ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு ஆலோசகரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளருமான சாகல ரத்நாயக்க வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்.
கேள்வி: எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதான எதிர்க் கட்சியாக வருவதா உங்கள் இலக்கு?
பதில்: அவ்வாறில்லை. எங்கள் கட்சி பலமான கட்சி. அந்தக் கட்சியில் போட்டியிடுபவர்கள் அனைவரும் மிகுந்த அனுபவம் உள்ளவர்கள். அந்த வகையில் பாராளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்றுவதே எமது இலக்கு.
கேள்வி: தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவதற்கான திட்டம் உண்டா?
பதில்: முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இப்போது பிரதமராவதற்கான கனவில் இருப்பதுடன் அதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். நாம் கட்சியாக இணையப் போகின்றோமா அல்லது நபர்களாக இணையப் போகின்றோமா என்பது தொடர்பாக ஆலோசிக்க வேண்டியுள்ளது. அது தொடர்பாக இப்போதைக்கு எதுவும் கூறமுடியாது.
கேள்வி: பொதுத் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், இதுவரை தேர்தலுக்கான எத்தகைய பரபரப்பும் இல்லாத நிலையே உங்கள் கட்சியில் காணப்படுகின்றது. தேர்தலில் தோற்றுவிடுவோம் என நினைக்கிறீர்களா?
பதில்: இது பருவ மழைக்காலம். தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அதனையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அதனால் முடிந்தளவு மண்டபங்களுக்குள் அல்லது சிறு ‘பொகட் மீட்டிங்’ களிலேயே அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றோம். மக்களை திரட்ட முடியாமைக்காக நாம் அவ்வாறு செய்யவில்லை. தற்போதைய தேர்தல் சட்டத்தின் படி தேர்தல் செலவுகளையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு சிறு கூட்டங்களை நடத்தும்போது பாரிய செலவுகள் ஏற்பட வாய்ப்பில்லை. இத்தகைய ஏற்பாடுகளில் மக்களுடன் நெருக்கமாக கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகள் எமக்கு கிடைக்கின்றன என்பதும் உண்மை. சில தினங்களில் 18 கூட்டங்களையும் நடத்தியுள்ளோம். அவ்வாறு நடத்தும்போது பெருமளவிலான மக்களை சந்திக்க முடிகிறது.
சில கட்சிகள் பஸ் வண்டிகளில் மக்களை அழைத்து வருகின்றன. ஒரு கூட்டத்துக்கு செல்கின்றவர்களே அனைத்து கூட்டங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அந்த வகையில் அவ்வாறான பொய் வேலையை நாம் செய்வதில்லை. மக்களுடன் நேர்மையாக நெருக்கமாக கலந்துரையாடும் வாய்ப்பு எமக்கு இத்தகைய ஏற்பாடுகள் மூலம் கிடைக்கின்றன. அரசாங்கம் இன்னும் கூட எதிர்க்கட்சியின் அரசியல் பற்றியே குரல் எழுப்பி வருகிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
கேள்வி: முக்கியமானவர்கள், பிரபலமானவர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் விலகியுள்ள நிலையில், உங்கள் கட்சிக்கு எதிர்பார்க்கும் வாக்குகள் கிடைக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்களா?
பதில்: அவ்வாறு விலகிச் சென்றுள்ள அனைவருமே எமது தேர்தல் செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். அவர்கள் தேர்தலிலிருந்து விலகி இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிலருக்கு நிதி தொடர்பான பிரச்சினையும் இருந்தது. அதற்குக் காரணம் ஒரு தேர்தலை எதிர்கொண்டு மிகக் குறுகிய காலத்திலேயே இன்னொரு தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகும்.
கேள்வி: தற்போதைய அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடிச்சுவட்டை பின்பற்றியே வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக கூறப்படுகிறதே… அது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
பதில்: புதிய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் தொடர்பில் இன்னும் எங்களுக்கு தெளிவு பிறக்கவில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. முதலில் நாம் பின்பற்றிய சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் சரியில்லை என தெரிவித்தார்கள். எனினும் இப்போது பார்க்கும் போது நாங்கள் பின்பற்றிய வேலைத் திட்டத்தையே அவர்களும் பின்பற்றி செயற்படுகின்றனர். எனினும் அவர்களது பயணம் தெளிவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட தவணை கிடைப்பதற்கான திகதி தொடர்பாகவும் அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த தாமதங்கள் எமது நாட்டுக்கு பாதிப்பாகவே அமையும். அதனால் அவர்களது வேலைத்திட்டம் தொடர்பாக எமக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என நாம் கேட்கின்றோம். எனினும் இதுவரை அவர்கள் இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தவில்லை.
