நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அதிகளவு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அக்கட்சியில் போட்டியிட்டு இரண்டாவது தடவையாகவும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி
கேள்வி : நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் அதிகளவு வாக்குகளை தமிழரசு கட்சிக்கு வழங்கியிருக்கின்றார்கள். ஏனைய பல தமிழ் கட்சிகளை நிராகரித்திருக்கிறார்கள். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில் : நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தேசிய மக்கள் சக்தியை பின்னுக்குத் தள்ளி எமது தமிழரசி கட்சி வெற்றிவாகை சூடியிருக்கின்றது. அது இலங்கை தமிழரசு கட்சி மீது மட்டக்களப்பு மக்கள் கொண்டிருக்கின்ற அதிகமான விருப்பத்தை எடுத்துக்காட்டுகின்றது. குறிப்பாக சொல்லப்போனால் மிக அதிகளவான வாக்குகள் எமது கட்சிக்கு கிடைத்திருக்கின்றது. இருந்தபோதிலும் இதைவிட அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்ளக் கூடிய சூழ்நிலை காணப்பட்டிருந்தது. நாங்கள் இன்னமும் மும்முரமாகச் செயற்பட்டிருந்தால் இன்னொரு ஆசனத்தைப் பெற்றிருக்கலாம்.
ராஜபக் ஷக்களோடு இணைந்து செயற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும், தேர்தல் வெற்றிக்காக பிழையான குறுக்கு வழிகளை பயன்படுத்துகின்றவர்களையும், மட்டக்களப்பு மக்கள் இந்தத் தேர்தலில் நிராகரித்திருக்கின்றார்கள். யார் உண்மையாக தமிழ் தேசிய பாதையில் பயணிக்கின்றார்கள் என்பதை இந்த தேர்தல் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளது. எனவே நாங்கள் ஒவ்வொருவரும், சரியான தமிழ் தேசியப் பாதையில் பயணிக்கின்றவர்களாக இருந்தால், தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவோம். ராஜபக்ஷர்களின் ஆட்சிக் காலத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் குறுக்கு வழிகளில் ஊழல் மோசடி, இலஞ்சம், காணியபகரிப்பு, மண் அனுமதிப்பத்திரம் வழங்குதல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள். சிலர் இரகசியமான முறையில் தங்களது வருமானத்தை அதிகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டதால் அவர்களை மக்கள் நிராகரித்தார்கள்.
கேள்வி : நீங்கள் முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருந்தீர்கள். ஆனாலும் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து மீண்டும் இரண்டாவது முறையாக தற்போது பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றீர்கள். இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில் : நான் கடந்த 2015 பாராளுமன்றத் தேர்தலில் அதிகளவு வாக்குகளை பெற்று முதன்மை பாராளுமன்ற உறுப்பினராக மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருந்தேன். அக்காலத்தில் நேர்மையான அரசியல் செய்திருந்தேன். அப்போது பல கோடி ரூபா பணம் செலவழித்து அபிவிருத்திகளை செய்திருந்தேன். உரிமைக்கான குரல்களை தேவையான இடங்களில் நான் ஒலிக்கச் செய்திருந்தேன். அது மாத்திரமின்றி வீட்டுத் திட்டம், குடிநீர் வசதி, வீதியபிருத்தி ஆலயங்களின் அபிவிருத்தி, மைதானங்கள் புனரமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை நேர்மையாக செய்திருந்தேன்.
2020ஆம் ஆண்டு தேர்தலிலும் நான் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு அதிகமாக இருந்தது. ராஜபக் ஷ குடும்பங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஏற்ற விதத்தில் தேர்தல் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதற்காக சில அதிகாரிகளும் கடமையில் இருந்தார்கள். அதனால் 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தேன்.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில், ஊழல், மோசடி லஞ்சம் அல்லது தேர்தல் மோசடிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை. எனவே இந்த தேர்தலில் நான் சுலபமாக வெற்றி பெறக்கூடிய நிலைமை காணப்பட்டிருந்தது.
கேள்வி : வடக்கில் தமிழரசு கட்சியின் வாக்குகளில் சரிவு ஏற்பட்டதன் காரணமாக, வட மாகணத்தில் இருந்து உங்கள் கட்சி சார்ந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே இருக்கிறது. இதற்கு பிரதான காரணங்கள் என்னவாக அமையும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
பதில் : வடக்கில் தமிழரசு கட்சிக்கான வாக்கு சரிவடைந்ததாக கூறமுடியாது. வடக்கில் ஒரு அதிருப்தி ஏற்பட்டிருக்கின்றது.
அதாவது தமிழரசு கட்சியில் இணைக்கப்பட்ட வேட்பாளர்களில் முக்கியமான வேட்பாளர்கள் தவிர்க்கப்பட்டதனால் ஏற்பட்ட அதிருப்திதான் தமிழரசு கட்சியின் வாக்குச் சரிவுக்கான காரணமாக இருக்கின்றது. குறிப்பாக சொல்லப் போனால் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா, ரவிராஜின் மனைவி சசிகலா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மணிவண்ணன் போன்றவர்கள் வேட்பாளர் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக யாழ் மாவட்டத்திலிருந்து கணிசமான பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்திருக்க முடியும்.
