தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊவா மாகாண அமைப்பாளரும் மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர் மற்றும் ஊவா மாகாண அமைப்பாளரும் பொதுத்தேர்தல் வேட்பாளருமான பகி. பாலச்சந்திரனுடன் ஒரு நேர்காணல்:
கேள்வி : உங்கள் பூர்வீகம், ஆரம்பகால அரசியல் பற்றி கூறுவீர்களா?
பதில் : நான் பதுளை மாவட்டத்தில் கொஸ்லந்தை என்னும் பிரதேசத்தினை பூர்வீகமாகக் கொண்டவன். தொடர்ச்சியாக நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை வழியாக பதுளை மாவட்டத்தில் வசித்து வருகின்றேன்.
திடீர் அரசியல் பிரவேசம் என சிலர் நினைத்தாலும் பொதுவாக அரசியல் பிரவேசம் என்பதை திடீரென்று ஏற்படக்கூடிய ஒன்றாக நான் கருதவில்லை. ஒரு சமூக தளத்தில் நாம் செயப்படுகின்ற போது அதன் இறுதி இலக்கினை எட்டிப்பிடிப்பதில் பாரிய சவால்களுக்கும் தடங்கல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
அந்த வகையில், எமது சமூகம் முகம் கொடுக்கின்ற தடங்கல்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் நாம் இல்லாதொழிக்க வேண்டியது அவசியம்.
எமது மக்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள், இன்னல்களை இல்லாதொழிப்பதற்கு எமக்கு பாரிய பலம் பொருந்திய ஒரு கட்டமைப்பு தேவைப்படுகின்றது. அவ்வாறான பலத்துடன் பொருந்திய சமூக கட்டமைப்பின் மாற்றத்திற்கான ஒரு பயணமாகவே நான் இந்த அரசியல் பிரவேசித்தினை பார்க்கின்றேன்.
கேள்வி: அரசியலுக்கு முன்னரான உங்கள் கடந்த கால சமூக சேவைகள் தொடர்பாக கூறுவீர்களா?
பதில் : சமூக செயற்பாட்டாளர் என்ற ரீதியில் பல்வேறு தளங்களில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். முக்கியமாக அரசியல் துறை, கல்வித் துறை அல்லது விளையாட்டுத் துறையாக இருக்கட்டும் பல தளங்களிலே பாரிய மக்கள் சேவையினை முன்னெடுத்திருக்கின்றேன்.
குறிப்பாக, விளையாட்டுத் துறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பல சங்கங்களின் ஊடாகவும் விளையாட்டு கழகங்களின் ஊடாகவும் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு என்னாலான சகல உதவிகளையும் செய்திருக்கின்றேன்.
அதேபோல இலக்கியத் தளம், பல்வேறு விதமான இலக்கிய செயற்பாட்டாளர்களுடனும் நான் கடந்த காலங்களில் இணைந்து செயற்பட்டுள்ளேன். எமது சமூகத்தில் காணப்படுகின்ற இலக்கியவாதிகளின் செயற்பாடுகளுக்கும் அவர்களின் இலக்குகள் அடைவதற்கும் என்னால் முடிந்த அளவிலான பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான உதவிகளை முன்னெடுத்து ள்ளேன். தொடர்ந்தும் அதனை செய்வேன்.
முக்கியமாக கல்வித்துறையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக தரம் 5 புலமைப் பரிசில் மாதிரி வினாத்தாள் வழங்கி வைத்தல் மற்றும் செயலமர்வுகளினையும் இலவசமாக முன்னெடுத்து வந்துள்ளேன். அது மட்டுமல்லாது கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் வழங்கி வைப்பதும் அதற்கான செயலமர்வுகளை இலவசமாக நடத்துவதும் எனது கல்வித் துறையில் காணப்படுகின்ற ஒரு பாரிய செயற்பாடாக உள்ளது.
அத்துடன் பதுளை மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் குறிப்பாக பொருளாதார ரீதியில் பின்தங்கி இருக்கின்ற பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களின் நூற்றுக்கு மேற்பட்ட வர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கி வருகின்றேன் என்பதையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன்.
கேள்வி : பதுளை மாவட்டத்தின் தற்போதைய தமிழ் பிரதிநிதித்துவம் தொடர்பாக நீங்கள் தெரிவிக்க விரும்புவது என்ன?