கேள்வி: புதிய அரசாங்கம் தமது வேலைத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்களிடம் கோரி நிற்கின்றது. எதிர்க்கட்சியும் தேவையற்ற விடயங்களை கூறி வருகிறது. இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: எந்தக் கட்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தையோ அல்லது மட்டுப்படுத்தப்படாத அதிகாரத்தையோ வழங்குவது நல்லதல்ல என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவே கூறியிருந்தார். எரிபொருள் விலைகள், மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை குறைப்பதாக தெரிவித்திருந்தார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சுமார் 50 நாட்கள் ஆகும் நிலையில், அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது தெளிவில்லாமலேயே உள்ளது. நாம் கேட்பது நாட்டுக்கு முக்கியமானவற்றை மக்கள் புரிந்து கொள்வார்கள். எமது அரசாங்க காலத்தில் அவர்கள் தொடர்ந்தும் எமது காலை வாரினர். கல்வித்துறையை சீரழித்தனர். அரசாங்க ஊழியர்களை வீதிக்கு இழுத்தனர். 5 மாதங்கள் தொடர்ச்சியாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பாடசாலை ஆசிரியர்களும் வீதியில் நின்றார்கள்.
கேள்வி: அநுர குமார திசாநாயக்கவினால் முடியாவிட்டால் மீண்டும் நாட்டைப் பொறுப்பேற்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து வருகின்றார். எனினும் அவர் தேசியப் பட்டியலில் கூட இடம்பெறவில்லையே?
பதில்: அவ்வாறான நிலை வந்தால் அதற்கு நாம் முகங்கொடுப்போம். எமது வேலைத் திட்டத்தை நாம் முன் வைத்துள்ளோம். பொருளாதார மறுசீரமைப்பைப் போன்றே அரசாங்க மறுசீரமைப்பும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்காக நாம் பல யோசனைகளை முன் வைத்துள்ளோம். பொருளாதார பரிவர்த்தனை சட்டம் மூலம் நாம் அதற்கான நம்பிக்கையை வழங்கியுள்ளோம். அந்த வேலைத் திட்டத்தை பின்பற்றியே நாம் முன்னோக்கிச் செல்வோம்.
அந்தத் திட்டத்தின் அடிப்படையிலேயே நாம் கடன் மறுசீரமைப்பு திட்டத்தையும் முன்னெடுத்தோம். அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை எதிர்பார்த்த வகையில் முன்னேற்ற முடியாது. நாட்டை அபிவிருத்தி செய்வது கடன்களை மீள செலுத்துவது போன்றவற்றையும் மேற்கொள்ள முடியாமற் போகும்.
கடந்த காலங்களில் நாட்டு மக்கள் பட்ட பெரும் கஷ்டங்களை மறந்து விட முடியாது. எரிபொருள், சமையல் எரிவாயு, பால்மாவும் இல்லாமல் போனது மருந்துகள் கூட கிடைக்காமல் போனது. அந்த நிலை மீண்டும் உருவாக இடமளிப்பதா? முன்னரை விட நாடு மேலும் மோசமானதாக மாறும்.
கேள்வி: இம்முறை நீங்கள் கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் களம் இறங்கியுள்ளீர்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் கொழும்பு மாவட்டம் தேசிய மக்கள் சக்தியிடம் சென்றது. அதனை மீண்டும் பாதுகாத்துக் கொள்வதற்காகவா நீங்கள் கொழும்பை தேர்ந்தெடுத்தீர்கள்?
பதில்: நாம் ஜனாதிபதி தேர்தலிலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதேசம் என்பதால் கொழும்பையே இலக்காகக்கொண்டு செயற்பட்டோம். அதுபோலவே எதிர்காலத்திலும் செயற்படுவோம்.
கேள்வி: எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எத்தனை ஆசனங்களை உங்கள் கட்சியால் பெற முடியும் என நினைகின்றீர்கள்?
பதில்: எத்தனை ஆசனங்கள் என்றில்லை. நாம் இம்முறை பாராளுமன்றத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவதே இலக்கு. ஏனைய பல கட்சிகளுக்கும் அந்த எதிர்பார்ப்பு உண்டு. நாம் அவ்வாறு பாராளுமன்ற பலத்தைப் பெற்று எமது வேலைத் திட்டத்தை முன்வைப்போம்.
நேர்காணல்: லோரன்ஸ் செல்வநாயகம் படம்: துஷ்மந்த மாயாதுன்ன