தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு, சகல அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அக்குரேகொட பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்பு அமைச்சராக (22) கடமைகளைப் பொறுப்பேற்ற போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு அங்கிருந்த ஊழியர்கள் மகத்தான வரவேற்பளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதானிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார். இங்கு உரையாற்றிய ஜனாதிபதி;
சிறந்த ஆட்சியை உருவாக்குவதற்காக புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் அனைவரினதும் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
அரசியலமைப்பிலும் சட்டங்களிலும் எத்தகைய சட்ட ஒழுங்குகள் இருந்தாலும், மக்களின் அதிகாரமே பலமாக உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் வழங்கப்பட்ட ஆணைகளின் கட்டமைப்பு மற்றும் வடிவங்களைப் பார்க்கும் போது மக்களின் எதிர்பார்ப்புகள் இவ்விடயத்தை பிரதிபலிக்கின்றன.
இந்த மாற்றமே,மக்களது எதிர்பார்ப்பு.தேர்தல் வரலாற்றில் அரச உத்தியோகத்தர்கள் அரசாங்கத்துக்கு வழங்கிய சுமார் 80 வீத ஆணை இதை, எடுத்துக்காட்டுகிறது.
எனவே, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதைத் தவிர, வேறு எந்த நோக்கமும் எமது அரசாங்கத்துக்கு இல்லை.இதனை நனவாக்க அரச ஊழியர்களின் ஆதரவு அவசியம்.
அனைவரும் எதிர்பார்க்கும் இந்தப் புதிய மாற்றத்தில், அரச சேவையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தாமல் முன்னேற முடியாது. வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு பாய்ச்சலை ஏற்படுத்தியது அரச சேவைதான்.
இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் நேற்று முன்தினம் (22) நிதி அமைச்சில் பதவியேற்றார்.
பதவியேற்றதன்ன் பின்னர் அமைச்சின் பணிக்குழாம் முன்னிலையில் உரையாற்றினார்.
மக்களின் ஆணை மற்றும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால், நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்களின் எதிர்பார்ப்பு பொய்யாகிவிடும்.எனவே,மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
கடந்த காலத்தில் பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் வழங்கிய பங்களிப்பையும் நன்றியுடன் ஜனாதிபதி பாராட்டினார். எதிர்கால இலக்குகளை அடைவதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
அரசியல் மாற்றங்களின் போது அரச ஊழியர்களின் முன்னைய செயற்பாடுகளை, கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்த வரலாறுகள் உண்டு.ஆனால் இனிவரும் காலங்களில் அரச ஊழியர்கள் ஆற்றப்போகும் பணியே அவர்களை மதிப்பீடு செய்யும் காரணியாக இருக்கும். அரச ஊழியர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் அநீதி அல்லது தவறுகள் இழைத்திருந்தால், அவர்களுக்காக முன்னிலையாவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
வருமானம் ஈட்டும் திணைக்களங்கள் தொடர்பில் மக்களிடம் நல்ல விம்பம் இல்லை.அந்த நிலைப்பாட்டினை மாற்றுவது கடினமானது.இருந்த போதிலும், தம்மைப் பற்றி ஏதேனும் மோசமான விம்பம் இருக்குமாயின், புதிய அரசாங்கத்தின் கீழ், அந்த விம்பங்களை மாற்றுவதற்கான ங்கள் சகல அதிகாரிகளுக்கும் கிடைத்துள்ளது.
ஊடகங்களுக்கு முன்பாக அதிகாரிகளை அச்சுறுத்துவது, அவர்களின் கருத்துக்களைப் புறக்கணிப்பது போன்ற செயற்பாடுகள் தமது அரசாங்கத்தின் கொள்கையல்ல. சுய ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உருவாக்குவதே புதிய மாற்றத்தின் அணுகுமுறையாக அமையும். இதற்காக ஒன்றுபடுமாறு அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
நிகழ்வில் பிரதி அமைச்சர்களான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.