பதில் : தொடர்ச்சியாக பதுளை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகின்ற தமிழ் பிரதிநிதித்துவம் எவ்வாறு காணப்பட்டது என்பதனை நாம் அறிவோம். தொடர்ச்சியாக நாம் இரண்டு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றோம்.
அந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்த கட்சியில் இருந்து பாராளுமன்றத்திற்கு செல்ல தகுதி அடைந்திருந்தார்கள் என்பதையும் எமது மக்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள். ஆகவே அந்த தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்து விடாமல் நல்ல தலைமைத்துவத்தின் கீழ் சிறந்த மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்து அவர்களுடன் பயணிப்பதே இன்றைய காலத்தின் கட்டாயமாக காணப்படுகின்றது.
கேள்வி: சமகால அரசியல்வாதிகளுக்கு காணப்படுகின்ற சவால்கள் தொடர்பில் கூறுங்கள்?
பதில் : பதுளை மாவட்டத்தில் தற்போதுள்ள அரசியல் பிரதிநிதிகளாகட்டும் எதிர்காலத்தில் தெரிவு செய்யப்படவிருக்கின்ற மக்கள் பிரதிநிதிகளாகட்டும் ஒவ்வொருவரும் தனித்துவமான கொள்கைகள், வேலைத் திட்டங்களையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
இவ்வாறான ஒரு சமூக கட்டமைப்புக்கு மத்தியில் எமது சமூகத்தின் தேவைகளும் எமது சமூகத்தின் எதிர்பார்ப்பும் சற்று மாற்றம் அடைந்ததாகவே தற்போது காணப்படுகின்றது. எதிர்காலத்தில் நாம் எவ்வாறான தலைமைத்துவத்தின் கீழ் செயற்பட்டு எமது அரசியல் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதனை மக்கள் சிந்தித்து தீர்மானிக்க வேண்டும்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் மக்களை நாம் குறைத்து எடை போட்டு விடக்கூடாது.
கேள்வி : பதுளை மாவட்ட மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?
பதில் : மாற்றம் வேண்டும் என்பது நிச்சயமாக அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் காணப்படுகின்ற ஒரு எதிர்பார்ப்பாகும். இந்த மாற்றத்தினை விரும்புகின்ற இளைஞர்கள் அந்த மாற்றம் தனது சமூக ரீதியில் ஏற்பட வேண்டும் என்பதில் சரியான தெளிவினைப் பெற்றிருக்க வேண்டும்.
எமது சமூகம் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்? எவ்வாறான திசையில் இந்த மாற்றத்தினை கொண்டு செல்ல வேண்டும்? என்பதில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு சமூகங்களுக்கிடையிலும் எதிர்பார்க்கின்ற மாற்றங்கள் முற்போக்கான சிந்தனைகளை கொண்டிருக்க வேண்டும்.
எனவே, இவ்வாறான சூழ்நிலையில் மக்களே எதிர்காலத்தில் நாம் எவ்வாறான தலைமைத்துவத்தின் கீழ் செயல்பட்டு எமது அரசியல் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதனை மக்கள் சிறந்த முறையில் தீர்மானிப்பார்கள்.
தேசிய ரீதியில் காணப்படுகின்ற இன்னல்களுக்கான தீர்வுகளினை மலையக சமூகத்திடம் கொண்டு வந்து திணிப்பதன் மூலமாக எமது பிரச்சினைகளுக்கு முடிவினை பெற்று விட முடியாது.
நாம் அனைவரும் இலங்கையர் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆனால், மலையகத் தமிழர்கள் என்ற அடையாளத்தினையும் எம்மால் இழந்து விட முடியாது. மலையகத் தமிழர்கள் என்ற ரீதியில் எமக்கு அடிப்படை ரீதியிலான பல தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றது.
எனவே, தேவைகளை இனங்கண்டு அதனை நிறைவேற்றுவதற்கும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து எமது இளைஞர்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுப்பதும் காலத்தின் கட்டாயமாக காணப்படுகின்றது.
இதனை எமது மலையக இளைஞர்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறான தலைவர்கள் யார் என்பதை அவர்களே தெரிவு செய்ய வேண்டும்.
நேர்காணல்: எல். செல்வா