களனிப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதியான சிரேஷ்ட பேராசிரியர் சந்தன அபேரத்ன இம்முறை பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் குழுவின் தலைவராக உள்ளார். சிரேஷ்டபேராசிரியர் சந்தன அபேரத்ன, களனிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று கற்கை பிரிவில் உதவி விரிவுரையாளராகச் சேர்ந்து, அக்கற்கைப் பிரிவின் துறைத் தலைவராகப் பணியாற்றி, சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாக 9 வருடங்கள் கடமையாற்றிய பின்னர், களனி பல்கலைக்கழகத்தின் பதில் பீடாதிபதி போன்ற பதவிகளை வகித்த நிர்வாக அனுபவங்களைக் கொண்ட ஒருவராவார்.
இவ்வருட பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் குழுவில் போட்டியிடும் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன அபேரத்னவுடன் தினகரன் வாரமஞ்சரி மேற்கொண்ட நேர்காணலை இங்கு தருகின்றோம்.
அரசாங்கத்தில் நிறைவேற்றுப் பதவியை வகிக்கும் ஒருவர் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின் அந்தப் பதவியை இராஜினாமா செய்யவேண்டும். பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவியைத் தியாகம் செய்து இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான உங்கள் இலக்குகள் என்ன?
பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராக நாட்டில் கல்வியாளர்களை உருவாக்குவதற்காகப் பங்களிப்பை வழங்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதேபோன்று நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதும், ஊழலற்ற ஆட்சியை உருவாக்குவதும் எமது பொறுப்பாகும். அதற்காக எனது பங்களிப்பை வழங்குவதற்காக எதையும் தியாகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். அது நமது பொறுப்பாகும். தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எப்போதும் அத்தகைய தியாகங்களைச் செய்வதற்கு தயாராகவே இருக்கிறார்கள்.
புத்தளம் மாவட்டம் பல்லின, பல மதங்களைக் கொண்ட பிரதேசமாகும். நீங்கள் பாராளுமன்றத்திற்குச் செல்வதற்கு ஏன் இப்படி ஒரு பகுதியை தேர்ந்தெடுத்தீர்கள்?
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு அனைத்துப் பிரதேசங்களும் முக்கியமானவையாகும். அப்பகுதிகளில் காணப்படும் இன அமைப்பு அல்லது மத அமைப்பு முறைகளோடு இணைந்து கொள்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே, எமக்கு ஒதுக்கப்பட்டுள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதிலேயே நாம் கவனம் செலுத்துவோம். மறுபுறம் புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆனமடுவ தேர்தல் தொகுதி எனது பிறப்பிடமாகும். நான் வளர்ந்து ஆளானது ஆனமடுவையிலாகும். எனவே, நான் பிறந்து வளர்ந்த பிரதேசத்திற்கு புதிய அபிவிருத்தியைக் கட்டியெழுப்புவதற்கு முன்னின்று செயற்படுவது எனது முதன்மையான பொறுப்பாகும்.
எதிர்கால அபிவிருத்தி திட்டங்களில் புத்தளம் மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் போது எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?
புத்தளம், நாட்டு மக்களுக்கு அரிசியை வழங்கிய நாட்டிற்கு வருமானத்தை ஈட்டிக் கொடுத்த பல வளங்களைக் கொண்ட பிரதேசமாகும். கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் உள்ளுர் விவசாய நடவடிக்கைகள் மிக உயர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. புத்தளம் மக்களுக்கு உப்பை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றது. சிலாபம் முத்து உலகம் முழுவதும் பிரபலமாகியிருந்தது. நாட்டுக்கு வருமானத்தை ஈட்டித் தந்தது. சிலாபத்தில் முத்து அகழ்வின்போது அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் திரண்டதாக இந்நாட்டில் ஆளுநராக கடமையாற்றிய லியோனார்ட் வுல்ப் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் தென்னை உள்ளிட்ட பெருந்தோட்டக் கைத்தொழில் வளர்ச்சியடைந்தது. நாட்டுக்கு சீமெந்தை உற்பத்தி செய்து வழங்கியது. இன்றும் புத்தளம் கரையோரப் பகுதிகளில் இருந்து நாட்டுக்கு மீன் வழங்கப்படுகின்றது. புத்தளத்தில் எவ்வளவு வளங்கள் உள்ளன என்பது இவற்றிலிருந்து தெளிவாகின்றது.
