‘தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கதை முடிந்து விட்டது. இல்லாத கூட்டமைப்புக்காக ஏன் அடிபட்டுக் கொள்ள வேணும்?‘ என்று சில மாதங்களுக்கு முன்பு, (DTNA உருவாக்கப்பட்டபோது) ரெலோவின் முக்கியஸ்தர் ஒருவரிடம் கேட்டேன்.
உடனே அவர் குரலை உயர்த்தி ஆவேசப்பட்டார். ‘கூட்டமைப்பு இல்லையென்று யார் உங்களுக்குச் சொன்னது? கூட்டமைப்பை விட்டு தமிழரசுக் கட்சிதான் வெளியேறிச் சென்றதே தவிர, நாம் தொடர்ந்தும் கூட்டமைப்பாகவே இருக்கிறோம்‘ என்றார்.
‘அப்படியில்லையே! நீங்கள் DTNA (ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) என்றல்லவா செயற்படுகிறீர்கள்? கூட்டமைப்பு என்ற பேரில் தமிழரசுக் கட்சிதானே உள்ளது?’ என்றேன்.
‘நாம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை. தமிழரசுக் கட்சிதான் வெளியேறிச் சென்று, 2022 இல் தனியாக உள்ளுராட்சித் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்தது. நாங்கள் கூட்டமைப்பாகவே எப்போதும் இருக்கிறோம்’ என்றார் அவர்.
‘கிளிநொச்சியில் சிறிதரனின் பணிமனையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற பெயர்ப்பலகையே உள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்று உங்களை நீங்கள் சொல்லிக் கொண்டாலும் நீங்கள் இப்போது ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (DTNA) என்றுதானே உங்களை அடையாளப்படுத்த வேண்டியுள்ளது சரி, ஒரு வாதத்துக்கு நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டாலும் தமிழரசுக் கட்சியை விட நீங்கள் பலவீனமாகத்தானே இருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்
அவருக்குக் கோபம் உச்சிக்கு ஏறி விட்டது. தன்னைச் சீண்டுகிறேன் என்று நினைத்திருப்பார் போலும்.
‘தமிழரசுக் கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடையாது. சுமந்திரன் எல்லாவற்றையும் நாசமாக்கி விட்டார். நாங்கள் பலமான கூட்டணியை அமைத்திருக்கிறோம். எதிர்காலத்தில் எங்களோடு (DTNA யுடன்) இன்னும் பல கட்சிகளும் அணிகளும் சேரும். இருந்து பாருங்கள். தமிழரசுக் கட்சியே வந்து சேரும். விரைவில் தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்போகிறோம். நிச்சயமாகப் புதிய வரலாறு எப்படி எழுதப்படும்’ என்றார் அந்தப் பிரமுகர்.
இறுதியாக இன்னொன்றையும் சொன்னார், ‘உங்களுடைய ஊகங்களும் விருப்பங்களும் அரசியல் முடிவுகள் ஆகாது. அரசியலை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால், மக்களின் மனநிலையை அறிய வேணும். எங்களுக்கு நாற்பது ஆண்டுகால வரலாறு உண்டு. இப்ப கூட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் மக்கள் ஆதரவில்லாமல் இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகியிருக்கும்? ரெலோ ஒன்றும் சில்லறைக் கட்சியோ சிறிய இயக்கமோ இல்லை நீங்கள் கொஞ்சம் அரசியல் படிக்க வேணும்‘ என ஒரு பத்து நிமிடம் பொழிந்து தள்ளினார்.
கதையைத் தொடங்கியது நான் என்பதால், வேறு வழியில்லாமல் எல்லாவற்றையும் கேட்க வேண்டியிருந்தது. இப்படித்தானிருக்கிறது இவர்களுடனான அரசியல் புரிதலும் உரையாடலும் என அதில் சில விடயங்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. கூடவே கள நிலைமையை – அவர்களுடைய அரசியலின் போக்கை, அரசியற் சூழலை அவர் விளங்கிக் கொண்ட விதத்தையெல்லாம் தெரிந்து கொண்டேன்.