குறைந்தது மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையாவது தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். அதற்கேற்ற விதத்தில் வாக்குகள் பெறக்கூடிய சூழ்நிலை இருந்திருக்கும்.
அதுபோன்று வன்னி மாவட்டத்தினை எடுத்துக் கொண்டாலும், வேட்பாளர் தெரிவின் போதிலும் சிவமோகன், போன்றவர்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றார்கள். அவ்வாறானவர்கள் உள்ளீர்க்கப்பட்டிருந்தால் அங்கும் கணிசமான வாக்குகள் கிடைக்கப்பெற்றிருக்கும். எனவே வேட்பாளர் தெரிவின்போது ஏற்பட்ட பொருத்தமின்மைதான் வடமாகணத்தின் வாக்குச் சரிவு ஏற்பட்டதற்குரிய காரணமாக அமையும் என்பதை தேர்தல் முடிவு சொல்லி இருக்கின்றது.
கேள்வி : நீங்கள் முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் எவ்வகையான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டீர்கள்? இன்னும் மாவட்டத்தில் எந்த விதமான அபிவிருத்திகள் தேங்கி கிடக்கின்றன? இதனை நீங்கள் எவ்வாறு செயற்படுத்த திட்டமிட்டுள்ளீர்கள்?
பதில் : என்னைப் பொறுத்தவரையில் 2015, 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராக இருந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பல்வேறுபட்ட அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன. குடிநீர்த் திட்டம், வீடமைப்புத் திட்டம், ஆலயப் புனரமைப்பு, கிராமிய பாலங்கள் அமைத்தல் போன்ற பலஅபிவிருத்தி திட்டங்களை செய்திருந்தேன்.
2020க்கு பின்னர் எமது வெற்றிகள் தடுக்கப்பட்டன. இதன் காரணமாக அதன் பின்னர் வந்தவர்கள் வீதிகளை அமைக்க சில திட்டங்களை மேற்கொண்டிருந்தாலும், வீட்டுத் திட்டங்களை அமைப்பதில் அவர்கள் எதனையும் சாதிக்கவில்லை. அரைகுறையாக காணப்பட்ட கொத்தணி வீடுகளைக்கூட அவர்கள் செய்து முடித்திருக்கவில்லை. வீதி அபிவிருத்திகளைச் செய்வதாக கூறிக்கொண்டு கமிஷன் பெறுவதில்தான் அக்கறை காட்டினார்கள்.
இதனால் அவர்கள் மாவட்டத்தை அபிவிருத்தி செய்யவில்லை. அக்காலப் பகுதியில் அபிவிருத்தியில் தேக்கம் ஏற்பட்டிருந்தது என்பது உண்மை. இப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சி சார்ந்த மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றோம்.
இந்நிலையில் புதிய அரசாங்கம் அபிவிருத்தி விடயத்தில் எவ்வாறு செயற்படப் போகின்றது என்பதை ஆராய வேண்டும். புதிய அரசாங்கத்துடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதன் பின்னர் அபிவிருத்தி விடயத்தில் நாங்கள் பங்கு கொள்வதற்கு வாய்ப்பளித்தால் நாங்கள் திட்டமிட்டு அந்த அபிவிருத்தி திட்டங்களை, ஊழல், மோசடி இலஞ்சம் இல்லாமல் செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
கேள்வி : நாட்டில் புதிதாக பொறுப்பேற்று இருக்கின்ற அரசாங்கம் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குரிய தீர்வினை முன் வைக்கும் என நீங்கள் கருதுகின்றீர்களா? அதற்கு அரசின் மீதான உங்களுடைய அழுத்தம் எவ்வாறாக அமையும்?
பதில் : புதிதாக ஆட்சி அமைத்திருக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பொறுத்தவரையில் அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று அரசாங்கத்தை அமைத்திருக்கின்றார்கள். ஜனாதிபதியும் அவர்கள் பக்கமாகதான் இருக்கின்றார். எனவே அவர்கள் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களில் எந்த அளவுக்கு கரிசனை செலுத்துவார்கள் என்பதை எதிர்வுகூற முடியாமல் இருக்கின்றது. ஏனெனில் ஜனாதிபதியின் சிம்மாசன உரையை பார்க்கின்ற போது அதில் அவர் சட்டவாட்சியைப் பற்றிக் கூறுகின்றார். அபிவிருத்தி பற்றிக் கூறுகின்றார். பழைய குற்ற செயல்களைப் பற்றி கூறுகின்றார். தேசிய இனப் பிரச்சினையை பற்றியோ அல்லது அதிகாரப் பகிர்வு பற்றியோ பேசவில்லை.
இருந்தாலும் நாங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையிலும் இலங்கை தமிழரசு கட்சியானது ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கடந்த நல்லாட்சி காலத்தில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தை அரசியல் அமைப்பு சாசன சபையாக மாற்றி இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு தீர்வு திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் அந்த தீர்வுத் திட்டத்தில் ஒற்றையாட்சி வலியுறுத்தப்பட்டிருக்கிறது. எதுவாக இருந்தாலும் இந்த அரசாங்கத்தோடு நாங்கள் தமிழரசுக் கட்சியானது பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை இருக்கின்றது. எங்களுடைய கடமையை நாங்கள் செய்வோம்.
நேர்கண்டவர்: வ.சக்திவேல்