இந்தப் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கக் கூடிய உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் யாவை?
புத்தளம் சுற்றுலாத்துறையில் ஈர்ப்பைப் பெற்ற தனித்துவமான பிரதேசமாகும். அனைத்துப் பிரதேசங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்தை ஈர்க்கக்கூடிய பல சுவாரஸ்யமான விடயங்கள் உள்ளன. இயற்கைச் சூழல், விலங்குகள், கடற்கரை, மதஸ்தானங்கள் ஆகியவை சுற்றுலா வாய்ப்புகளை வழங்குகின்றன. இலங்கையின் கவர்ச்சிகரமான சுற்றுலாப் பிரதேசமாக புத்தளத்தை அபிவிருத்தி செய்து அதன் பெறுபேறுகளை பெரும்பான்மையான மக்களுக்கு சாத்தியமான வகையில் அபிவிருத்தி செய்வதற்கும் எதிர்பார்க்கின்றோம்.
புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை விளக்க முடியுமா?
இம்மாவட்டத்தின் குறிப்பிடக்கூடிய பிரதேசங்களில் காட்டு யானை பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மிகக்குறுகிய காலத்திற்குள் அறிவியல் அடிப்படையில் அதற்கான தீர்வுகளை வழங்க நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம். முழு நாட்டிற்கும் பொருந்தக் கூடிய வகையில் இதற்கான தீர்வினை எவ்வாறு வழங்க முடியும் என்பது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விஞ்ஞாபனத்திற்கு அமைவாக பிரதேச மக்களுக்கு கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர் மற்றும் வீதிகள் போன்றவற்றில் சிறந்த சூழ்நிலையை உருவாக்க நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்.
புத்தளம் மாவட்டத்திற்கு புதிய யுகத்தை உருவாக்கும் வகையில் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான மட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு நீங்கள் நடவடிக்கை மேற்கொள்வீர்களா?
எமது நாட்டின் தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் புத்தளம், லுணுவில, பாண்டிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ளது. கல்பிட்டி நாரா நிறுவனம் நாட்டின் கடற்றொழில் நடவடிக்கைகள் தொடர்பாக பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றது. இவ்வாறான நிறுவனங்களை முன்னேற்றுவதற்கும், ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளை நாட்டின் அபிவிருத்திக்கும் மக்களின் நலனுக்காகவும் பயன்படுத்திக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம். அதேபோன்று, சீமெந்து மற்றும் உப்பு போன்ற இப்பிரதேசத்திற்கே உரிய உற்பத்திச் செயற்பாடுகளை, சுற்றாடலைப் பாதுகாக்கும் வகையிலும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையிலும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
அதேபோன்று, முத்து தொழிலை மீண்டும் மேம்படுத்த முடியுமா? என்பது குறித்தும் கவனத்தைச் செலுத்துவோம். மீன்பிடித் தொழிலுக்காக மீனவ சமூகத்திற்கு வசதியான வகையில் நவீன விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதோடு, மீனவ சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், உயிர்ப் பாதுகாப்பை மிக உயர்ந்த மட்டத்தில் உறுதிப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்வோம்.
ஜனாதிபதித் தேர்தலில் உங்கள் கட்சி வெற்றி பெறுவதற்கு இளைஞர் போராட்டமும் ஒரு காரணம். இளைஞர்கள் மற்றும் பெண்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுத்து வருகிறீர்கள்?
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அதிகளவான இளைஞர்களையும், அதிகளவான பெண்கள் குழு, அதிகளவான புத்திஜீவிகள், அதிகளவான தொழில்துறை வல்லுநர்கள் மாத்திரமின்றி அதிகளவான தொழிற்சங்க தலைவர்களையும் களமிறக்கி இருப்பது தேசிய மக்கள் சக்தியாகும். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் இந்த நிலைமையை மேலும் விரிவுபடுத்தி இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை மேற்கொள்ளும். அதேபோன்று இளைஞர்கள் தங்கள் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும், அவர்களின் தொழில்நுட்ப, மொழி மற்றும் தொழில்முறை அறிவை விரிவுபடுத்துவதற்கும் அதிக வாய்ப்புகளை வழங்க நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். பிரதேசத்தினுள் நாம் ஏற்படுத்தும் விவசாயம், கைத்தொழில் மற்றும் மீன்பிடித் துறை அபிவிருத்தி நடவடிக்கைகளில் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.
எம். எஸ். முஸப்பிர்