பாராளுமன்றத் தேர்தலுக்காக 63,145 பொலிஸார் தேர்தல் கடமைகளில், ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று முன்தினம் (08) கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்: பொதுத் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கு 3,200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் முப்படை வீரர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும், 12,227 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை சேவைக்கு அமர்த்தி, 3,109 நடமாடும் பொலிஸ் சேவைகளை நடைமுறைப்படுத்தவும் நாடு முழுவதும் 269 வீதித் தடைகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
214 கலகத் தடுப்புக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
எந்தவொரு நாசகார நடவடிக்கைகளும் ஏற்படாதவாறு கண்காணிப்பதற்காக புலனாய்வு அதிகாரிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை, இரவு பத்து மணியுடன் நிறைவடையவுள்ளது. செவ்வாய்க்கிழமை (12) மறுநாள் புதன்கிழமை (13) ஆகிய தினங்கள் அமைதி நாட்களாகும். இந்நாட்களில், தேர்தல் பணிகளில் ஈடுபடுவது, வீடு, வீடாகச் செல்வது மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுவது என்பவை தண்டனைக்குரிய குற்றங்களாகவும். தேர்தலை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வௌிநாட்டுக் கண்காணிப்பாளர்களும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.அமைதியான தேர்தலை நடத்தும் வகையிலான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள் ளதுடன் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.