ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட் தொடர் என்பது சம்பிரதாய கிரிக்கெட் அல்ல. அணிக்கு அறுவர், ஆறு ஓவர்கள், ஐந்து விக்கெட்டுகள் வீழ்ந்த பின்னரும் ஆறாவது துடுப்பாட்ட வீரருக்கு தனியே ஆட முடியும் என்று சற்று தெருவோர கிரிக்கெட் போல வைத்துக்கொள்ளலாம்.
கிரிக்கெட் பிரபலமான அனைத்து நாடுகளும் பங்கேற்கும் ஒரு தொடர் என்பதால் ஒரு மினி உலகக் கிண்ணம் என்று கூட சொல்லலாம். எனவே, இதிலே சம்பியன் கிண்ணத்தை வெல்வது என்பது கூட சவாலானது தான். அதற்கான மரியாதை இம்முறை சம்பியனான இலங்கைக்கு வழங்கப்பட வேண்டும்.
1992 ஆம் ஆண்டு ஆரம்பமான ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட் ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின்னரே இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் இலங்கை அணி 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சம்பியன் கிண்ணத்தை வென்றது.
17 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திக்க டி சேரம் அணி பிரையன் லாரா, ஷேன் வோர்ன், அனில் கும்ப்ளே போன்ற சர்வதேச நட்சத்திரங்களைக் கொண்ட உலக அணியை வீழ்த்தியே கிண்ணத்தை வென்றது. இம்முறையும் அப்படித் தான் பெரிதும் எதிர்பார்ப்பில்லாத குழாம் ஒன்றே இந்தத் தொடரில் களமிறங்கியது.
அணித் தலைவராகச் சென்ற வேகப்பந்து சகலதுறை வீரர் லஹிரு மதுஷங்கவுக்கு மாத்திரமே இலங்கை அணிக்காக ஆடிய சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற அனுபவம் உண்டு. அதுவும் அவர் 4 ஒருநாள் 3 T20 சர்வதேச போட்டிகளில் தான் ஆடி இருப்பதோடு அவர் ஒருநாள் சர்வதேச போட்டி ஒன்றில் ஆடி இப்போது ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டது.
மற்ற வீரர்களை பார்த்தால் இலங்கை அணிக்காக ஆடியதில்லை. ஆனால் உள்ளூர் போட்டிகளில் ஆடிய அனுபவசாலிகள். தனுக்க தாபரே அதிரடி ஆரம்ப வீரர் என்பதோடு தனஞ்சய லக்ஷான், தரிந்து ரத்னாயக்க, லஹிரு சமரகோன், நிமேஷ் விமுக்தி ஆகியோர் சகலதுறை ஆட்டக்காரர்களாக இருப்பதோடு சதுன் வீரக்கொடி அதிரடியாக ஆடக் கூடிய விக்கெட் காப்பாளர்.
மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் சாதாரணமான அணி தான். ஹொங்கொங் சிக்சஸை அதிகபட்சம் ஐந்து முறை வென்ற பாகிஸ்தான், இங்கிலாந்துடன் நடப்புச் சம்பியனாகவும் தென்னாபிரிக்கா வலுவான அணிகளுடனேயே வந்தன. இந்தியாவும் ரொபின் உத்தப்பா தலைமையில் வலுவான அணியுடனேயே வந்தது.
கடந்த நவம்பர் 1 தொடக்கம் 3 ஆம் திகதி வரை நடந்த போட்டியில் இலங்கை அணி இறுதிப் போட்டிவரை முன்னேறும் என்று பெரிதாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார். குறிப்பாக இந்திய மற்றும் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. என்றாலும் இந்தியா காலிறுதிக்குக் கூட முன்னேறவில்லை.
மறுபுறம் இலங்கை அணி ஒரு போட்டியில் கூட தோற்காது இறுதிப் போட்டி வரை முன்னேறி கடைசியில் கிண்ணத்தையும் வென்றது. இலங்கைக்கு ஹொங்கொங் சிக்சஸுக்கு பொருந்துகின்ற கச்சிதமான அணி ஒன்று கிடைத்ததே அது சாதிக்க உதவியது.
