அடுத்த பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் தொடருக்கு போட்டித் தந்திரம் இப்போதே ஆரம்பமாகிவிட்டது. உலகின் செல்வந்த கிரிக்கெட் லீக்கான இந்த ஐ.பி.எல். தொடர் என்பது வெறுமனே கிரிக்கெட் மாத்திரமல்ல. அது கோடிக்கான பணம் கொட்டும் வர்த்தகம். மைதானத்தில் அணி ஒன்றின் வெற்றிகள் மற்றும் சம்பியன் கிண்ணத்தை வெல்வது என்பது பொதுவாகச் சொல்வது போல் பயிற்சி, திறமை, உற்சாகம் இத்யாதி இத்யாதி எல்லாவற்றுக்கும் அப்பால், மைதானத்துக்கு வெளியில் செய்யும் வர்த்தகத் தந்திரங்களும் சேர்ந்தது.
18 ஆவது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் நடைபெறும். ஆனால் அதற்கு முன்னர் வீரர்களை வாங்கும் மெகா ஏலம் நடைபெற வேண்டும். அது அணி ஒன்றின் கட்டமைப்பை தீர்மானிப்பதாக இருக்கும்.
அதற்கு முன்னர் போட்டியில் பங்கேற்கும் பத்து அணிகளும் ஏலத்துக்கு விடாமல் தக்கவைக்கும் வீரர்களை தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு தக்கவைக்கப்பட்ட வீரர்கள் விபரம் கடந்த வியாழக்கிழமை (31) வெளியானது. இதன்படி ஒவ்வொரு அணியும் தக்க வைத்திருக்கும் வீரர்கள் மற்றும் அது மெகா ஏலத்திற்கு எத்தனை பணத்துடன் செல்வது என்பதைப் பார்த்து அடுத்த ஐ.பி.எல். எப்படி இருக்கப் போகிறது என்று அனுமானிக்க முடியும்.
அதாவது மெகா ஏலத்திற்கு ஓர் அணி செலவிட முடியுமான உச்சபட்சத் தொகை இந்திய நாணயப்படி 120 கோடி ரூபா. ஆனால் தக்கவைக்கும் வீரர்களுக்கு ஒவ்வொரு அணியும் செலவிடும் தொகை இந்த கையிருப்புத் தொகையில் இருந்து கழிபடும். எனவே, ஓர் அணி தனது அணியில் எந்த அளவுக்கு மாற்றங்கள் செய்யப் போகிறது என்பதை இந்த தக்கவைக்கும் வீரர்களை வைத்தே புரிந்து கொள்ளலாம்.
அடிப்படையில் ஒவ்வொரு அணியும் தனது அணியின் முக்கிய வீரர்களை தக்கவைக்க முயன்றிருப்பதை பார்க்கலாம். சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர்பார்த்தது போல் மஹேந்திர சிங் தோனியை தக்கவைத்திருக்கிறது. அத்தோடு தக்கவைக்கப்பட்ட வீரர்களில் ஒரே ஒரு இலங்கையராக மதீஷ பதிரணவை சென்னை தக்கவைத்தது. மதீஷ சென்னையின் அடையாளமாக மாறியிருப்பது இதன்மூலம் தெரிகிறது.
அதேபோன்று மும்பை இந்தியன்ஸ் தனது துருப்புச் சீட்டுகளான ரொஹித் ஷர்மா, பும்ரா, சூரியகுமார் யாதவ், பாண்டியாவை தக்கவைத்திருப்பதோடு, றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் விராட் கொஹ்லியை விட்டுக்கொடுப்பதாக இல்லை.
ஆனால் ஐந்து அணிகள் தமது அணித் தலைவர்களையே கழற்றிவிட்டிருக்கின்றன. டெல்லி அணித் தலைவர் ரிஷப் பன்ட் தக்கவைக்கப்படவில்லை என்பதோடு லக்னோ தலைவர் கேஎல் ராகுல், பெங்களூர் தலைவர் பாப் டு பிளசிஸ், பஞ்சாப் தலைவர் ஷிகர் தவான் ஆகியோருக்கும் இதே நிலை தான். எல்லாவற்றுக்கும் மேலே கடந்த முறை கிண்ணத்தை வென்ற கொல்கத்தா அணித் தலைவர் ஷ்ரேயஸ் ஐயரை தக்கவைக்கவில்லை.
தக்கவைக்கப்பட்ட வீரர்களில் மொத்தம் 36 இந்திய வீரர்கள் மற்றும் 10 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். அதிலும் சன்ரைசஸ் ஹைதராபாத் அதிகபட்சம் மூன்று வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்ததோடு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இருவரை தக்கவைத்தது.
தக்கவைக்கப்பட்டிருக்கும் வீரர்களைப் பார்க்கும்போது எதிர்பார்த்தது போன்று அதிகப்படியாக 28 துடுப்பாட்ட வீரர்கள், 11 பந்துவீச்சாளர்கள் மற்றும் 7 சகலதுறை ஆட்டக்காரர்கள் அடங்குவர். தக்கவைக்கப்பட்ட வீரர்களில் அதிக விலை கொடுக்கப்பட்ட வீரராக தென்னாபிரிக்காவின் ஹெயின்ரிச் கிளாசன் இருக்கிறார். அவர் 23 கோடி ரூபாவுக்கு தக்கவைக்கப்பட்டார். அடுத்ததாக விராட் கொஹ்லி மற்றும் நிகலஸ் பூரன் ஆகினோர் தலா 21 கோடிக்கு தக்கவைக்கப்பட்டனர்.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் எஞ்சியிருக்கும் பணம் ஒவ்வொரு அணிக்கும் முக்கியமானது. ஏனென்றால் அப்போது தான் அடுத்து வரும் மெகா ஏலத்தில் நல்ல வீரர்களை வாங்க முடியும்.
குறிப்பாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் ஆறு வீரர்களை தக்கவைக்க முடியும் என்ற நிலையில் அதனை உச்சபட்சமாக பயன்படுத்தி கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஆறு வீரர்களை தக்கவைத்தன. அதுவே பஞ்சாம் கிங்ஸ் இரு வீரர்களையே தக்கவைத்தது. எனவே அந்த அணி மெகா ஏலத்தில் அதிக வீரர்களை வாங்க வேண்டி இருக்கும்.
இதற்கு அமைய பஞ்சாப் கிங்ஸ் அதிக பணத்துடனேயே அடுத்து மெகா ஏலத்துக்குச் செல்லப்போகிறது. அந்த அணியிடம் கையிருப்பில் இருக்கும் பணம் 110 கோடி ரூபா. இதற்கு அடுத்து றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரிடம் 83 கோடி ரூபாவும், டெல்லி கெபிடல்ஸிடம் 73 கோடி ரூபாவும் உள்ளது. இதில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி குறைவான தொகையாக 41 கோடி ரூபாவுடனேயே மெகா ஏலத்திற்கு வரும்.
மெகா ஏலத்தை சரியாக பயன்படுத்தினாலேயே மைதானத்தில் சாதிப்பது சாத்தியமாகும். அதற்கு கைவசம் இருக்கும் பணத்தை விடவும் ஏலத்தில் தமக்குத் தேவையான வீரரை தந்திரமாக வாங்குவது தான் முக்கியம்.