முத்துசாமியின் மூத்தமகன்
மூட்டையும் கையுமாய்
தடுமாறி கொண்டிருந்தான்
கொச்சிக்கடை கோட்டையில்…
— அடையாளம் கண்டு
அருகில் சென்றேன்
அசிங்கத்தில் அவன்
முகம் அலங்கோலமானது..,
அடடா….
அதுவா சங்கதி…
உழைத்ததுக்கு
காசுகேட்டு உரிமைகள்
வாங்கி கேட்டு
உதைபட்டு வீதி வந்து
செய்வதென்ன தெரியாமல்
சிந்தை கெட்டு
போன கதை
கறுத்த தோளும்
களவாணி முழியும்
காட்டி கொடுத்ததே…
ஊருக்குள்….
நான் ஊதாரி இல்லை
ஊதியம் வாங்கி
உழைத்து தின்னும்
உழைப்பாழி என்பானே
இங்கு ஊமையாய்
போனானே….
அவன் பேச்சிழந்து
நின்றானே….
அய்யாமாரே அம்மாமாரே
அவன் கதை கேட்டால்
கரு விழிகள் முட்டும்
கண்ணீர் கொட்டும்…
வயது பதினைந்தில்
புத்தகத்தை நுகர்ந்து
கொண்டு
புனிதன் போல்
சுற்றி வந்தான்…
இன்று புழுதியிலே
புதைந்து விட்டான்…
அம்மா அழைத்து
சாப்பிட்டாயா….?
செல்லமே…
என்ற கனம்
அறுசுவை உணவென்று
வெக்கமின்றி
புழுகித்தள்ளுவான்…
யாருக்கு தெரியும்
உணவில் உப்பு கூட
இல்லாமல் இருப்பதை தின்று
வயிற்றை வளர்த்த கதை…
கொழும்புக்கு போனால்
சொந்தமாக கட்டலாம்
கோட்டை என்பதெல்லாம்
அபாண்டமான கட்டுக்கதை….
கல்லூரியில் திறனான
பலரின் நிலை இங்கெவர்
அறிந்ததுண்டு…..
படிப்படியாய் படித்து வந்து
ஏறாத கணிதத்திற்க்கு
ஏறுகிறான் கொழும்பிற்கு….
இன்று,
கொச்சிக்கடை வீதியில்
விதியை நினைத்து
வியர்வை சிந்தி
கொத்து ரொட்டி போடுபவனும்…
கோல்ஃபேஸ் பக்கத்தில்
கத்தி கத்தி வேர்கடலை
விற்பவனும் …
புத்தகம் சுமந்த முதுகுகளில்
புறக்கோட்டை அருகே
புழுதி மூட்டை சுமப்பவனும்
இங்கிருந்து ஓடிய
சின்னஞ்சிறுசுகளே…..
அத்தனையும் நம்
உடன்பிறவா உறவுகளே….
கல்வியில் நாட்டம்
வரவில்லை என்றால்
கொழும்புக்கு ஓட்டம்
எனும் குறுகிய வட்டம்
அடைக்கப்பட வேண்டும்
இளையோரும் இளைஞர்களும்
கண்விழித்து வாழ வேண்டும்….
கற்ற உறவுகள்
கல்லுடைப்பதை நிறுத்தி
காரியம் பல
செய்தல் நன்று ….
முத்துசாமியின்
மூத்த மகன்
வரண்ட கைகளும்
இருண்ட வாழ்க்கையும்
ஒரு நிமிடம் என்னையே
உலுக்கிவிட்டது…