இதில் தரிந்து ரத்னாயக்க குறிப்பிடத்தக்கவர். தொடர் நாயகன் விருதையும் வென்றார். வலது கையால் ஓப் ஸ்பின் பந்துவீசும் அவர் இடது கையால் ஓர்தடொக்ஸ் முறையில் பந்து வீசுவார். அரையிறுதியில் பங்களாதேஷுக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் இறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். தொடரில் அதிகபட்சமாக 8 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
‘இது நன்றாக திட்டமிடப்பட்ட தொடராக இருந்தது. இந்திய–பாகிஸ்தான் போட்டித் தன்மையுடன், அவர்கள் இருவருமே இறுதிப் போட்டிக்கு வருவார்கள் என்று எல்லோரும் நம்பினார்கள். நம்மை யாரும் கணக்கில் கொள்ளவில்லை என்பதில் சந்தேகமில்லை. ஏன் பிரபல வீரர்களை இலங்கை அனுப்பவில்லை என்று பலரும் கேட்டார்கள். நாம் எண்ணிக்கையை நிரப்ப மாத்திரமே வந்திருப்பதாக அவர்கள் நம்பினார்கள். ஆனால் உள்ளூர் போட்டிகளில் தம்மை நிரூபித்த வீரர்களே வந்திருப்பது அவர்களுக்குத் தெரியாது’ என்று சம்பியன் கிண்ணத்தை வென்று இலங்கை திரும்பிய தரிந்து குறிப்பிட்டார்.
‘பரபலமான பெயர்கள் இல்லாத நிலையில், நம்மால் பிரத்தியேகமாக சாதிக்க முடியும் என்று நம்பினோம். அனைத்துப் போட்டிகளையும் பார்த்து அணிக்கு அறுவர் கிரிக்கெட் போட்டிகளை எப்படி ஆடுவது என்பது பற்றி தெரிந்துகொள்ளும்படி எமது தலைவர் அறிவுறுத்தினார்.
அதன்படி நாம் எமது மூலோபாயத்தை வகுத்தோம், ஒரு ஓவரில் 25 ஓட்டங்களை பெறுவதும் இரண்டு ஓவர்களில் 20 ஓட்டங்களை பெறுவதற்கும் இலக்கு நிர்ணயித்தோம். அதனை அடைந்தால் எட்ட முடியாத இலக்கை எம்மால் நிர்ணயிக்க முடியும் என்பது எமக்குத் தெரியும்.
எமது பந்துவீச்சே எமக்கு ஆயுதமாக இருந்தது. எமக்கு எதிராக 90 ஓட்டங்களை எட்டுவதற்குக் கூட அணிகள் தடுமாறியதை பார்க்க முடிந்தது. அரையிறுதியில் மாத்திரம் தான் நாம் 100க்கும் மேல் ஓட்டங்களை விட்டுக்கொடுத்தோம்’ என்றும் தரிந்து கூறினார்.
இலங்கை அணிக்காக ஆரம்ப வீரராக வந்த சதுன் வீரக்கொடி அதிகபட்சமாக 5 போட்டிகளில் மொத்தம் 180 ஓட்டங்களைப் பெற்றார். இது தொடரில் பெறப்பட்ட 4 ஆவது அதிகூடிய ஓட்டங்களாக இருந்தது. அணித் தலைவர் லஹிரு மதுஷங்க முக்கிய நேரங்களில் சிக்ஸர்களை விளாசி அணியின் ஓட்டங்களை தூக்கி விடுபவராக இருந்தார். அணியின் அனைத்து வீரர்களும் இப்படி தனது பங்களிப்பைச் செய்ததே கிண்ணத்தை வெல்ல இலங்கை அணியால் முடிந்ததற்குக் காரணம்.
இலங்கை கிரிக்கெட் ஏறு முகத்தில் இருக்கும்போது இந்த வெற்றி அணிக்கு ஏதோ ஒரு வகையில் உற்சாகத்தைத் தருவதாக இருக்கும்.