யுத்தத்தின்போது உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவு கூருவதென்பது இலங்கையின் போர்வீரர்கள், போராட்ட அமைப்புகளின் உறுப்பினர்களை நினைவு கூர்தல், எனப் பொருள் கொள்ளப்படலாம்.
பல தசாப்தங்களாக நீடித்த இலங்கை உள்நாட்டுப் போர், அனைத்து தரப்பிலும், தியாகம் மற்றும் இழப்பு அதன் ஆறாத வடு ஆகியவற்றை விட்டுச்சென்றது. போரால் இறந்தவர்களை நினைவுகூருவது தவிர்க்க முடியாதது. அவ்வாறு அவர்களை நினைவுகூருவதற்கு இன மோதலின் சிக்கல்தன்மையைப் புரிந்துகொள்வதும் அவசியம்.
பல இலங்கையர்கள் தேசத்தின் இறையாண்மையைப் பாதுகாத்த இராணுவ வீரர்களை மாவீரர்களாக மதிக்கின்றார்கள். பிரிவினையிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக அவர்கள் மகத்தான தியாகங்களைச் செய்தார்கள், ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்காக தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்தார்கள்.
அவர்களின் துணிச்சலும் சேவையும் வருடாந்தம் தேசிய போர்வீரர் தினத்தின் போதும் இலங்கை போர் நினைவுச்சின்னம் போன்ற இடங்களில் நடைபெறும் விழாக்களிலும் கௌரவிக்கப்படுகின்றன.
இந்த வீரர்கள் அவர்களின் போர்க்கள வீரத்திற்காக மட்டுமல்ல, போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதில் அவர்களின் பங்கிற்காகவும் நினைவுகூரப்படுகிறார்கள். தமிழ் சமூகங்களில், மோதலில் இறந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் நினைவுகூரப்படுகிறார்கள்.
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் போராளிகளின் இறப்பை நினைவு கூரும் வகையில் நவம்பர் 27 அன்று மாவீரர் நாளை அனுஷ்டிக்கிறார்கள். இந்த நாள் விளக்கு ஏற்றி, கல்லறைகளுக்குச் சென்று, அஞ்சலி செய்கிறார்கள், இது அவர்களுக்கு ஒரு உணர்ச்சிகரமான நிகழ்வாகும்,
இந்த மோதலில் பல்வேறு பிற விடுதலை மற்றும் அரசியல் அமைப்புகளும் சம்பந்தப்பட்டிருந்தன, அதன் உறுப்பினர்களும் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழீழ விடுதலை அமைப்பு (TELO) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி போன்றவற்றின் மூலம் போராட்டத்தில் இணைந்து உயிர் நீத்தோரும் அவர்களது ஆதரவாளர்களால் நினைவுகூரப்படுகிறார்கள். ஜே.வி.பியினரும் தங்கள் இறந்த போராளிகளை நினைவு கூருகின்றனர்.
இலங்கையின் உள்நாட்டுப் போர் என்பது சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து சமூகங்களையும் பாதித்த ஒரு மனிதப் பேரவலமாகும். யுத்தத்தில் சிக்கிய பொதுமக்கள், அதிக விலை கொடுத்தனர். அனைத்து தரப்பினதும் துக்கத்தை அங்கீகரிப்பது நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு இன்றியமையாதது. இறந்தவர்களை நினைவுகூருவதற்கு-போர் வீரர்களாகளோ, தியாகிகளோ அல்லது சுதந்திரப் போராட்ட வீரர்களோ யாராக இருந்தாலும்- அரசியல் மற்றும் இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையொன்று தேவை.
இறந்தவர்களைக் கௌரவிக்கும் போது, யுத்ததுக்கு கொடுத்த விலை மற்றும் அமைதியின் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். போரின் போது செய்த தியாகங்கள், தீர்க்கப்படாத இன முரண்பாடுகளால் ஏற்பட்ட பேரழிவின் விளைவுகளையும், உரையாடல் மற்றும் புரிதலுக்கான அவசரத் தேவையையும் எடுத்துக்காட்டுகின்றன.
இறந்த அனைவரையும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நினைவுகூருவதன் மூலம், இலங்கை மக்கள் தமது காயங்களை ஆற்றுவதற்கும் அமைதியான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
ஆனால் இந்த நினைவு கூரல்கள் இறப்பினை மகிமைப்படுத்தி மேலும் பிரிவினையை கூர்மைப்படுத்தாத வகையிலும் அமைவது சிறந்தது.
எனவே யுத்தத்தில் உயிரிழந்த படை வீரர், போராளிகள், பொதுமக்கள் என அனைவரையும் ஒருங்கே நினைவு கூரத்தக்க வகையில் கூட்டுப் பொறுமுறையொன்று வகுக்கப்படுவதும் காலத்தின் தேவையாக உள்ளது.