அதற்கு மேல் எதையும் நான் பேசவில்லை. அதற்கு அவசியமுமில்லை. ஏனையவற்றை வரலாறு பார்த்துக் கொள்ளும் அல்லவா. வரலாறு என்பது வேறொன்றுமல்ல, காலமும் மக்களும்தான். ஆக என்னுடைய பொறுமைக்கும் செவி கொடுத்துக் கேட்டதற்கும் பயன் கிடைத்தது.
அந்த ரெலோக்காரர் மட்டுமல்ல, இதேபோலத்தான் ஈ.பி.ஆர். எல்.எவ் ஆட்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ‘ஜனநாயக நடைமுறைகளுக்கு இடமளிக்காமல், கூட்டமைப்பைச் சிதைத்தது மட்டுமல்ல, அதை விட்டு வெளியேறியதும் தமிழரசுக் கட்சிதான். விரைவில் அது பாடம் படிக்கும். அதற்குப் பிறகு அதனுடைய திமிரெல்லாம் வடிந்தொடுங்க, பழையபடி கூட்டமைப்புக்குள் வந்து சேரும். அப்போது அதனுடைய பல்லைப் பிடுங்கி விடுவோம்.. குறிப்பாகச் சுமந்திரனை அரசியற் களத்திலிருந்து அகற்றி விடுவோம். எல்லாவற்றையும் விட மொத்தத்தில் தமிழரசுக் கட்சியை இல்லாமற் செய்வதே தங்களுடைய முதல் வேலை’ என்றெல்லாம் ஏராளம் கனவுத் திட்டங்கள்.
இதையெல்லாம் கேட்கும்போது சிரிப்புத்தான் வந்தது. சிரிப்பு வந்தால் சிரிக்கத்தானே வேணும். சிரித்தேன். இதை நண்பர்களுடன் பகிர்ந்து எல்லோருமாகச் சிரித்தோம்.
அப்பொழுது ஒரு நண்பர் சொன்னார், ‘காரைநகர் கடற்படைத் தளத்தை நிர்மூலம் செய்த வரலாற்றுச் சாதனையாளர்கள், நிச்சயமாகத் தமிழரசுக் கட்சியையும் உடைத்து நொருக்கி விட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பார்கள். அதற்குப் பிறகுதான் ஒரு பிளேன்ரீயைக் கூடக் குடிப்பார்கள். அப்படியொரு வீர சபதத்தை எடுத்தவர்கள், அதை நிறைவேற்றும் வரையில் ஓய்ந்திருக்க மாட்டார்களல்லவா!… என்று.
அன்று முழுவதும் சிரிப்பாகவே இருந்தது.
இதனை மையப்படுத்தியே ‘ஒப்பிரேஷன் சுமந்திரன்’ ‘புலிகளும் எலிகளும்’ ‘EPRLF: கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும்’ , ‘அரசியலில் இதெல்லாம் சகஜமில்லை’, ‘தமிழரசுக் கட்சியைப் பலவீனப்படுத்தும் தமிழ்ப்பொது வேட்பாளர்’, ‘தமிழ்ப்பொது வேட்பாளரும் அரசியற் தற்கொலையும்’, ‘தெற்கின் அரசியற் களமும் வடக்கின் அரசியல் முகமும்’, ‘தமிழ்த்தேசியம் பலப்படுத்தப்படுகிறதா? பலவீனப்படுத்தப்படுகிறதா?’, ‘எதிர்ப்பு அரசியலின் காலம் முடிந்தது’, ‘காலம் கோருவது கருத்துருவாக்கிகளை மட்டுமல்ல‘, ‘தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு – தமிழரசுக் கட்சி – ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு: ஒற்றுமையும் வேறுபாடுகளும்’, ‘விதியே விதியே தமிழ்ச்சாதியை என்னசெய்ய நினைத்தாய்?‘ போன்ற பல கட்டுரைகளை அண்மையில் தொடர்ந்து எழுதினேன். இந்தக் கட்டுரைகளை நான், ரெலோ, ஈ.பி.ஆர்.