கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது. தெஹ்ரான், இலம், குஸெஸ்தான் ஆகிய இடங்களில் உள்ள முக்கிய இராணுவத் தளங்கள் மீது இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இத்தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிடுகையில், ‘ஈரானிய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்று நாங்கள் உறுதியளித்தோம், அதற்கேற்ப தாக்குதல் நடத்தியுள்ளோம். அந்த தாக்குதல்கள் துல்லியமானவையாகவும் சக்திவாய்ந்தவையாகவும் அமைந்தன. தாக்குதல்களின் அனைத்து நோக்கங்களும் அடையப்பெற்றுள்ளன’ என்றுள்ளார்.
ஈரானின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவின் விஷேட விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து கொண்டிருந்த ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயீல் கனியே தெஹ்ரானில் கொல்லப்பட்டிருந்தார். ஹிஸ்புல்லாவின் செயலாளர் நாயகம் ஹஸன் நஸரல்லா, ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் பிரதித் தளபதி அப்பாஸ் நில்பெரோஷியான் ஆகியோர் பதுங்கு குழிகளைத் தாக்கியழிக்கும் குண்டுத் தாக்குதல்கள் மூலம் பெய்ரூட்டில் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பழி தீர்க்கும் வகையில் ஈரான் கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. ‘நாம் யுத்தத்தை விரும்பவில்லை. எம்மை சீண்டியதன் விளைவாகவே இத்தகைய பதில் தாக்குதல். இனிமேலும் இஸ்ரேல் எம்மைச் சீண்டுமாயின் இதனை விடவும் மோசமான விளைவுகளுக்கு முகம்கொடுக்க நேரிடும்’ என்று கூறியது ஈரான்.
ஆனால் இஸ்ரேல் ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றதோடு அதற்கான முஸ்தீபுகளையும் முன்னெடுத்தது. இந்நிலையில் அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதோ, எண்ணெய் வயல்கள் மற்றும் களஞ்சியசாலைகள் மீதோ தாக்குதல் நடத்தக்கூடாது என்று கண்டிப்பான அறிவிப்பு விடுத்தது.
இத்தகைய நிலையில், ஈரான் தாக்குதல் நடத்தி 25 நாட்கள் கடந்திருந்த நிலையில் ஒக்டோபர் 26 ஆம் திகதி எப் 15, எப் 16, எப் 35 உள்ளிட்ட 100 போர் விமானங்களைப் பாவித்து 20 இலக்குகள் மீது மூன்று அலைகளாக அதிகாலையில் இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தியது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடைப்பட்ட தூரம் 1000 கிலோ மீற்றர்களுக்கும் அப்பாலானது. இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஜோர்தான், சிரியா, ஈராக், சவுதி அரேபியா ஆகிய நாடுகளைக் கடந்து செல்ல வேண்டும். அதற்கு அந்தந்த நாடுகள் அனுமதி வழங்க வேண்டும். ஆனால் ஈராக், சிரியா, ஜோர்தான், சவுதி, கட்டார் போன்ற நாடுகள் “ஈரானை தாக்க எமது வான்வழியைப் பயன்படுத்த எவருக்கும் அனுமதிக்க மாட்டோம்” என்று ஏற்கனவே அறிவித்திருந்தன.
அப்படியிருந்தும் இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் ஈராக்கின் எர்பில் தன்னாட்சி பிராந்திய வான்பரப்பை பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது அங்குள்ள அமெரிக்க நிலைகளின் வான்பரப்பைப் பயன்படுத்தியே இத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இத்தாக்குதல் தொடர்பிலான ஈரானின் கோரிக்கைக்கு அமைய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடத்திய அவசரக் கூட்டத்தில் உரையாற்றிய ஈரானின் ஐ.நாவுக்கான பிரதிநிதி அமீர் சயிட் இரவானி, ‘ஈராக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவப் படைகள் வழங்கிய வான்வெளியைப் பயன்படுத்தி, ஈரானின் எல்லைக்கு வெளியே சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் இருந்து இஸ்ரேலிய இராணுவ விமானங்கள் நீண்ட தூர ஏவுகணைகளை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதில் இலாம், குசெஸ்தான், தெஹ்ரான் ஆகிய மாகாணங்களிலுள்ள ஈரானின் சில எல்லைப் பாதுகாப்பு ரடார்களும் இராணுவத் தளங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன’ என்று குறிப்பிட்டார்.
