விண் மீன்கள் சுழிக்க மறந்த
கோடை இரவு
தொலைவில் வானொலியில் ஒலிக்கும்
பழைய பாடல்களை
மெய் மறந்து முணுமுணுத்தவாறு
விடுதியின் பல்கனியில்
காலாற ஓய்வெடுக்கிறேன்
கழிவு நீர் வழிந்தோடி
பள்ளம் படு
குழிகளில் உறைந்து
காற்றிடை பரவுதலில்
நாறி அருவருப்பூட்டு
கிறது இரவு
விரைந்து சென்ற
மகிழுந்தில் சிக்கி
குற்றுயிராய் கிடக்கும்
கைவிடப்பட்ட
பூனையின்
அந்திமக் குரல்
ஒரு கணம்
இரவை உலுக்குகிறது
விடுதி முன்றலில்
நிழல் விரித்து
நிற்கும் வயது முதிர்ந்த
வாகை மரத்தின் புதரினுள்
யாரோ ஒருத்தருடன் ஒதுங்கும்
விலை மாது
இரவை அம்மணமாக்குகிறாள்
ஊருக்கான கடைசிப்
பேருந்தையும் தவறவிட்டவர்கள்
உறங்க தோதான இடம் தேடி
இரவின் கதவுகளை தட்டுகின்றனர்
தவற விட்ட மிக முக்கியமான
எதையோ தனியாக தேடி
போன் ஒளியில்
ஒருத்தன் இரவை வாசிக்கிறான்
இப்படி இன்றைய நகர்ப்புற இரவும்
எதிரும் புதிருமான
நிகழ் சம்பவங்களையும் கடந்து
வழமை போன்று புலர்கிறது