எல், எவ், புளொட் தரப்பினருக்கும் சுமந்திரன், மனோகணேசன், சந்திரகுமார் போன்றோருக்கும் அனுப்பி வைப்பதுண்டு. பலரும் படித்து விட்டு அமைதியாகி இருந்து கொள்வார்கள். பதிலோ மறுப்போ விமர்சனங்களோ வராது. சிலர் விவாதிப்பர். சிலர் திட்டுவார்கள். ஒரு தடவை ஈ.பி.ஆர்.எல்.எவ்வைச் சேர்ந்த தோழர் ஒருவர் சொன்னார் – ‘உங்களுடைய விருப்பங்களை அரசியல் முடிவுகளாகக் காட்டக் கூடாது. நங்கள் மக்களோடுதான் நிற்கிறோம். மக்கள் என்ன நினைக்கிறார்கள்? எப்படிச் சிந்திக்கிறார்கள்? என்பதெல்லாம் எங்களுக்கும் விளங்கும்’ என.
இன்னொருவர் சொன்னார், ‘சில ஊடங்களின் விருப்பத்துக்கும் சில வாசகர்களைக் குஷிப்படுத்தவும்தான் எழுதுகிறீங்கள். இதெல்லாம் நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடிக்காது. DTNA யின் எழுச்சிக்குப் பிறகு பாருங்கள். மாற்றம் எப்படியிருக்குமென்று’ என.
இது தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தப்பட்ட சூழலில் இன்னும் மோசமாகியது. தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதில் என்னுடைய உடன்பாடின்மையைக் குறிப்பிட்டு, அதனுடைய சாதக – பாதக நிலையை விளக்கி எழுதினேன். குறிப்பாக ‘தமிழ்ப்பொது வேட்பாளர்’ ஒரு மோசமான நிலைப்பாடு. அதனால் தமிழ் மக்களைத் தேசமாகத் திரட்ட முடியாது. அதையும் விட தமிழ்த் தேசிய அரசியற் சக்திகளை ஒன்றிணைக்கவே முடியாது என்று குறிப்பிட்டிருந்தேன். அதை மறுத்த DTNA அணியினர் ஏறக்குறைய என்னையும் துரோகிப் பட்டியலில் சேர்த்தனர்.
இதுதான் உச்ச வேடிக்கையாகும்.
ஒரு காலம் அவர்களையே விடுதலைப் புலிகளும் அவர்களை ஆதரித்து நின்ற பெருந்திரள் தமிழ்ச்சமூகமும் துரோகிகளாகச் சித்தரித்ததுண்டு. இது தவறென காலம் முழுவதும் மூக்குச் சிந்திக் கொண்டிருந்தோரே மாற்றுக் கருத்துள்ளோரைத் துரோகி என்று கூறுவதாக இருந்தால்.?
இந்தச் சூழலில் நம்முடைய உரையாடல்கள் குறைந்தன. ஆனாலும் தொடர்பை நாம் முறித்துக் கொண்டதில்லை. ஒரு சிலர் ‘தொடர்ந்து நாம் உரையாட வேண்டாம். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பேசலாம்’ என்று நிறுத்திக் கொண்டனர். சங்குச் சின்னம் இரண்டரை லட்சம் வாக்குகளை எடுத்ததும் சற்று உசாரடைந்து மீண்டும் பேசத் தொடங்கினார்கள். அந்த உசாரோடு DTNA அணி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், தமிழ்ப்பொது வேட்பாளருக்கும் அப்போதைய சங்குக்கும் ஆதரவளித்த தமிழ் மக்கள் பொதுச் சபை தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டது. இருந்தாலும் பாராளுமன்றத் தேர்தலில் சங்கு அமோக வெற்றியைப் பெறும் என்று DTNA அணி முழுதாகவே நம்பியது. அந்த நம்பிக்கையைப் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அடித்துக் கொண்டு போய் விட்டது. இப்பொழுது இந்தத் தரப்பில் கனத்த அமைதியே நிலவுகிறது.
