பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்த 8,361 பேரில், 1000க்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன .
ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க மற்றும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் செலவு செய்ததற்கான வருமான ஆதாரங்களை வெளியிட வேண்டுமென்பதால், வேட்புமனுக்களை தாக்கல் செய்த 7,300 க்கும் அதிகமானோர் இத்தேர்தலில் ஆர்வமற்றிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பாராளுமன்றத் தேர்தலுக்காக வழங்கப்பட்ட 8,888 மொத்த வேட்புமனுக்களில் 527 தேசியப் பட்டியலின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 8,361 வேட்பாளர்களில் 5,015 வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்தும், 3,346 பேர், சுயேச்சை வேட்பாளர்களாகவும் தேர்வாகியுள்ளனர்.
ஆனால், இவர்கள் அனைவருக்கும் 9,291 தேர்தல் பிரசார அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சைக் குழுக்கள் உட்பட 8,361 வேட்பாளர்கள் போட்டியிடும் போது, கட்சியின் மாவட்ட அலுவலகங்கள், பிரதேச அலுவலகங்கள் மற்றும் வேட்பாளரின் வீட்டிலுள்ள அலுவலகமென அனைத்தும் 9,291 ஆக இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் பொதுத் தேர்தலுக்காக 02 இலட்சத்துக்கும் அதிகமான அலுவலகங்கள் நிறுவப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
பாரம்பரியமிக்க பிரதான கட்சிகளின் பிரசார நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.
பாரம்பரிய கட்சிகளால் நிறுத்தப்பட்ட பெரும்பான்மையான வேட்பாளர்கள் ‘வெற்றி பெற்றால் வெற்றி பெறுவோம்’ என்ற ஆர்வமற்ற மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
பணச் செலவு மிகக் குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்படுவதை அவதானிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த வருடங்களைப் போன்று நிதியுதவி வழங்குவதற்கு அனுசரணையாளர்கள் இல்லாமை இவ்வருட பொதுத் தேர்தலின் குறிப்பிடத்தக்க அம்சம் எனவும் தெரியவந்துள்ளது.
பாரம்பரிய கட்சிகளின் அரசியல்வாதிகளுக்கு அதிகளவான பணம் செலவிடப்பட்டமை, பிற்கால எதிர்பார்ப்புகளுடனேயே என்பதையும் அவதானித்த அவர்கள், இம்முறை அனுசரணையாளர்கள் பணம் கொடுக்க முற்படாமல் போனது தங்கள் எண்ணங்களை ஈடேற்ற முடியாமலாக்கியுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.