Home » நாளை நள்ளிரவுடன் நிறைவுறும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரங்கள்!

நாளை நள்ளிரவுடன் நிறைவுறும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரங்கள்!

by Damith Pushpika
November 10, 2024 6:27 am 0 comment

இலங்கையின் பத்தாவது பாராளு மன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறுகின்றது. இதனை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தேர்தலை நடத்தத் தீர்மானித்த திகதி தேர்தல் சட்டவிதிகளுக்கமைய பிழையானது எனவும், நிர்வாக ரீதியில் அனுபவம் இல்லாவிட்டால் இவ்வாறான நிலைதான் ஏற்படும் எனவும் குறிப்பிட்டு, தேர்தல் திகதியான 14ஆம் திகதி தவறானது எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஒக்டோபர் பிற்பகுதியில், சிவில் சமூக செயற்பாட்டாளரும் ‘அபி ஸ்ரீலங்கா’ அமைப்பின் அழைப்பாளருமான எச்.எம். பிரியந்த ஹேரத் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 10 ஆவது உறுப்புரையின் பிரகாரம், தேர்தலுக்கன வேட்புமனுத் தாக்கல் காலம் ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரையில் இருந்ததாக மனுதாரர் ஹேரத் குறிப்பிட்டார்.

வேட்புமனுத் தாக்கல் முடிவடையும் நாளிலிருந்து அதாவது ஒக்டோபர் 11 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்தவுடன், ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15 ஆம் திகதியே முடிவடையும் என்றும் ஏழு வார காலம் நவம்பர் 29 ஆம் திகதி நிறைவடையும் என்றும் மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.

இந்த முடிவின் மூலம் மக்களின் இறையாண்மை மற்றும் அரசியலமைப்பு மீறப்பட்டிருப்பதால், தேர்தல் திகதி குறித்த முடிவை திருத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் கோரியிருந்தார்.

இருந்தபோதும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, தேர்தல்கள் சட்டத்திற்கு அமைவாகவும் சட்டத் தேவைகளுக்கு அமைவாகவும் ஜனாதிபதியினால் தேர்தலுக்கான திகதி சரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கெடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கமைய குறித்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமைக்கான அரசியல் காரணங்கள் உள்ளதா? அல்லது இல்லையா? என்பதற்கு அப்பால், அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியானதும் முதன் முதலில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலான தேர்தல் திகதி குறித்த வர்த்தமானியே தவறானது என்ற பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகியிருந்தன.

குறிப்பாக, கடந்த கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் பலவற்றை அவரே மீளப்பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததால், நிர்வாக ரீதியான அனுபவம் இன்மை இதற்குக் காரணம் என்பதுபோல ஜனாதிபதி அநுரவுக்கும் அவ்வாறான அனுபவம் இல்லையென்ற பிரசாரத்தை முன்னெடுப்பதே எதிர்க்கட்சியினரின் நோக்கமாக இருந்தது.

எனினும், தேர்தல்கள் ஆணைக்குழுவினதும், ஜனாதிபதியினதும் தீர்மானம் சரியானது என்பது உயர்நீதிமன்றத்தினால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கட்சிகளின் தீவிர பிரசாரம்:

தேர்தல் திகதி குறித்த சலசலப்பு ஓய்ந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்புக்கு அமைய நாளையதினம் அதாவது திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் அனைத்துத் தேர்தல் பிரசாரங்களும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

திங்கட்கிழமையிலிருந்து தேர்தல் தினம் வரையில் எந்தவித பிரசாரங்களையும் முன்னெடுக்க முடியாது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளன.

தேசிய மக்கள் கட்சியின் பிரதான அரசியல் கூட்டங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமைதாங்கி உரையாற்றி வருகின்றார். ‘பாராளுமன்றத்தைச் சுத்தம் செய்வோம், திசைகாட்டியால் பாராளுமன்றத்தை நிரப்புவோம்’ என்ற பிரதான தொனிப்பொருளிலேயே தேசிய மக்கள் கட்சியின் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணைக்கமைய தாம் முன்வைத்த உறுதிமொழிகளை நிறைவேற்றப் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை அவர்கள் கோரி வருகின்றனர்.

தேசிய மக்கள் சக்திக்குப் பிரதான போட்டியாக ஐக்கிய மக்கள் சக்தி காணப்படுகின்றது. அதன் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதித் தேர்தலில் 32 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், அந்த வாக்குகளின் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது அரசாங்கத்துக்கு பிரதான போட்டியாளராக அவருடைய கட்சியே இருக்கின்றது.

இருந்தபோதும், இந்த நிலைமை பொதுத்தேர்தலில் மாற்றமடைவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம் உள்ளன. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்திற்கும் உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட உள்முரண்பாடுகள் காரணமாக இம்முறை பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியினால் எதிர்பார்த்தளவு உத்வேத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

குறிப்பாக, அக்கட்சியின் முக்கியஸ்தர்களான ஹர்ஷ. டி சில்வா, தமிதா அபேரத்ன, அஜித் மானப்பெரும மற்றும் ஹிருணிகா போன்றவர்கள் தலைமைத்துவத்துடன் முரண்பட்டனர். வேட்பாளர்கள் தெரிவு அக்கட்சிக்குள் முரண்பாட்டு நிலையைத் தோற்றுவித்திருந்தது.

