சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய விரிவான கடன் வசதி திட்டத்தின் 03ஆவது மீளாய்வு தொடர்பில் அதன் பிரதிநிதிகளும் இலங்கை அதிகாரிகளும் பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் நேற்று (23) அறிவித்தது. சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் அதன் நிறைவேற்று சபையின் அனுமதியின் பின்னர் IMF கடனின் நான்காவது தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் மொத்த கடன் தொகை 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்குமென இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய பணியகத்தின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் IMF திட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீட்டிக்கப்பட்ட கடன் தொகை அங்கீகரிக்கப்பட்டது. இதில் முதல் தவணையாக 2023 மார்ச் மாதம் 333 மில்லியன் டொலர்களும், இரண்டாவது தவணை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்ட 337 மில்லியன் டொலர்களும் மூன்றாவது தவணையாக 2024 ஜூன் மாதம் 336 மில்லியன் டொலர்களைப் பெற்றுள்ளது.