தேர்தலில் வெற்றி – தோல்வி ஏற்படுவது வழமை. ஆனால் இப்பொழுது நடந்தது அதுவல்ல. இதொரு அரசியற் தற்கொலை (Political suicide) ஆகும். அதாவது தமிழ்த்தரப்பினர் பொதுவாக மேற்கொண்டு வந்த பிராந்திய அரசியல் (தமிழ்த்தேசியவாத அரசியல்) பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளது. மீளவும் சிங்களத் தரப்பு அதற்கு உயிரூட்டவில்லை என்றால் பிராந்திய அரசியல் – தமிழ்த்தேசியவாத அரசியல் தொடர்ந்தும் உயிர்வாழ முடியாது.
ஏற்கனவே போருக்குப் பிந்திய சூழலைப் புரிந்து கொண்டு, அதற்கான அரசியலை மேற்கொள்ளாத காரணத்தினால் தமிழ் அரசியற் சக்திகளை ஓரங்கட்டியுள்ளனர் மக்கள். இதில் மோசமாகப் பாதிக்கப்பட்டது DTNA தான். அதாவது, ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சக்திகளே.
ஆனால், இந்தத் தேர்தலில் ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்களை நிராகரித்த மக்கள், ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்ட ஜே.வி.பியை ஏற்றுள்ளனர். இந்த முரணை வாசகர்கள் சற்று ஊன்றிக் கவனிக்க வேண்டும். காரணம், ஜே.வி.பி கடந்த காலப் படிப்பினைகளுக்கூடாக தேசிய மக்கள் சக்தியாகப் பரிணாமம் அடைந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் புதிய பரிணாமத்தையும் பரிமாணத்தையும் மக்கள் அங்கீகரித்துள்ளனர். வளச்சியின்றித் தேங்கிப் போன தமிழ் இயக்கங்களை மக்கள் நிராகரித்துள்ளனர். இதைப் புரிந்து கொண்ட தரப்பு தோழர் சுகு ஸ்ரீதரனும் அவருடைய தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியும்தான். ஆனால், சுகு ஸ்ரீதரனையும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியையும் DTNA பெரிதாகக் கணக்கிற் கொள்வதில்லை. DTNA கணக்கிற் கொள்ளாமல் விட்டாலும் வரலாறு தன்னுடைய கணக்கிற் கொண்டுள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் வாசகர்களுக்கும் குறித்த ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் வினருக்கும் ஒன்றை நினைவூட்ட வேண்டும். தற்போதிருப்பது பத்மநாபாவின் ஈ.பி.ஆர்.எல்.எவ்வா? அல்லது பிரபாகரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ்வா? என்று கேட்டு எழுதியிருந்தேன். இதே கேள்வி ரெலோ, புளொட் மீதும் எழுப்பப்பட்டது. ஏனென்றால் இந்த இயக்கங்கள் எல்லாம் தம்முடைய பெயரில் மட்டும்தான் வேறுபாடுகளைக் கொண்டுள்ளனவே தவிர, அரசியலில் அப்படியல்ல. விடுதலைப்புலிகளுக்குப் பின், அதன் நீட்சியாகக் காட்டப்படும் தேசியவாத அரசியலையே (Pseudo-nationalist politics) பின்பற்றுகின்றன.