இதுபோன்ற முரண்பாடுகள் அரசியல் கட்சிகளுக்குள் ஏற்படுவது சாதாரணமான விடயமாக இருந்தாலும், கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிப்படைக் கட்டமைப்பையே கேள்விக்குள்ளாக்கினர். குறிப்பாக இரண்டு ஜனாதிபதித் தேர்தல் தோல்விகளுக்குப் பின்னர் மற்றவர்கள் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவ திறன்களை வினவியுள்ளனர். இது கட்சியின் ஒற்றுமையைப் பாதித்திருப்பதுடன், பிரதான எதிர்க்கட்சியாக வருவதற்கான வாய்ப்புக்களையும் சந்தேகத்திற்கு உட்படுத்தியுள்ளது.

தீவிரமாக களமாடும் முன்னாள் ஜனாதிபதி:

ஐக்கிய மக்கள் சக்திக்கு அப்பால் பிரசாரங்களில் தீவிரம் காட்டும் கட்சியாக கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி காணப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து ஏற்படுத்திய கூட்டணி கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் தோல்வியின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடப் போவதுமில்லை, தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் வரப்போவதுமில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் ருவான் விஜயவர்தன அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கமைய ரணில் விக்கிரமசிங்க தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், தன்னை நம்பிவந்தவர்களுக்குத் தலைமை தாங்கும் பணியை ஏற்றுக்கொண்ட அவர், சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் ஒரு சில வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆக்ரோஷமான நிலைப்பாட்டை பொதுத்தேர்தல் பிரசாரத்திலும் கடைப்பிடித்துள்ளார். தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், ரணில் விக்கிரமசிங்க, ‘கேஸ் சிலிண்டர்’ சின்னத்தைப் பயன்படுத்தும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரத்தில் இறங்கினார். அடுத்த பாராளுமன்றத்திற்கு ‘அனுபவம் வாய்ந்த’ அரசியல்வாதிகள் தேவை என்றும், தேசிய மக்கள் சக்தியின் பெரும்பாலானவர்கள் பாராளுமன்றத்துக்கான எந்த வெளிப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க பிரசார மேடைகளில் கடுமையான உரைகளை நிகழ்த்தினார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் கொண்டிருந்த பரிவர்த்தனைகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நேரடியான கருத்துக்களில், ஜனாதிபதியாக அவர் அங்கீகரித்த ஊதிய உயர்வை வழங்காத அரசாங்கத்தின் முடிவையும் ரணில் விக்கிரமசிங்க வினவினார்.

அரசாங்கத்தின் பதிலானது ‘நிதி ஒதுக்கப்படவில்லை’ என்று கூறுவதாக உள்ளது. ஆனால் அரசியலமைப்பு ஏற்பாடுகள் அமைச்சரவை முடிவை அமுல்படுத்த அனுமதிக்கின்றன என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.

குறிப்பாக, பிரதமர் ஹரிணி அமரசூரியவை குறிவைத்து, அரசியலமைப்பு பற்றி அவருக்கு ‘கற்பிக்க’ ரணில் முன்வந்தபோதும், அந்த வாய்ப்பை பிரதமர் பணிவுடன் நிராகரித்தார். தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கக் கூடிய நடுத்தர வருமானம் ஈட்டும் வாக்காளர்களை இலக்குவைத்து இவ்வாறான பிரசாரத்தை ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

இருந்தபோதும், புதிய ஜனநாய முன்னணியானது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவின் அதிருப்தியாளர்களைக் கொண்ட கூட்டணி என்பதால் இதற்கு அடிமட்டத்தில் பலமான ஆதரவொன்றைக் காணக் கூடியதாகவில்லை. அது மாத்திரமன்றி, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களைவிட பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர்களே அதிகம் இதில் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கடந்த காலத்தில் காணப்படும் அடிப்படை வாக்குகளுக்கமைய புதிய ஜனநாயக கூட்டணிக்கு சில ஆசனங்களை வெல்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதுடன், எதிர்காலத்தில் இவர்கள் ஒரு கட்சியாகச் செயற்படுவார்களா? அல்லது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவார்களா? அல்லது வேறு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றவர்களா? என்பது கேள்விக்குறியே.

யார் பிரதான எதிர்க்கட்சி?

தற்போதைய களநிலவரத்தின்படி அதிக ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதால், பிரதான எதிர்க்கட்சி யார்? என்பது குறித்த கேள்வியே காணப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்திக்குப் போட்டியாக திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரம் கட்சியும் நிற்கின்றது. பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இதில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

உதய கம்மன்பில, திலும் அமுனுகம, பேராசிரியர் சன்ன ஜயசுமன, ரொஷான் ரணசிங்க போன்ற கடந்த காலத்தில் பிரபலமாக இருந்த அரசியல்வாதிகள் இதில் போட்டியிடுவதால் பலமான எதிர்க்கட்சியொன்றை உருவாக்குவதற்கான முயற்சியை இவர்கள் முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையும் கேள்விக்குறியதாக விடும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division