மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்குத் தயாராகியுள்ளனர். அதாவது தங்களை யார் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு இன்னமும் நான்கு நாட்களே எஞ்சியுள்ளன.
இம்முறை பொதுத்தேர்தல் கடந்தகாலத் தேர்தல்கள் போன்று பரபரப்பான பிரசாரங்களைக் கொண்டிருக்காவிட்டாலும், வேட்பாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பைக் கொண்டுள்ளது.
225 உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் இந்தத் தேர்தலில் 8,821 பேர் மொத்தமாகப் போட்டியிடுகின்றனர். பொதுத்தேர்தலுக்காக 786 வேட்புமனுக்கள் விண்ணப்பிக்கப்பட்டு அவற்றில் 70 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தேசியப் பட்டியல்கள் உள்ளடங்கலாக 5464 பேரும், சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3354 பேரும் போட்டியிடுகின்றனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக 396 பேரும், வன்னி மாவட்டத்தில் 06 பேரைத் தேர்வு செய்வதற்காக 423 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கு 392 பேரும், திகாமடுல்லை மாவட்டத்தில் 07 பேரைத் தெரிவு செய்வதற்கு 640 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 04 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 217 பேரும் போட்டியிடுகின்றனர்.
அமைப்பு மாற்றமொன்று ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற விடயம் இம்முறை தேர்தலில் பிரதான கருப்பொருளாக அமைந்திருப்பதால், இதுவரை இருந்த அரசியல்வாதிகளை விடப் புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது இந்த வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்குப் பிரதான காரணமாகியுள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களைவிட இம்முறை பல புதியவர்கள் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் களமிறங்கியுள்ளனர். இதுவரை அரசியல் நடத்திவரும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இன்மையும் வேட்பாளர்கள் அதிகரிப்புக்குக் காரணம் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தி அனைவரையும் ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவருவதற்கான ஒரு சில முயற்சிகள் கடந்த காலங்களிலும் எடுக்கப்பட்டபோதும், இது கைகூடவில்லை. இதன் வெளிப்பாடு இம்முறை வடக்கில் உள்ள பல கட்சிகள் பல பல பிரிவுகளாகப் பிரிந்துள்ளன. விசேடமாக வேட்பாளர் தெரிவு விடயம் காரணமாகப் பழம்பெரும் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி இரு பிரதான பிரிவுகளாகியுள்ளது.
புலிகள் இயக்கத்தின் காலத்தில் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டணியை உருவாக்கியிருந்தனர். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததும் இந்தக் கூட்டமைப்பு படிப்படியாக உட்பூசல்களைச் சந்திக்கத் தொடங்கியிருந்ததும், பின்னைய காலங்களில் கூட்டணியில் இருந்தவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் பிரிந்து சென்றதும் அனைவரும் அறிந்த விடயம்.
தமிழரசுக் கட்சி தனிவழியில் செல்ல முயற்சிப்பதாகக் கூறி கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கொண்டன. அதுவும், தமிழரசுக் கட்சியின் ஒரு சில உறுப்பினர்களின் செயற்பாடுகளே கூட்டணி பிரிவதற்குக் காரணம் என்றும் பரவலான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
ஒருசில சிவில் அமைப்புக்கள் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்துப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் பொத்துவில் முதல் பொலிகண்டிவரை என்ற கட்சி சார்பற்ற நடைபயணமொன்றை ஆரம்பித்திருந்தன. இறுதியில் இந்த முயற்சியும் ஒரு தனிக்கட்சியால் உரிமை கொண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இவ்வாறான பின்னணியில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரைக் களமிறக்க வேண்டும் என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தி கட்சிகளை ஒன்றிணைக்க மேலும் சில சிவில் அமைப்புகள் பிரயத்தனம் எடுத்தன. இறுதியில் பொது வேட்பாளருக்குப் பயன்படுத்திய சங்கு சின்னத்தைப் பயன்படுத்தி ஒரு தரப்பு மாத்திரம் பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ளது. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர ஏனைய கட்சிகள் இணைந்து ஒன்றாகத் தேர்தலை சங்கு சின்னத்தில் சந்திக்கின்றன.
புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற புதிய கட்சியில் போட்டியிடுகின்றன. இதில் அங்கம் வகிக்கும் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் கடந்தமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரின் கீழ் போட்டியிட்டுப் பாராளுமன்றம் சென்றிருந்தனர். இம்முறை இவர்கள் தனியாக நிற்கின்றனர்.
மறுபக்கத்தில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இம்முறை தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், அவருடைய கட்சிசார்பில் மணிவண்ணன் தலைமையில் குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளது.
அதுபோல, தனித்தே இயங்குவோம் என்ற வழமையான பாணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடுகின்றது.
இவற்றுக்கும் அப்பால், தேசிய கட்சிகளான தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஈ.பி.டி.பி, தேசிய ஜனநாயக கூட்டணி போன்ற கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. வேட்பாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் அதிகமாகியிருப்பதால் வாக்குகள் பிரிந்தே செல்லவுள்ளன.
வடக்கில் காணப்படும் அதேநிலைமையே கிழக்கிலும் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் தமிழ்க் கட்சிகள் போன்று முஸ்லிம் கட்சிகள் மத்தியிலும் ஒற்றுமையின்மை மேலோங்கியுள்ளது. இதனால் கிழக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி போன்ற தேசிய கட்சிகளுக்கான ஆதரவுகளும் அதிகரிப்பதற்கு வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள் வழமையான அரசியல் கட்டமைப்புக்களுக்கு அப்பால் சென்று வாக்களிப்பதற்கான வாய்ப்புக்களும் இம்முறை அதிகம் தென்படுகின்றன.
தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் இதுவரை தமிழ்த் தேசியம் என்ற விடயத்தை மக்கள் மத்தியில் அதிகம் விற்பனை செய்து வந்தனர். இருந்தபோதும் இம்முறை தேர்தலில் இந்தத் தேசியத்தின் விற்பனை செல்லுபடியாகுமா என்றதொரு கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி முன்வைக்கும் ஊழல் ஒழிப்புக் கோஷம் வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியிலும் அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக மாறியிருப்பதால் கடந்த காலங்களைப் போன்று தமிழ்த் தேசியம் போன்றவை அரசியல் மேடைகளில் அதிகம் எடுபடுவதாகத் தெரியவில்லை.
இதனால்தான் வடக்கில், தமிழரசுக் கட்சியின் அரசியல்வாதியொருவரை மாத்திரம் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பிடித்துக்கொண்டு அரசியல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
குறித்த அரசியல்வாதியை தமிழினத் துரோகி எனக் காண்பிப்பதற்கு ஏனைய கட்சிகள் யாவும் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றன. சட்டப் புலமை, மொழி ஆளுமை போன்ற திறன்களைக் கொண்ட குறித்த அரசியல்வாதியை ஓரங்கட்டுவதை நோக்கமாகக் கொண்டே ஏனைய கட்சிகள் தமது பிரசாரங்களையும் முன்னெடுக்கின்றன.
எனவே, இம்முறை பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களைப் போன்று எதிர்பார்க்கும் நபர்கள் வெற்றியடையாமல் போவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதியவர்கள் உள்நுழைவதற்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன. அத்துடன், வாக்குகள் பிரிந்து செல்வதால் எந்தவொரு கட்சிக்கும் தமது பலத்தை நிரூபிப்பது பெரும்பாலும் சிக்கலாகவே இருக்கும் எனத் தெரிகின்றது.
பி.ஹர்ஷன்