இன்னொரு கேள்வி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் என்ன வேறுபாடு? அல்லது தமிழரசுக் கட்சிக்கும் DTNA க்கும் இடையில் என்ன வித்தியாசம்? எனவும் கேட்கப்பட்டது. இதற்கான விடைகள் எல்லாம் இப்போது (பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளோடு) தெளிவாகக் கிடைத்து விட்டன. ஆனாலும் இந்தச் சக்திகள் அதை ஏற்றுக் கொள்ளவோ புரிந்து கொள்ளவோ தயாரில்லை. மீண்டும் ஒற்றுமை, ஐக்கியம் என்று பேச (புலம்ப) த் தொடங்கியுள்ளன. தமது பின்னடைவுக்கும் தோல்விக்கும் காரணம், தாம் பிரிந்து நின்றதேயாகும் என்றே இவை நம்புகின்றன. இதற்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ளலாம். எலிகள் பல சேர்ந்தாலும் வளையைத் தோண்ட முடியாது. இதற்குச் சரியான பரிகாரமென்றால், அரசியல் உள்ளடக்கத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அதாவது, மாற்று அரசியலைக் கொள்ள வேண்டும்.
உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டிலும் புத்தாக்கத்தைக் (Innovation) கொள்ளாத எத்தகைய அரசியல் முயற்சிகளும் பயனளிக்காது. காலப் பொருத்தமற்ற, சமூக வளர்ச்சியைப் பொருட்படுத்தாத, சமூக வளர்ச்சிக்குப் பயளிக்காத அரசியல் நிலைப்பாட்டோடு இருக்கும் வரையில் இவற்றால் வெற்றியைப் பெறவே முடியாது. மட்டுமல்ல, அதனால் மக்களுக்கும் வெற்றியைக் கொடுக்க முடியாது.
இப்போது இந்தச் சக்திகளின் தலைக்குள் நிரம்பிக் கிடக்கும் பிரச்சினையெல்லாம் எப்படித் தமிழரசுக் கட்சி வெற்றியைப் பெற்றது? அதற்கு எப்படி 08 ஆசனங்கள் கிடைத்தன? அதில் சிறிதரன் போன்றவர்கள் எப்படி வெற்றியீட்டினார்கள்? கஜேந்திரகுமார் வெற்றி பெற்றது எப்படி? அப்படியான ஒரு வெற்றியைத் தாம் பெறுவது எப்படி? என்பதேயாகும். நிச்சயமாக மக்களின் நலனோ முன்னேற்றமோ விடுதலையோ அல்ல. அவற்றைப் பற்றிச் சிந்தித்தால், தமக்குள் நிச்சயமாக மாற்றத்தை (நிலைப்பாட்டு மாற்றத்தை – Position change) தமக்குள் உருவாக்கியிருக்கும். அல்லது இனியாவது உருவாக்க முயற்சிக்கும்.
ஆனால், அப்படிப் புதிதாக இவற்றால் சிந்திக்க முடியவில்லை. காரணம், ஏற்கனவே சொல்லப்பட்டதைப்போல புத்தாக்க அரசியற் சிந்தனையோ, புதிய அரசியல் உள்ளடக்கமோ (New Political Content) இவற்றிடம் இல்லை என்பதுதான். ஆனால், சரி, தவறுகளுக்கு அப்பால் இவற்றுக்கு வரலாற்றில் ஒரு இடமுண்டு. தம்மை அர்ப்பணித்துச் சமூகத்துக்கு பணியாற்றிய வரலாற்றைக் கொண்ட சக்திகள் இவையாகும். தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்க்காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆகியவற்றை விட இவை பன்மடங்கு பெறுமதிக்குரியவை. ஆனால், தமது அரசியல் வெறுமையினாலும் வறுமையினாலும் இன்று தமிழரசுக் கட்சியிடமும் தமிழ்க்காங்கிரஸிடமும் தோற்றுப் போயுள்ளன.
