திகாமடுல்ல தேர்தல் மாவட்ட பொதுத் தேர்தல் முடிவுகளை மீள எண்ணுமாறு,தேர்தல் ஆணைக்குழுவிடம் தேசிய காங்கிரஸ் நேற்று முன்தினம் (22) மகஜர் சமர்ப்பித்துள்ளது. தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இந்த மகஜரை நேற்று சமர்ப்பித்தனர்.
இந்த மகஜரில், திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகளின் வாக்குகளை எண்ணும் விடயம் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் காலங்களில் ,தேசிய காங்கிரஸின் செயற்பாடுகளைக் குறிவைத்து பின்னப்பட்ட சதிவலைகள்,நகர்வுகள் மற்றும் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் பற்றியும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியாயத்திற்காக எப்போதும் குரல் கொடுக்கும் தேசிய காங்கிரஸ், இது தொடர்பான விரிவான விளக்கங்களை மிக விரைவில் மக்கள் முன் சமர்ப்பித்து, அரசியல் போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் கட்சி அறிவித்துள்ளது.
தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் டாக்டர் ஏ. உதுமாலெப்பை, பொருளாளர் ஜே.எம். வஸீர், சட்டத்தரணி மர்சூம் மௌலானா ஆகியோரும் தேர்தல் ஆணையத்துக்குச் சென்றிருந்தனர்.