்தமாக டைசனால் 18 குத்துகளையே விட முடிந்திருக்கிறது. அதிலும் அவரது ஆற்றல் மிக்க 13 குத்துகள் மாத்திரம் தான் எதிராளியில் உடலில் விழுந்தன.
அதுவே ஜக் போல் 78 குத்துகளை விட்டதோடு அதிலும் 20க்கும் மேல் டைசனில் உடலில் விழுந்தன. ஆட்டத்தில் சுவாரஸ்யமே இல்லை என்று போட்டி முடிவில் ரசிகர்கள் திட்டித் தள்ளினார்கள். ஆனால் தோற்றாலும் வெற்றி பெற்றுவிட்டேன் என்று டைசன் வீராப்புப் பேசினார். அவர் இப்படிக் கூறுவதற்கு எத்தனையோ அர்த்தங்கள் இருக்கின்றன.
உண்மையில் டைசன் மற்றும் ஜன் போல் இடையிலான போட்டி கடந்த ஜூலையிலேயே நடந்திருக்க வேண்டும். டைசன் சுகவீனம் உற்றதாலேயே இத்தனை தாமதம்.
குத்துச்சண்டை உலகில் மொஹமட் அலிக்குப் பின் டைசன் என்பவர் தவிர்க்க முடியாதவர். 1985 இல் தொழில்முறை குத்துச்சண்டைக்கு வந்த மைக் டைசன், தனது முதல் 19 சமர்களிலும் எதிராளியை சாய்த்து நொக் அவுட் முறையில் வெற்றி பெற்றார். அதிலும் 12 போட்டிகளில் முதல் சுற்றிலேயே எதிர்த்து போட்டியிட்டவர்களை நொக் அவுட் செய்தார். 1986 இல் இளம் வயதிலேயே அதிபார குத்துச்சண்டை பட்டத்தை வென்றவராக சாதனை படைத்தார். இன்றும் கூட அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை.
1992இல் அமெரிக்க அழகியை கற்பழித்த குற்றச்சாட்டில் சிறை சென்ற அவர் மூன்று ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டி இருந்தது. விடுதலையான பின்னரும் அவரின் கையின் பலம் குறைந்திருக்கவில்லை. 1995 அவர் பங்கேற்ற குத்துச்சண்டை போட்டியிலே பீட்டர் மக்லீனை எதிர்கொண்டபோது முதல் சுற்றுலேயே வெற்றி பெற்றார்.
என்றாலும் 1997 ஆம் ஆண்டு குத்துச்சண்டை மேடையில் இவண்டர் ஹொலிபீல்டின் காதைக் கடித்தது அவரது குத்துச்சண்டை வாழ்வில் கறுப்புப் புள்ளி. அந்த சம்பவம் பெரும் அவருக்கு வீழ்ச்சியைத் தந்தது. சற்று காலம் குத்துச்சண்டை பக்கம் கால் வைக்காத டைசன் 1999 இல் பங்கேற்ற முதல் போட்டியில் எதிராளியை நொக் அவுட் செய்தார்.
என்றாலும் நடத்தை மட்டும் மாறவே இல்லை. 1999 இல் வீதி விபத்து தொடர்பான தகராறில் இருவரை தாக்கியதால் மீண்டும் ஒன்பது மாதங்கள் சிறை சென்றார்.
சிறை சென்று திரும்பியவர் அன்ட்ரூ கொலோட்டாவை மூன்றாவது சுற்றில் நொக் அவுட் செய்தார். என்றாலும் போட்டிக்குப் பின்னராக ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்காததால் முடிவு பின்னர் மாற்றப்பட்டது.
2003 ஆம் ஆண்டு கிளிபர் எடின்னேவுக்கு எதிரான போட்டியில் டைசன் 49 வினாடிகளில் எதிராளியை நொக் அவுட் செய்தது தான் இதுவரை அவரை குத்துச்சண்டை வாழ்வில் பெற்ற கடைசி வெற்றியாக இருந்தது.
