நடிகர் விஜய் தெளிவான பாதையில் செல்லவில்லை என்ற விமர்சனங்களுடன் தமிழ்நாட்டு அரசியலில் புதிய களம் காண இறங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.
திரைத்துறையில் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி தமிழ்நாட்டு அரசியலில் அனைவரையும் ஆச்சரியத்துடன் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார். கட்சியின் முதல் மாநாட்டிலேயே பல இலட்சக்கணக்கான தொண்டர்களை ஒன்றிணைத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்டியிடுக்கிறார்.
2026இல் தமிழ்நாட்டில் வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மக்கள் மத்தியில் புதிய எழுச்சியை உண்டாக்குமோ என்ற எதிர்பார்ப்பும் எழத்தொடங்கியிருக்கிறது. ஆனால், முதல் மாநாட்டில் கட்சியின் தலைவர் என்ற முறையில் விஜய்யின் உரைதான் தற்போது விவாதப்பொருளாகியிருக்கிறது. அரசியலில் முன் அனுபவம் இல்லாமல், நடத்தப்பட்ட மாநாடு திரைப்பட பாடல் வெளியீட்டு நிகழ்வு போல நடந்தது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் நடிகர் விஜய்யின் உரைபற்றி ஒன்றிய அமைச்சர் எல். முருகன் கருத்துத் தெரிவிக்கும் போது, புதிய கட்சி தொடங்கியுள்ள விஜய் அவரது கட்சிக் கொள்கைக் கோட்பாடுகளில் குழப்பமான நிலையில் தான் இருக்கிறார். தேசமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று சொல்லியிருந்தால் வரவேற்போம். ஆனால், திராவிடமும் – தேசியமும், இரு மொழிக்கொள்கை எனவும் சொல்லியிருக்கிறார் இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாக இருக்கின்றன.
அவரது கொள்கை, கோட்பாடுகளில் தெளிவான பாதையை அவர் தேர்ந்தெடுக்கவில்லை என்பதையும் தெளிவான பாதையில் பயணிக்க விரும்பவில்லை என்பதையும் இது காட்டுகிறது. என்று எல் முருகன் கூறியிருப்பதில் நியாயம் இருக்கிறது. ஏனென்றால் பெரியாரின் கடவுள் மறுப்பை ஏற்க மாட்டோம். ஆனால், பெரியாரை ஏற்றுக்கொள்வோம். பேரறிஞர் அண்ணாவின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையைத் தான் பின்பற்றி நடப்போம் என்ற விஜய்யின் கருத்தில் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது. என்றே அரசியல் நிபுணர்களும் விமர்சிக்கின்றனர்.
குடும்ப அரசியல், ஊழல் கட்சி, திராவிட மாடல் என்று மக்களை ஏமாற்றுகிறது என்று தி.மு.கவை தாக்கிய அளவுக்கு மற்ற கட்சிகளை தாக்கவில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க மட்டுமே பலமான கட்சியாக இருக்கிறது. அதை எதிர்த்து அரசியல் செய்தால்தான்வெற்றி பெற முடியும் என்று விஜய் ஒரு கணக்குப் போட்டிருக்கலாம். ஆனால், தி.மு.கவை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சிகள் எல்லாம் என்ன நிலைமையில் இருக்கின்றன என்று,விஜய் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும், அரசியல் என்பது திரைப்படமல்ல. மேடையில் வசனம் பேசுவதால் ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கலாம். பொதுமக்கள் ஏற்றுக்கொண்டார்களா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் யாருக்கானது என்ற தெளிவும் அவரிடம் இல்லை.
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில், கட்சியின் தலைவர் விஜய்யிடம் மக்கள் நிறைய எதிர்பார்த்தனர். ஆனால், தனக்கு எதிரான விமர்சனங்கள் மற்றும் இனிமேல் எழக்கூடிய விமர்சனங்களுக்கு பதில் சொல்வதிலேயே விஜய் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டார் என்று விடுதலை சிறுத்தைகள்கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் இது பற்றி கூறும் போது, நண்பர்கள் யார் என்று அடையாளம் காட்டுவதை விட திரிகள் யார் என அடையாளம் காட்டுவதிலேயே ஆர்வம் காட்டியுள்ளார். பிளவுவாத சக்திகள், முதலாவது எதிரி என்றும், ஊழல் சக்திகள் 2 ஆவது எதிரி என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பிளவுவாத சக்திகளை வெளிப்படையாக கூறவில்லை. குறிப்பிட்ட கட்சி, அமைப்பு என அடையாளப்படுத்தவில்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும் என்று கூறிய போது, சமத்துவ அரசியலை முன்மொழிகிறார் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், பெரும்பான்மை, சிறுபான்மை என பேசும் அரசியலில் உடன்பாடு இல்லை. பெரும்பான்மை பேசுகிறவர்கள் யார் என அடையாளப் படுத்தாதது ஏன்?
பாசிச எதிர்ப்பை பாயாசம் என்று கிண்டலடித்து விட்டு, பாசிச எதிர்ப்பு என்று ஒன்றுமில்லை என்று அதைக் கடந்து போகிறார். இது பா.ஜ.க எதிர்ப்பு தேவையற்றது என்ற பொருளை உணர்த்துகிறது. பா.ஜ.க எதிர்ப்பில் அவர் உறுதியாக இல்லை என்பதையே அவரது உரைமூலம் உணர முடிகிறது.
