வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமதி முறையை, தவறாக பயன்படுத்தி 800 கோடி ரூபாவுக்கும் அதிகமான மோசடி இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் புலம்பெயர்ந்தோரின் வெளிநாட்டுப் பணத்தை இலங்கைக்குக் கொண்டுவரும் நோக்குடன், கடந்த 2022 மே, 01 மற்றும் 2022.12.31ஆம் திகதிக்கு இடையில் நாட்டுக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களின்படி இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியன்று வெளியிடப்பட்டது. பின்னர், 2023 ஆம் ஆண்டு மே மாதம் 31 மற்றும் 2024 ஜனவரி 24 ஆம் திகதியிடப்பட்ட இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் அந்த உரிமங்களை வழங்குவதற்கான காலத்தை மேலும் நீட்டித்து வெளியிடப்பட்டன.
இதன்படி, 20,000 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை அனுப்பும் புலம்பெயர் தொழிலாளிக்கு 12 மில்லியன் ரூபா பெறுமதியான மின்சாரக் காரை இலங்கைக்கு அனுப்புவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.
ஆனால் சில உரிமங்களை தவறாக பயன்படுத்தி 100 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1019 வாகன அனுமதிப்பத்திரங்கள் அங்கீகரிக்கப் பட்டுள்ளதாகவும்,இதன் உரிமங்களின் பெறுமதி 46 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 120 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 119 வாகனங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதே நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 97 வாகனங்கள் தற்போது ஒரே இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர், கோசல விக்கிரமசிங்கவிடம் கேட்ட போது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதிப்பத்திரத்தை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம் பல கோடி ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதால், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.