2
அவள் ஒரு மூதாட்டி….!
தொண்ணூறு கடந்துவிட்ட
தொன்மையின் சின்னம்!
கணவனை…ஒரே மகனை….
கண் முன்னே இழந்துவிட்ட
துயரத்தின் உறைவிடம்!
வாழும் சமூகத்தில்
வளரும் பிஞ்சுகளை
அறிவூட்டி வளப்படுத்த
ஆர்வம் கொண்ட ஆசான்!
ஆலயமும் நூலகமும்
அமைத்து காத்தவள் தான்!
முதுமையில் தனிமையில்
அந்திமப் பொழுதுகள்..!
மாதத்தில் ஓரிரு நாள்
போகின்ற வேளையிலே
பூரிக்கும் முதுமை முகம்!
தொலை பேசி அழைப்பும் தான்!
“எத்தனை பிள்ளைகள்?”
“என்ன செய்கிறார்கள்?”
நிமிடத்துக் கொருதடவை
நிறுத்தாமல் கேட்கின்றாள்!
வெறுக்காத பொறுமையுடன்
சொல்லுகிறேன் மீள..மீள..!
முதுமையின் வலிகளினை
முன்னரே புரிந்ததாலே..!