உண்மையில் தமிழரசுக் கட்சி, தமிழ்க்காங்கிரஸ் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி), தமிழர் விடுதலைக் கூட்டணி மூன்றும் எப்போதோ காலாவதியாகி விட்டவை. மூத்த – பாரம்பரியக் கட்சி என்ற அடையாளமும் கட்சிச் சின்னமும் கட்சிப் பதிவும் உள்ளது என்பதற்காக அவற்றை அரசியற் செயற்பாட்டியக்கங்களாக மக்கள் கருதவே முடியாது. அவற்றிடம் நிகழ்கால, எதிர்கால அரசியலுக்கான சிறு துரும்பு கூடக் கிடையாது. இந்தத் தேர்தலிலும் வெற்றியைப் பெற்றுள்ளன: மக்களுடைய ஆதரவைக் கொண்டுள்ளன என்று யாரும் சொன்னால், அதைப்போல முட்டாள்தனம் வேறில்லை. ஏனென்றால், இவற்றின் அரசியல் வரலாற்றில் இவை மக்களுக்கு அளித்த பெறுமானங்கள் என்ன? வெற்றிகள் என்ன?
அரசியற் செயற்பாட்டியக்கம் என்பது அது பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களுடைய சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு, ஜனநாயக அடிப்படைகளையும் உரிமைகளையும் பேணுவதோடு, அவற்றிலுள்ள இடர்ப்பாடுகள், நெருக்கடிகள், பின்னடைவுகளை வென்று முன்கொண்டு செல்கின்றதாக இருக்க வேண்டும். மக்களை வெற்றியாளர்களாக மாற்ற வேண்டும். இது நிகழ்ந்திருக்கிறதா? இதை இந்தக் கட்சிகளில் எதனிடம் காண முடியும்?
தற்போதைய சூழல் போருக்குப் பிந்தியது. முப்பது ஆண்டுக்கு மேலான ஆயுதப்போராட்டத்துக்குப் பிந்தியது. அந்த ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டதற்குப் பின்னானது. ஆகவே இதற்கமைய போருக்குப் பிந்திய அரசியலை (Post – Wat Politics) யே முன்னெடுத்திருக்க வேண்டும். அதனுடைய பின்னடைவுகளையும் பாதிப்புகளையும் மனதிற் கொண்டு, அவற்றை ஈடு செய்வதற்கான அரசியலையும் பொறிமுறையையும் முதற்கட்டமாக உருவாக்கியிருக்க வேண்டும். அடுத்த கட்டமாக, மீளெழுச்சிக்கான சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கட்டுமானத்தைக் குறித்துச் சிந்தித்திருக்க வேண்டும். மூன்றாம் கட்டமாக விடுதலை அரசியலை முன்னெடுப்பதற்கான தளத்தைப் பற்றிச் சிந்தித்திருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் இதை எந்தக் கட்சிகள் புரிந்துள்ளன? இந்த உண்மையை கொள்கையளவிலேனும் ஏற்றுக் கொண்டுள்ளனவா? கிடையாது.
இவை எதுவுமே இல்லாமல்தான் கடந்த 15 ஆண்டுகளாக இந்தக் கட்சிகள் அனைத்தும் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) வெற்றிப் பரப்பில் நின்றன. அதற்கான இடத்தை அளித்தது, சனங்கள் சிங்கள ஆட்சித்தரப்பின் மீது கொண்ட கோபமும் வெறுப்புமாகும். ஆனால், அந்தக் கோபமும் வெறுப்பும் குறையத் தொடங்கி விட்டது. அதிகாரத்தில் நேரடிக் கோபத்துக்குரியவர்களான ராஜபக்ஷக்களும் இல்லை என்பது இன்னொரு காரணம். அடுத்த காரணம், தமிழ் மக்களுடைய பொருளாதார நெருக்கடியும் முடிவுறாத அரசியற் சிக்கலுமாகும். அரசியலைப் பொறுத்தவரையில் இப்போதைக்கு தனிநாடோ, அதற்கு நிகரான தீர்வோ கிடையாது என்று பெரும்பாலான மக்கள் உணர்ந்துள்ளனர். ஆகவே இனியும் அந்த அரசியலை (தனிநாட்டுக்கான – தமிழீழத்துக்கான) முன்னெடுக்கும் சக்திகளை ஆதரிக்க அவர்கள் தயாரில்லை. அந்த இடத்தை நிரப்புவதற்காக அவர்கள் புதிய தெரிவுகளை நோக்கிச் செல்கின்றனர்.