கடைசியாக 2005 ஆம் ஆண்டு கெவின் மக்பிரிட் உடனான போட்டியில் தோற்ற பின் கடந்த 19 ஆண்டுகளாக தொழில்முறை குத்துச்சண்டை பக்க தலைகாட்டாது இருந்த நிலையிலேயே இப்போது ஜக் போலுடன் சண்டைக்கு வந்தார்.
இரண்டு தசாப்தங்களின் பின் குத்துச்சண்டை மேடை வந்து பிடரி மயிர் உதிர்ந்த பின் ஓர் இளைஞனோடு மல்லுக்கு நின்று தாக்குப்பிடிப்பது கூட பெரிய வெற்றி தான். என்றாலும் பார்ப்பவர்களுக்குத் தான் சகிக்க முடியவில்லை. உண்மையில் டைசன் மற்றும் ஜக் போலின் குத்துச்சண்டையை முழுக்க முழு விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியாது. அதற்குப் பின் இருக்கு வியாபாராம் மிகப்பெரியது.
டைசன் என்ற பிம்பம் இன்றும் கூட சந்தையில் விலைபோகும் சரக்கு என்பதற்கு இந்தப் போட்டி நல்ல உதாரணம். தனது குத்துச்சண்டை வாழ்வில் ஒட்டுமொத்தமாக 59 போட்டிகளில் பங்கேற்றிருக்கும் அவர் 50இல் வெற்றிபெற்றிருக்கிறார். அதிலும் 44 போட்டிகளில் நொக் அவுட் வெற்றி என்றால் சும்மாவா! எனவே, டைசன் மீண்டும் குத்துச்சண்டை மேடை திரும்புகிறார் என்ற செய்தி பிரமாண்டமாக இருந்தது.
அதனையொட்டிய சம்பவங்கள், போட்டி எல்லாமே பணத்தை அள்ளுவதற்கான ஒரு திரைக்கதை வசனம் போல இருந்தது.
போட்டியை பார்ப்பதற்கு நேரடியாக அரங்கு வந்தவர்கள் 72,300க்கும் அதிகம். சராசரியாக ஒரு தலைக்கான டிக்கெட் விலை 304 டொலர்கள் என்றால் கூட்டிக்கழித்துப் பாருங்கள்.
மறுமக்கம் இந்தப் போட்டியை நெட்பிளிக்ஸ் நேரடியாக ஒளிபரப்பியது. அதனைப் பார்ப்பதற்கு 65 மில்லியன் பார்வையாளர்கள் திரண்டதோடு ஒட்டு மொத்தமாக போட்டியை 100 மில்லியனுக்கு அதிகமானவர் பார்த்ததாக நெட்பிளிக்ஸ் கூறுகிறது. அதாவது அந்த நிறுவனத்தில் விளையாட்டுப் போட்டி ஒன்றை நேரலையில் அதிகம் போர் பார்த்ததும் இது தான். இதனால் பெற்ற லாபம் எவ்வளவு இருக்கும். இது போக மற்ற வருவாய்களையும் சேர்த்தால் பெருத்த இலாபம் தான். போட்டியில் பங்கேற்ற டைசன் இதன்மூலம் கிட்டத்தட்ட 20 மில்லியன் டொலர்களை சம்பாதித்திருப்பதாக நம்பப்படுகிறது. இதுவே ஜக் போல் 40 மில்லியன் டொலர்களை ஈட்டி இருக்கக் கூடும் என்பது கணக்கு. எனவே, தோற்றாலும் வென்று விட்டேன் என்று டைசன் கூறுவதன் அர்த்தம் இதுவாகக் கூட இருக்கலாம்.
எனவே உண்மையில் தோற்றவர்கள் யார் என்பது தான் புரியவில்லை.
எஸ்.பிர்தெளஸ்