இத்தாக்குதல்களால் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதோடு ஈரானின் சில ரடார் கட்டமைப்புகளுக்கு சிறு சேதங்கள் ஏற்பட்ட போதிலும், அவை திருத்தியமைக்கப்பட்டு விட்டதாக ஈரானிய இராணுவம் தெரிவித்திருந்தது. அதேநேரம் சர்வதேச போரியல் நிபுணர்களும் இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரானின் வான்பரப்புக்கு வெளியே இருந்தே இத்தாக்குதல்களை முன்னெடுத்திருப்பதாகக்குறிப்பிட்டுள்ளனர்.
இத்தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி, ஐ.நா. சபையின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இஸ்ரேல் ஈரானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக வேண்டுமென்றே ஆக்கிரமிப்புச் செயலைச் செய்ததன் மூலம் சர்வதேச சட்டத்தையும் ஐ.நா சாசனத்தையும் அப்பட்டமாக மீறியுள்ளது. எமது ஆயுதப்படைகளின் தயார்நிலை மற்றும் விழிப்புணர்வின் பயனாகவும், நாட்டின் வான்பாதுகாப்பு கட்டமைப்பு சரியான நேரத்தில் எதிர்வினையாற்றியதன் காரணமாகவும், இத்தாக்குதலால் சில புள்ளிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சேதம் ஏற்பட்டது’ என்றுள்ளார்.
இந்நிலையில் ஈரான் தனது பாதுகாப்புத்துறைக்கான வரவு செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டை 200 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் தன் வான்பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் பலப்படுத்தவென ‘அயன்பீம்’ என்ற லேசர் கட்டமைப்பை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கென 530 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கியுள்ளது.
ஏற்கனவே அயன்டோம், டேவிட் சிலிங்க், அரோ 2, 3 இருந்தும் டாட் என்ற அதிநவீன வான்பாதுகாப்பு கட்டமைப்பை அண்மையில் அமெரிக்கா வழங்கியது. அப்படியிருந்தும் தன் வான்பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவே இஸ்ரேல் லேசர் கட்டமைப்புக்கு செல்வதாக இராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்த ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெய், ‘ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை மிகைப்படுத்தவோ, குறைத்து மதிப்பிடவோ கூடாது. ஆனால் ஈரானின் சக்தியை இஸ்ரேலுக்கு காட்ட வேண்டும். அவர்கள் எங்களை குறைத்து மதிப்பிடுகிறார்கள்.
எங்களது சக்தியை எப்படிக் காட்டுவது? தாக்குதலுக்கு எப்படி பதிலடி கொடுப்பது? ஈரான் நலன்களுக்காக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து ஈரானின் இராணுவ அதிகாரிகளே முடிவு செய்ய வேண்டும்’ என்றுள்ளார்.
இந்நிலையில் டைம்ஸ் ஒப் இஸ்ரேல், ‘ஈரானின் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கும் தொழிற்சாலை தாக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக ஈரான் இரு தசாப்தங்கள் கட்டியெழுப்பிய திறன் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
அணுவாயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்ட தெஹ்ரானுக்கு அருகிலுள்ள இரகசிய பார்ச்சின் தளம், ட்ரோன்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியவற்றை உள்ளடக்கிய தளங்களும் தாக்கப்பட்டுள்ளன. இத்தாக்குதல் இலக்குகளில் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் ஃபலாக், ஷைத் காதிரி மற்றும் அப்தோல் ஃபத் ஏவுகணை தயாரிப்பு தளங்களும், பார்ச்சின் மற்றும் பரண்ட் வசதிகளும் அடங்கும்’ என்று குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களால் ஈரானின் ஏவுகணை, ட்ரோன் உற்பத்தி தொழிற்சாலைகள், அணு ஆராய்ச்சி மத்திய நிலையம் தாக்கப்பட்டிருப்பதாக செய்மதி படங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மூலோபாய கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இத்தாக்குதல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்மதிப் படங்களை பகுப்பாய்வு செய்து தெஹ்ரானுக்கு கிழக்கில் சுமார் 30 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பார்ச்சின் என்ற இடத்தில் அமைந்திருக்கும் முக்கிய ஆயுத தளவாட உற்பத்தித் தளம், ரொக்கட் உற்பத்தி தொழிற்சாலை என்பன தாக்குதலுக்கு இலக்கதாகியுள்ளதாகவும் அங்கு குறைந்தது நான்கு கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் குசெஸ்தானில் உள்ள அபதான் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கு சேதமடைந்திருப்பதை புலப்படுத்தும் செய்மதி படங்களும் வெளியாகியுள்ளன.
சர்வதேச சட்டங்களை மீறியுள்ள இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வின் 51வது சரத்தின் கீழ் பதில் தாக்குதல் நடாத்தப்படும் என்று ஈரான் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்தச் சூழலில்தான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
மர்லின் மரிக்கார்