எதிர்வரும் பொது தேர்தலின் பின்னர் அமையவுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி எதனையும் வழங்கும் எண்ணம் இல்லையென கட்சியின் நிறைவேற்று உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமல்ல கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ அல்லது விக்கிரமசிங்க அரசாங்கங்களில் அமைச்சர்களாக பதவி வகித்து நாட்டை அழித்த எவருக்கும் அமைச்சு பதவிகளை வழங்கும் எண்ணம் தமது அரசாங்கத்துக்கு இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார். அதேபோன்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தரப்புக்கும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தரப்புக்கும் அமைச்சுப் பதவிகள் எதனையும் வழங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்திக்கு வடமாகாண மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக நேற்று முன்தினம் (08) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுர குமார திசநாயக்காவை சந்திப்பதற்கான நேரம் ஒன்றை டக்ளஸ் தேவானந்தா கேட்டு ஒதுக்கிக் கொண்டார். முன்னாள் அமைச்சர் ஒருவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் ஜனாதிபதி அவ்வாறான கோரிக்கைக்கு அனுமதி வழங்குவது அரசியல் தார்மீகமாகும். டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியை சந்தித்த போது ஜனாதிபதியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதை எடுத்து வடக்கிலுள்ள மற்றும் ஏனைய சில பத்திரிகைகளில் அதனை பிரசுரித்திருந்தார். அதேபோன்று தனது முகநூலிலும் பதிவிட்டுள்ளார். ஜனாதிபதி அவருக்கு உதவுவதாகச் கூறி பெரும் பிரசாரம் செய்து கொண்டார். அவரது பத்திரிகையிலும் எழுதினார். தாம், கடற்றொழில் அமைச்சராக இருந்த போது அமைச்சுப் பணிகளைப் பற்றி பேசியதாக மக்களிடம் பொய் கூறியுள்ளார். டக்ளஸ் தேவானந்தாவை நினைத்து நாம் வெட்கப்படுகிறோம்.தேசிய மக்கள் சக்தியில் வெற்றி பெற்ற பின்னர், ஆட்சியில் இணைவேன் என்று எல்லா இடங்களிலும் கூறி வருகிறார். டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி வழங்க ஜனாதிபதிக்கோ எமக்கோ எந்த தேவையும் இல்லை. இந்தப் பொய் முடிவுக்கு வரும் என்று காத்திருந்தோம். டக்ளஸும் அவருடைய அடியாட்களும் இன்றும் எல்லா இடங்களிலும் இந்தப் பொய்யைத் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.ராஜபக்ஷக்களுடன் சேர்ந்து நாட்டை அழித்த அமைச்சர்களும் இருக்கிறார்கள். ராஜபக்க்ஷ, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால ஆகியோருடன் இணைந்து வடக்கை அழித்தது யார்? டக்ளஸ் தேவானந்தா என்பவர், இலங்கையை அழித்த அமைச்சரவையிலிருந்த ஒரு முன்னாள் உறுப்பினர்தான். டக்ளஸ் தேவானந்தா கடந்த தேர்தலில் ரணிலுக்கு உதவினார். ரிஷாத் பதியுதீனும் இவ்வாறான பிரச்சாரங்களை கொண்டு செல்கிறார். தமக்கு தொலைபேசி மூலம் ஜனாதிபதி அழைப்பு விடுத்ததாக கூறி வருகிறார். இவரும் ராஜபக்ஷ காலத்திலும் அமைச்சராக இருந்தவர்தான்.. வறுமைக்கோட்டின் கீழுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக சுமந்திரனின் தரப்பினரும் ஸ்ரீதரனின் தரப்பினரும் இதையே செய்கிறார்கள். இவர்கள்தான் யுத்த காலத்தின் போது, வறுமைப்பட்ட தமிழ், முஸ்லிம்களின் காணிகளைக் கைப்பற்றினர். அவர்கள் வெற்றி பெற்றால் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்போமென வாக்கு கேட்கிறார்களாம். நீங்கள் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்தால் மற்றவர்ளை ஏன் ஆதரிக்க வேண்டும்? ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்தால் அமைச்சர்களும் ஐக்கிய மக்கள் சக்தியாகவே இருப்பார்கள்.
யாழ். விசேட நிருபர்