அவரிடம் மக்கள் எதிர்பார்த்த ஆக்கபூர்வமான அறிவிப்புகள் ஏதுமில்லை, கொள்கைப் பிரகடனமும், செயல்திட்டமும் இல்லை, கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்றும் தெரிவித்துள்ளார், இது தற்போது தி.மு.க கூட்டணிக் கட்சிக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தும் முயற்சிதானே தவிர நடைமுறையில் சாத்தியமில்லாதது என்று திருமாவளவன் கூறியிருக்கிறார்.
நான் சினிமாத்துரைக்கு வரும் போது முகம் சரியில்லை, நடை சரியில்லை, நடிப்பு சரியில்லை என்று கேலி செய்தார்கள். ஆனால், எனது கடினமான உழைப்பால் நான் வெற்றி பெற்றேன். சினிமாவில் இன்று நான் உச்சத்தில் இருக்கிறேன். நிறைய சம்பாதிக்கிறேன். அதை விட்டுவிட்டுத்தான் அரசியலுக்கு வருகிறேன் என்று விஜய் கூறியிருப்பதில், நியாயம் இருந்தாலும் அரசியலில் அவருக்கு எந்தவிதமான அனுபவமும் இல்லை, சினிமாவில் இயக்குனர் எழுதிக்கொடுத்ததைப் பேசி, சொல்லிக் கொடுத்ததைக் கேட்டு நடித்திருக்கிறார். ஆனால், அரசியலில் அவருக்கு ஆலோசனை வழங்க முன் அனுபவம் உள்ளவர்கள் யாரும் அவர் பின்னால் இல்லை.
கூத்தாடிகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று கூச்சலிடுகிறார்கள். எம்.ஜீ.ஆர், என்.டி.ஆர் இருவரும் சினிமாவில் இருந்து தானே அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றார்கள், அவர்களைப் பின்பற்றி நான் அரசியலுக்கு வரக்கூடாதா? என்றும் விஜய் கேள்வி எழுப்புகிறார், ஆனால், எம்.ஜி.ஆர்., என். டி. ஆர் இருவரும் சினிமாவில் இருக்கும் போதே அரசியிலும் பயணித்தார்கள். அரசியல் அனுபவத்தைக் கற்றுக் கொண்டு தான் அரசியலுக்கு வந்தார்கள். அரசியல் அனுபவமே இல்லாமல் கட்சி தொடங்கிய விஜயகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலில் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை விஜய் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
விஜய் படம் வெளியாகும் போதெல்லாம் ரூ. 150 டிக்கெட் விலை 1000, 2000, என்று விற்பனை செய்யப்படுவது ஊழல் இல்லையா? ரசிகர்களை சுரண்டி பணம் சம்பாதித்த விஜய் எவ்வாறு ஊழல் இல்லாத ஆட்சியைத் தருவார் என்று எளிய மக்கள் கேட்கும் கேள்விக்கு விஜய்யிடம் பதில் இல்லை.
முதல் மாநாட்டில். பல இலட்சக்கணக்கானவர்கள் கூடியிருக்கிறார்கள். அதில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் எத்தனைபேர், விஜய் ரசிகர்களாய் இருக்கும் எல்லோருமே அவருக்கு வாக்களிப்பார்கள் என்பது என்ன நிச்சயம்.
அரசியல் பாதை என்பது இரண்டு வகையானது, ஒன்று இடது சாரிப் பாதை, மற்றொன்று வலதுசாரிப்பாதை விஜய் எந்தப்பாதையை தேர்ந்தெடுக்க உள்ளார் என்பது குறித்து அவரது மாநாட்டு உரையில் தெளிவில்லை, பிளவு சக்திகளை எதிர்ப்பதாகக் கூறுகிறார். அடுத்த கணம் தி.மு.க.வை குறிவைத்துப் பேசுகிறார். தி.மு.க.வை மடடுமல்ல தி.மு.க.வுடன் தோழமை கொண்ட கட்சிகளின் மீதும் மறைமுகமாக தாக்குதல் நடத்துகிறார்.
சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, சமூக நலத் திட்டங்கள், ஆகியவற்றை செயற்படுத்துவதில், நிறைவேற்றுவதில், தி.மு.க எங்கே தவறியுள்ளது. என்பது குறித்து கூறினால், அது பரிசீலனைக்குரியது, அதை தவிர்த்து பா.ஜ.க கூறும் கருத்தையே இவரும் திருப்பிக் கூறுவதால் என்ன பயன்? இதன் மூலம் பாசிச பா.ஜ.க.வுக்கு விஜய் துணை போகிறாரோ என்ற ஐயத்தை உண்டாக்குகிறது.
தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சிதையும் என்பது அவரது எதிர்பார்ப்பு என்பது பாசிச சக்திகள் தமிழகத்தில் கால் ஊன்ற மேற்கொள்ளப்படும் அரசியல் உத்தியாகும். இத்தகைய நயவஞ்சக நரித்தனத்துக்கு தமிழ் மக்கள் ஒரு போதும் இரையாக மாட்டார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை பற்றியும் தமிழக மக்கள் சிந்திப்பார்கள்.
நடிகர் விஜய் அரசியல் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் தெளிவான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து மக்களிடம் நெருங்கி வரவேண்டும். இது இரண்டும் இல்லை என்றால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறிதான்.