இவ்வளவுக்குப் பின்னரும் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்றவற்றை விட ஆயுதப் போராட்டத்தின் வழியாக வந்த இயக்கங்களுக்கும் அவற்றின் இன்றைய தலைவர்களுக்கும் இப்போது கூட மதிப்புண்டு. தங்களைச் சமூக விடுதலைக்கும் இன விடுதலைக்குமாக அர்ப்பணிக்கத் துணிந்தவர்களாக இருந்தவர்கள். செயற்பாட்டு அரசியல் வழிமுறையினூடாக வளர்ந்தவர்கள். வரலாற்றின் துயரம் என்னவென்றால், பின்னாளில் இவர்களும் பிரமுகர் அரசியலில் வழுக்கி விழுந்ததேயாகும். அதற்குப் பின்னர் செயற்பாட்டு அரசியலை விட்டு வாய்ப்பேச்சு அரசியலில் பயணிக்கத் தொடங்கினர். தமிழரசுக் கட்சி, தமிழ்க்காங்கிரஸ் கட்சியைப்போல தாமும் ஆகினர். இறுதியில் தமிழரசியற் பரப்பில் மோதகமும் கொழுக்கட்டையும் என்றாகி விட்டனர்.
இப்போது மோதகமா கொழுக்கட்டையா என்றால், சனங்கள் குற்றங்கள் இழைக்காத, கசப்பான வரலாற்றைக் கொண்டிருக்காத, ரத்தக்கறை படியாத தரப்பை ஆதரிப்போம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். இது வாக்காளர்களில் ஒரு தரப்பினராக இருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டோரின் தெரிவாகும்.
40 வயதுக்கு உட்பட்டோரின் தெரிவு, தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரசும். இரண்டும் சேர்ந்தும் ஒரு குறிப்பிட்டளவு வீதத்தினரே இதில் சேர்த்தி. ஏனையோர் வெளிப்பரப்பிலேயே சிந்திக்கின்றனர். இது இப்போது மட்டும் திடீரென எழுந்த NPP அலை மட்டுமல்ல. 2010 ல் யாழ்ப்பாணத்தில் மட்டும் ஈ.பி.டி.பி 03 ஆசனங்களையும் சுதந்திரக் கட்சி (அங்கஜன்) ஒரு ஆசனத்தையும் பெறக் கூடியதாக இருந்தது. 2015 இல் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் ராமநாதன், விஜயகலா மகேஸ்வரன் என மூன்று ஆசனங்கள் வெளியே நின்றன. 2020 அங்கஜனே அதிகூடிய விருப்பு வாக்கைப் பெற்றிருந்தார். கிழக்கிலும் இதுதான் நிலைமை. அங்கே பிள்ளையான் அதிகூடிய விருப்பு வாக்குடன் தெரிவாகியிருந்தார்.
கூடவே வியாழேந்திரன் வெற்றியடைந்திருந்தார். இப்போது அந்த இடங்களையெல்லாம் NPP பெற்றிருக்கிறது. அவ்வளவுதான். இந்த வளர்ச்சி இனி அடுத்த கட்டத்துக்கு நகரும்போது பிராந்திய அரசியல் = தமிழ்த்தேசிய அரசியல் = எதிர்ப்பரசியல் முடிவுக்கு வந்து விடும். அதற்கு முன் சங்கும் அதைக் கொண்டிருக்கும் DTNA காணாமற் போய் விடக் கூடிய சூழலே உண்டு.
(குறிப்பு: இந்தப் போக்கைத் தீர்மானிப்பதில் சரி பங்கு சிங்களத் தரப்புக்கு உண்டு. அதனுடைய அரசியல் தீர்மானங்களும் நடவடிக்கைகளுமே தமிழ் அரசியலின் அடுத்த கட்டத்தை நிர்ணயிப்பதில் பாதிப்பங்கைச் செய்யும்).