பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 20 பேர் பலியானதுடன்,40 பேரளவில் காயமடைந்தனர். இச்சம்பவம் பாகிஸ்தானின் பலோஜிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவில் நடந்தது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியிலுள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் நேற்றுக் காலை சனிக்கிழமை பயங்கர குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டது. இந்த குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பின் போது அங்கிருந்து ரயில் ஒன்று கிளம்பியது.
சிறிது தாமதமாக சென்றிருந்தால், பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு, தற்கொலைப் படையினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். ரயில் நிலையத்தில் வழக்கமாக இருக்கும் கூட்டத்தைவிட நேற்று மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சமீப காலமாக, வடமேற்கில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களையும், தெற்கில் வளர்ந்து வரும் பிரிவினைவாத கிளர்ச்சியையும் பாகிஸ்தான் சந்தித்து வருகிறது.