அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் எவ்வாறாக இருக்குமென்பது குறித்து விவாதிக்கப்படுகின்றது.
நரேந்திர மோடியை தனது நண்பர் என்று பலமுறை குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அதேநேரத்தில் இந்தியாவின் கொள்கைகளையும் விமர்சித்து வருகிறார். இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியின் பெயரை ட்ரம்ப் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் டரம்ப் கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்காவை முதன்மைப்படுத்தியே (America First) கவனம் செலுத்தும் என நம்பப்படுகிறது. ட்ரம்ப் தனது முதல் பதவிக் காலத்தின்போது அமெரிக்க தொழில்துறைகளைப் பாதுகாக்கும் கொள்கையையே செயல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கடும் வரி விதித்தார்.
ட்ரம்ப் ‘அமெரிக்கா முதலில்’ என்ற முழக்கத்தை முன்வைத்திருக்கிறார். எனவே, அமெரிக்க பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது அவரின் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம். இந்தியாவும் அதன் வரம்புக்குள் வர வாய்ப்புள்ளது.
அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதை ட்ரம்ப் விரும்பவில்லை. ட்ரம்ப் தனது நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மட்டும் 20 சதவீதம் வரை மட்டுமே இந்தியா வரி விதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
ட்ரம்பின் வரி விதிகளை அமுல்படுத்தினால், 2028இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.1 சதவீதம் வரை குறையும் என்று சில பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே 200 பில்லியன் ெடாலர் மதிப்பிலான வர்த்தகம் உள்ளது. ட்ரம்ப் கட்டண வீதத்தை அதிகமாக உயர்த்தினால், இந்தியா பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இந்தியா- – அமெரிக்கா இடையே ஆயுத ஏற்றுமதி, கூட்டு இராணுவப் பயிற்சி, இந்தியாவுடன் தொழில்நுட்ப பரிமாற்றம் போன்றவற்றில் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியுமென அவதானிகள் கூறுகின்றனர்.
டொனால்ட் ட்ரம்ப் சீனாவின் தீவிர எதிர்ப்பாளராகக் கருதப்படுகிறார். அவரது முதல் பதவிக் காலத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன.
இது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும். அவரது முதல் பதவிக் காலத்தில், அவர் குவாடை (Quad) வலுப்படுத்துவதில் மிகவும் தீவிரம் காட்டினார். `குவாட்’ என்பது ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளிடக்கிய கூட்டமைப்பாகும்.
ட்ரம்ப் அதிபராக இருந்தபோது இந்தியாவுடன் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்தார். அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்ல உறவைப் பேணி, சீனாவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார் என்பது கவனிக்கத்தக்கது.
அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் அமெரிக்காவில் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகின்றனர், அவர்கள் எச்1பி விசாவில் அங்கு செல்கின்றனர்.
ட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு எதிர்காலத்தில் நிறைய பிரச்சினைகளை உருவாக்கலாம். இந்த விவகாரத்தில் ட்ரம்ப் மிகவும் தீவிரம் காட்டி வருகிறார். இது அமெரிக்க தேர்தலில் ஒரு முக்கியமான பிரச்சினையாகவும் பார்க்கப்பட்டது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அவர்களின் நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அமெரிக்க மக்களின் வேலைகளைப் பறித்து வருவதாக அவர் கூறியிருக்கிறார்.
அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் அமெரிக்காவில் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகின்றனர், அவர்கள் எச்1பி விசாவில் அங்கு செல்கின்றனர். ட்ரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் எச்1பி விசா விதிகளில் கடுமை காட்டினார். அதன் தாக்கம் இந்தியப் பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பிரதிபலித்தது.
இந்தக் கொள்கை தொடர்ந்தால், அமெரிக்காவில் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறையும். கடுமையான குடியேற்றக் கொள்கை, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களை அமெரிக்காவை தவிர மற்றைய நாடுகளில் முதலீடு செய்ய ஊக்குவிக்கக் கூடும்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை சீனாவின் செயல்பாடுகளை நிறுத்துவதற்கு ஆசியாவில் மிகவும் பொருத்தமான நட்பு நாடு இந்தியா. எனவே சீனாவுக்கு எதிராக இந்தியாவுடனான ட்ரம்பின் மூலோபாய ஒத்துழைப்பு வலுவடையும்.
பாகிஸ்தான் விவகாரத்தில் ட்ரம்பின் நிலைப்பாடு என்ன என்பது இந்தியாவுக்கு முக்கியமாகும். ஏனெனில் அதில் இந்தியாவின் நலன்களும் உள்ளன.
ஜூலை 2019 இல், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டார். அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இம்ரான் கானை வரவேற்றார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வது குறித்து ட்ரம்ப் பேசினார். எனவே காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அவர் விரும்புவது தெரிகிறது.
அதேவேளை ட்ரம்ப் பாகிஸ்தானை பொறுத்தவரை சிறந்த அதிபராக இருப்பார் என்று அரசியல் அவதானிகள் நம்புகின்றனர். ட்ரம்ப் புதிய போர் உருவாகும் சூழலை ஏற்படுத்தப் போவதில்லை. அவர் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க இராணுவ வீரர்களைத் திரும்ப அழைத்தார். ஒபாமாவோ அல்லது பைடனோ இதைச் செய்திருக்க முடியாது. கடந்த 25 ஆண்டுகளில் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வது குறித்துப் பேசிய முதல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் என்கிறார்கள் அவதானிகள்.
எஸ்.சாரங்கன்