ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றுச் சாதனை படைத்த தேசிய மக்கள் சக்தி மற்றொரு மைல்கல்லை எட்டத் தயாராகிறது. இந்தத் தேர்தல் முற்றிலும் மாற்றமான ஒரு பாராளுமன்றத்தை உருவாக்கப் போகிறது. படித்த, தொழில்வாண் மையுள்ள திறமையான இளைஞர்களால் நிரம்பப் போகும் பாராளுமன்றத்திற்குச் செல்வதற்காக இம்முறை தேர்தலில் துடிப்பான இளம் பொறியியலாளரான அர்கம் இல்யாஸ் மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடுகிறார். வரலாற்றில் முதன் முறையாக தெற்கிலிருந்து சிறுபான்மை பிரதிநிதித்துவத்திற்கான வாய்ப்பு இம்முறை பிரகாசமாக ஏற்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியூடாக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளுடன் தெரிவாக தயாராகும் அவர் குறுகிய காலத்திலேயே அனைவர் மனங்களிலும் இடம்பிடித்துள்ளார். “மாத்தறை கிரஷ்” (Matara crush) என செல்லமாக அழைக்கப்படும் அவருக்கு இளைஞர், யுவதிகள் மத்தியில் பெரும் வரவேற்புள்ளது. வெலிகமவைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், மாத்தறை இல்மா கல்லூரியில் சாதாரண தரம் வரை கற்று றாகுல கல்லூரியில் உயர் தரம் கற்றார். கணிதப் பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 14 ஆவது இடத்தைப் பிடித்து பல்கலைக் கழகம் சென்ற அவர் பொறியியலாளராக தற்பொழுது செயற்பட்டு வருகிறார். அவருடனான நேர்காணல்:
கே: உங்களின் அரசியல் பிரவேசம் பற்றி கூறுங்கள் ?
எனக்கு ஆரம்பத்தில் அரசியலில் பெரிதாக நாட்டம் இருக்கவில்லை. இந்த நிலையில் தான் உள்ளுராட்சித் தேர்தலில் வெலிகம நகர சபைக்காக போட்டியிட அழைப்பு வந்தது. இறுதியில் தேசிய மக்கள் சக்தி பட்டியலில் எனது பெயர் உள்ளடக்கப்பட்டது.
தற்போதைய நிலையில் அனைவரும் நம் நாட்டுக்காக அரசியல் ரீதியாக தலையிட வேண்டும் என்று நினைக்கிறேன். இது குடிமக்களாகிய நம் அனைவரின் பொறுப்பாகும். குறிப்பாக இளைஞனென்ற வகையில் அரசியல் ஊடாக ஏதாவது பங்களிக்க வேண்டும் என விரும்பினேன். எனவே, குறுகிய காலப்பகுதிக்குள் தேசிய மக்கள் சக்தியின் ஊடாக அரசியல் செயற்பாட்டில் ஈடுபட எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
கே: நாட்டில் பல அரசியல் கட்சிகள் இருக்கையில் தேசிய மக்கள் சக்தியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
எனக்குத் தெரிந்த வரையில், நம் நாட்டில் சுமார் 100 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அநேகமான கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் மோசடி, ஊழல், குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் தேசிய மக்கள் சக்தியை தூய்மையான அரசியல் கட்சியாக ஏற்க முடியும். அதனால்தான் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து அரசியலுக்கு பிரவேசித்தேன்.
கே: நாட்டில் மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்து கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தார்கள். அடுத்த பொதுத் தேர்தலிலும் அவ்வாறானதொரு மாற்றம் நடக்க வாய்ப்புள்ளதா?
பொதுத் தேர்தலிலும் மக்கள் கண்டிப்பாக மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். அதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த காலாவதியான மோசமான அரசியலினால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். எனவே அவர்கள் உண்மையில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த மாற்றத்தை வழங்க தேசிய மக்கள் சக்தியில் உள்ள நாம் தயாராக இருக்கிறோம்.
கே: முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் விசேட சலுகைகள் நீக்கப்படுவது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
அரசியலமைப்பு எவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தாலும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விசேட சலுகைகளைப் பெறுவதற்கு தார்மீக உரிமை கிடையாது. அவர்கள் ஆட்சியில் இந்த நாட்டை சுபிட்சமாக மாற்றவில்லை. நாளை பிறக்கப்போகும் குழந்தைகள் கூட இப்போதுதான் கடன் வாங்கியிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் பதவிக்காலத்தில் வரம்பு மீறி சலுகைகளை அனுபவித்தனர். எனவே அவர்கள் சுயமாக முன்வந்து தமது விசேட சலுகைகளை மறுக்க வேண்டும்.
கே: ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டுக்கு வழங்கிய சில வாக்குறுதிகளை நிறைவேற்ற தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையா? மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற முடியுமா?
சில அரசியலமைப்பு ரீதியான மாற்றங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். மக்கள் எங்களுக்கு அதிகபட்ச அதிகாரத்தை வழங்குவார்கள் என்று நம்புகிறோம். எனினும், மூன்றில் இரண்டு பலத்தை நாம் பெறுவோம் என எம்மை விட ஏனைய கட்சிகள் அதிகமாக நம்புகின்றன. அதனால்தான் அவர்கள் அனைவரும் எதிர்க்கட்சியாக வர வாய்ப்பு கேட்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒப்பிடும்போது நாம் சாதகமான இடத்தில் இருக்கிறோம்.
