பேருவளை, சீனன்கோட்டை சன்ரைஸ் விளையாட்டு கழகத்தின் 50ஆவது வருட பூர்த்தி விழா (பொன் விழா) நிகழ்வுகள் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் விளையாட்டு மைதானத்தில் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.
1974ஆம் ஆண்டு சீனன்கோட்டை மண்ணில் நல்லுள்ளம் படைத்தவர்களினால் இவ்விளையாட்டுக் கழகம் ஆரம்பம் செய்யப்பட்டது.
இக்கழகம் இன்று உருவாகி, அது ஆலவிருட்சமாக வளர்ச்சிபெற்று சிறந்த விளையாட்டு வீரர்களை தான்சார்ந்த சமூகத்துக்கு பெற்றுக்கொடுத்துள்ளமை விசேடமாக குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும்.
தனது 50ஆவது வருட பூர்த்தி விழாவில் காலடியெடுத்து வைத்துள்ள சன்ரைஸ் விளையாட்டுக்கழகத்தின் அபரிமிதமான வளர்ச்சி ஊரை பிரமிக்கவைத்துள்ளது. இன்று ஒழுங்குசெய்துள்ள இந்த பொன்விழா நிகழ்வுகள் சீனன்கோட்டை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும். இதனால் சீனன்கோட்டை மண் பூரிப்படைகிறது. அதிலும் விசேடமாக சீனன்கோட்டை வரலாற்று நாயகன் மர்ஹும் எம்.ஐ.எம். நளீம் ஹாஜியாரினால் ஊரின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக இன்றைக்கு சுமார் 54 வருடங்களுக்கு முன்னர் அன்பளிப்பாக வழங்கப்பட்ட , நளீம் ஹாஜியாரின் பெயர் நாமம் சூட்டப்பட்ட “நளீம் ஹாஜியார் விளையாட்டு மைதானத்தில்” இந்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். இம்மைதானம் 1970ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07 ஆம் திகதி எமது நாட்டின் அன்றைய பிரதமர் டட்லி சேனாநாயக்கவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி விளையாட்டு கழகத்தின் பொன் விழாவை முன்னிட்டு இம்மைதானம் ஊர் மக்களின் நிதியுதவியில் நவீன முறையில் புனரமைப்பு செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சன்ரைஸ் விளையாட்டு கழகத்தின் தலைவர் யாகூத் நளீம் தலைமையில் நடைபெறவுள்ள இன்றைய பொன்விழா நிகழ்வில் பிரதம அதிதியாக ஜேர்மன் கிங்ஸின் கிரேஸ் மாநில முன்னாள் முதலமைச்சர் கர்ள் ஏகோபர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளமை இவ்விழாவை மேலும் மெருகூட்டுகிறது. மேலும் பல முக்கியஸ்தர்கள், ஊர் பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
விசேடமாக இன்று மாலை இடம்பெறவுள்ள பொன்விழா நிகழ்வில் விசேட அம்சமாக சன்ரைஸ் விளையாட்டுக் கழகமும் இலங்கையின் முன்னணி விளையாட்டு கழகங்களில் ஒன்றான கொழும்பு சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகமும் நட்புரீதியாக கண்காட்சி போட்டியில் பங்கேற்கவுள்ளன. இப்போட்டி இன்று மாலை 6.15 மணிக்கு மின்னொளி போட்டியாக நடைபெறவுள்ளது. பொன்விழாவை முன்னிட்டு முழு மைதானமும் விழாக்கோலம் பூண்டுள்ளதோடு மைதானத்தின் சுற்றுமதில்கள் முன்னணி வியாபார நிறுவனங்களின் வர்ண விளம்பரங்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளமை கண்ணுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இறுதியாக, ஒரு விளையாட்டு கழகத்தின் 50 வருட காலமென்பது மீட்டிப்பார்க்க வேண்டியதொன்றாகும். 50 வருட காலமாக ஒரு கழகம் அல்லது ஒரு அமைப்பு தொடர்ந்து உயிர் வாழ்வதென்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். அதிலும் எமது ஊரின் விளையாட்டுக்கழகமான ஸன்ரைஸ் விளையாட்டுக் கழகம் வெறும் விளையாட்டு கழகமாக இல்லாமல் சமூக சேவை அமைப்பாகவும் ஊருக்கு மாத்திரமன்றி ஊருக்கு வெளியிலும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டுள்ளதை இச்சந்தர்ப்பத்தில் நன்றியோடு ஞாபகப்படுத்துகிறேன், நினைவுகூர்கிறேன்.
மேலும், கழகத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்போடு சேவையாற்றிய, தற்போது சேவையாற்றிக்கொண்டிருக்கின்ற மற்றும் சேவையாற்றி இறையடியெய்திய விளையாட்டு கழக உறுப்பினர்களின் பணியை வல்ல இறைவன் அங்கீகரிக்க வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் நாம் இருகரமேந்தி பிரார்த்திப்பதோடு தொடர்ந்தும் இக்கழகம் தனது சேவைகளினூடாக சமூகத்துக்கு நல்ல பல பணிகளை முன்னெடுக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்வதாக கழகத்தின் செயலாளர் கிஸான் ஹாஷிம் வாரமஞ்சரிக்கு தெரிவித்தார்.
அஜ்வாத் பாஸி