இலங்கை, இந்திய மீனவர் விவகாரத்தை சுமுகமாக தீர்க்கவே சமகால அரசாங்கம் விரும்புகிறது. அதிகாரிகள் மட்டத்தில் நடத்தப்படும் பேச்சுக்களில் இணக்கப்பாட்டுக்கு வரமுடியுமென எதிர்பார்க்கிறோம். இதனால், ஆரம்பத்திலேயே அரசாங்கத்தின் உயர்மட்ட நேரடி தலையீடுகள் இந்த விடயத்தில் இருக்காதென கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இலங்கை கடல் வளத்தையும், மீன் வளத்தையும் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் உறுதியாக எடுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் தற்போது பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் பேச்சுக்களே சரியானதாக இருக்கும். அதனை சமகால அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. அந்தப் பேச்சுளின் ஊடாக எதிர்காலத்தில் சாதகமான முடிவுகள் எடுக்கப்படும்.
டிசம்பர் நடுப்பகுதியில் இடம்பெறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்திய பயணத்தில், இந்த விடயம் தொடர்பில் அதிக முக்கியம் கொடுக்கப்படாது. பொருளாதாரம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்தே முக்கியத்துவமளிக்கப்படும். ஆனால், இந்த விடயம் தொடர்பில் சாதாரண பேச்சுக்கள் நடைபெறும்.
எவ்வாறாயினும் எமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. எமக்குச் சொந்தமான கடற்பரப்பில் அத்துமீறும் செயல்பாட்டை நாம், எதிர்க்கிறோம்.
இந்திய அரசாங்கத்தின் சட்டங்களையும் மீறித்தான் இந்திய மீனவர்கள் எமது கடல்பரப்பில் மீன்பிடிக்கின்றனர்.
இந்தியாவின் சட்டம், தமிழ்நாட்டின் சட்டம் என்பன ரோலர் அல்லது இழுவை படகு மீன்பிடியை எதிர்க்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள பல மீனவச் சங்கங்களும் இழுவைப் படகு மீன்பிடியை எதிர்க்கின்றன. கட்டாயம் அதனை நிறுத்த வேண்டும்.
இந்தச் செயல்பாடு தொடர்ந்தால், இந்திய மீனவர்களுக்குக் கூட மீன்பிடிக்க முடியாத நிலைமை ஏற்படலாம்.
இந்நிலைமையை கடந்த கால அரசாங்கங்கள் எந்தளவு தெளிவுபடுத்தினார்கள் எனத் தெரியவில்லை. இலங்கையின் மீன்வளம் மற்றும் கடல் வளத்தை முழுமையாக பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும்.” என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்