கே: ஊழல் மற்றும் மோசடி தொடர்பாக தேசிய மக்கள் சக்தி பிரதானமாகப் பேசிவந்தாலும் அவற்றை முன்னெடுக்க நீண்ட காலம் செல்லும் என எதிரணி கூறி வருவது பற்றி?
மோசடி, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் தான் இப்படி பிரசாரம் செய்கிறார்கள். தங்கள் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற பயம் தான் அதற்குக் காரணம். மோசடி, ஊழலை வெளிக்கொணர வேண்டும் என்ற உண்மையான ஆசை இருந்தால், அவற்றை வெளிக்கொணர நீண்ட காலம் செல்லாது. ஊழல் மோசடிகளை ஒழிக்க எந்த அரசும் நேர்மையாக செயற்பட்டது கிடையாது. இவற்றுக்காக எமது அரசு ஏற்கனவே பல முன்னெடுப்புகளை செய்துள்ளது.
கே: அரசியல் மாற்றத்தின் மூலம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு உங்களால் எவ்வாறு பங்களிக்க முடியும் என கருதுகிறீர்கள் ?
நான் பெற்ற கல்வியறிவு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தி மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை பெற்றுக் கொடுக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். பல தசாப்தங்களாக மக்கள் சுரண்டப்பட்டார்கள். அவர்களின் வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள். இனி மக்கள் சொகுசாக வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் எமது தேசிய மக்கள் சக்தி மேற்கொள்ளும். என்னைப் போலவே கற்ற பெருந்திரளான இளைஞர்கள் இந்த மாற்றத்திற்காக பங்களிக்க முன்வந்துள்ளனர்.
கே: தேசிய மக்கள் சக்தி ஆட்சி தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பாதகமாக அமையும் என்று சிலர் கூறுகிறார்கள்?
அதில் எந்த உண்மையும் இல்லை. என்னைப் போன்ற ஒரு முஸ்லிம் நபரை எப்படி தேசிய மக்கள் சக்தியால் தேர்தலில் முன்னிறுத்த முடியும்? என்னைப் போன்ற பல தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கு கட்சி வாய்ப்பளித்துள்ளது. எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக இவ்வாறு பொய்ப் பிரசாரம் செய்கின்றன.
தேசிய மக்கள் சக்தி அரசொன்று உருவாவதற்கு அஞ்சி, முன்பிருந்தே இவ்வாறான கதைகளைப் பரப்பி வந்தார்கள். மக்கள் புத்திசாலிகள். இனவாதத்தையும் மதவாதத்தையும் கொண்டு அரசியல் செய்தவர்களை மக்கள் இன்று ஓரங்கட்டியுள்ளனர். சிறுபான்மை மக்கள் எந்த பிரச்சினையும் இன்றி நிம்மியாக வாழும் நிலைமை எமது ஆட்சியில் உருவாகும். அதனால் தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி அநுர குமாரவின் வெற்றிக்காக பெரும் பங்களித்தனர். பொதுத் தேர்தலில் அது மேலும் அதிகரிக்கும். தமிழ், முஸ்லிம் மக்கள் எந்த நெருக்கடியும் இன்றி நிம்மதியாக வாழும் சூழல் எமது ஆட்சியில் உருவாக்கப்படும்.
கே: இறுதியாக என்ன கூற விரு ம்புகிறீர்கள்?
நிறைவேற்று அதிகாரம் எமது கட்சிக்குக் கிடைத்துள்ளது. தற்பொழுது பாராளுமன்றத்தின் அதிகாரம் தேவை. முன்னேற்றகரமான நாடுகளைப் போன்று தகைமையான நிபுணத்துவ அறிவுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என மக்கள் கனவு கண்டனர்.
கடந்த காலத்தில் நாம் கண்ட கனவுகள் வெறும் கனவாக மாத்திரமே இருந்தன. 77 வருட ஆட்சி காரணமாக இன்று பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர். இந்த நிலை எதிர்காலத்தில் மாறும். பாராளுமன்றத்தை துப்புரவு செய்யும் பணிக்கு அனைவரும் பங்களிக்க வேண்டும்.
மக்களின் உண்மையான தேவைகளை நிறைவேற்றக் கூடிய மக்கள் நல அரசை உருவாக்குவதற்கான வாய்ப்பு மக்களுக்கு தற்போது கிடைத்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்வதற்கு மக்கள் பாடுபடுவார்கள் என நம்புகிறோம்.
14 ஆம் திகதி மக்கள் வழங்கும் பாரிய வெற்றிக்குப் பின்னர் தான் எமது முழுமையான பணிகள் ஆரம்பமாகும். எம்முடன் இணைந்து செயற்படுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். எமது திட்டத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை நாங்கள் அறிவோம். தேசிய மக்கள் சக்தி என்ற வகையில், அந்த நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கிறோம்.
எம்.எஸ்.பாஹிம்