இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த நல்லிணக்கத்துடன் செயற்படும் அரசாங்கத்தின் தொலை நோக்கு கொள்கைகளை ஏற்றுக் கொண்டதால் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட தாம் முன்வந்ததாக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் மருதை சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கடந்த 70 வருடங்களுக்கு மேலாக நாட்டு மக்களை ஏமாற்றிவந்த அரசியல் தலைமைத்துவத்தின் செயற்பாடுகளை நன்கறிந்ததாலேயே தேசிய மக்கள் சக்தி தலைமையிலான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவு வழங்கியதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் வரலாற்றில் சமீபத்திய ஜனாதிபதித் தேர்தல் முக்கியமானது. தேர்தல் முடிந்தபின்னர் வன்முறைகள் ஏற்பட்ட வரலாறும் உண்டு. விசேடமாக தமிழ் பேசும் மக்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் உண்டு. இக்காலப்பகுதியில் வீடுகளிலேயே சில வாரங்கள் இவர்கள் முடங்கியிருக்கும் நிலை இருந்தது. ஆனால் இம்முறை அந்த நிலை எதுவும் ஏற்படவில்லை. தேர்தலுக்குப் பின்னர் இரத்தக்களறி ஏற்படும் என்றும் சிலர் விசமப் பிரசாரம் செய்தனர். அவை எதுவும் ஏற்படாத வகையில் கட்சியின் நடவடிக்கைகள் சிங்கள மக்களையும் கவர்ந்தன. இதனால் வரலாற்றில் முதல் தடவையாக வன்முறையற்ற தேர்தலாக இது அமைந்ததை குறிப்பிட வேண்டும். பொதுமக்களும் தற்பொழுது புதிய திசையை நோக்கிய இந்த அரசியல் பயணத்தில் ஈடுபாடு கொண்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏற்றுமதி தொழில் துறையில் என்னைப்போன்ற சாதாரண தொழில் முயற்சியாளர்கள் சிரமங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது. இந்த சிரமங்களை களைந்து நேர்மையான தொழில் முயற்சிக்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்த விடயங்களை அவர் வர்த்தக சம்மேளனத்திடம் விபரித்துள்ளதை நீங்கள் அறிவீர்கள் என்றும் கூறினார்.
கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான இவர், தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
இவர் ஒரு வர்த்தகர். உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இடதுசாரி கொள்கைகையில் நீண்டகாலமாக ஈடுபாடுள்ள இவர், உண்மையிலேயே இடதுசாரிக் கொள்கையை முன்னிலைப்படுத்தி செயல்படும் கட்சியாக தேசிய மக்கள் சக்தியை அடையாளப்படுத்தினார்.
தேசிய மக்கள் சக்தியின் முக்கிய கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தற்பொழுது முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் பாராட்டத்தக்கவை. இதன் காரணமாகத்தான் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் விசேடமாக வத்தளை தேர்தல் தொகுதியில் பெரும்பாலான மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கேள்வி : ஜனாதிபதி தலைமையிலான சமகால அரசாங்கம் பதவியேற்ற சில தினங்களில் முட்டை விலை அதிகரித்தது. அதேபோன்று தேங்காய் விலையும் அதிகரித்தது மாத்திரமின்றி அரிசிக்கும் தட்டுப்பாடு என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சில அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனரே?
பதில்: பொதுவாக பண்டிகைக்காலம் நெருங்கும் போது இவ்வாறான நிலை ஏற்படுவது வழமை. ஆனால் இவர்கள் தமது அரசாங்க நிருவாகக் காலப்பகுதியில் இவ்வாறான நிலை எப்பொழுதும் ஏற்படவில்லை என்பது போன்று தற்போது பேசுகின்றனர். இந்த விடயங்களில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க துரிதமாக செயல்பட்டுள்ளார்.
சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியதையடுத்து கால்நடைகளுக்கான தீவனத்தின் விலை குறைவதால் முட்டையின் விலை அதிகரிக்காது என கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் திருமதி ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். முட்டை உற்பத்திக்கான விலையில் 80-–90 வீதமான தாக்கத்திற்கு கால்நடைத் தீவனத்தின் விலை அதிகரிப்பே காரணம் என்று குறிப்பிட்டுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதுபோன்றே அரிசி விடயத்திலும் விரைவான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார். 4 இலட்சம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கான வசதிகளை நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சிய சாலையில் விரிவுபடுத்துமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பீ.என்.எம். விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பதவியில் இருக்கும் போது ஒன்றையும் இல்லாத போது வேறுவிதமாக கூறுவதன் அர்த்தத்தையும் மக்கள் புரிந்துகொள்வார்கள்.
கேள்வி : நீங்கள் வர்த்தகத் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளீர்கள். தேசிய மக்கள் சக்தி ஏனைய அரசியல் கட்சிகளிலும் பார்க்க முற்போக்கு சிந்தனைகளுடன் செயல்படுகிறது. மதுபானசாலை அனுமதிப்பத்திரம் அல்லது கட்டுமான ஒப்பந்தங்கள் முதலானவற்றை இந்தக் கட்சியினூடாக பெற்றுக் கொள்ள முடியாது. அப்படியிருந்தும் நீங்கள் இக்கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளீர்களே?
பதில் : இக்கட்சியில் கட்டுப்பாடுகள் அதிகம் அதேபோன்று ஒழுக்க அரசியலும் உண்டு. இதற்கு மேலாக மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். விசேடமாக தமிழ், முஸ்லிம் என வேறுபாடின்றி நாட்டு மக்கள் வாழவேண்டும் என்பதில் தெளிவான கொள்கையை கட்சி கொண்டிருப்பதாலேயே தொண்டு அடிப்படையில் இக்கட்சியின் கீழ் போட்டியிடுகின்றேன்.
கேள்வி : இதற்கு முன்னர் வத்தளைப் பிரதேசத்தில் ஏதேனும் சமூக அமைப்புக்களில் அங்கம் வகித்துள்ளீர்களா?
பதில் : ஆம். ஆலய நிர்வாக சபையிலும் பொதுச் சேவையில் ஈடுபடும் சமூக அமைப்புக்களிலும் முக்கிய பங்கு வகித்துள்ளேன். இதன் மூலம் மக்கள் விடுதலை முன்னணியுடன் தொடர்பு ஏற்பட்டது. தற்போதைய அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத்துடன் இணைந்து கம்பஹா மாவட்டத்தில் செயல்படுவதற்கான வசதி வாய்ப்பு கிடைத்தது என்று அவர் தெரிவித்தார்.
கேள்வி : வத்தளைப் பிரதேசத்தில் நீண்ட காலமாக தமிழ் பாடசாலையொன்றில் பிரச்சினை நிலவி வந்தது. இதனையே அரசியலாக பல கட்சிகள் முன்னெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதா?
பதில் : ஆம். பாடசாலைக்கான காணி கிடைத்தது. அதில் தரம் 5 வரையில் மாணவர்கள் கல்வி பயிலுவதற்கு வாய்ப்பும் கிடைத்துள்ளது.
கேள்வி : தரம் 05இற்கு மேல் கல்வியைத் தொடர வேண்டுமாயின் இங்குள்ள தமிழ்ப் பிள்ளைகள் கொழும்பு போன்ற வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. விசேடமாக பாமர மக்களின் பிள்ளைகள் இதனால் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவர். இதற்கு ஏற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா?
பதில் : எமது கட்சி இது தொடர்பில் திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது. வசதிவாய்ப்பற்ற பிள்ளைகள், இந்த பாடசாலையில் படிப்பதற்கான வசதிகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் இதற்கான நடவடிக்கை நிச்சயம் மேற்கொள்ளப்படும்.
பாமர மக்களின் பிள்ளைகளின் கல்விக்கென கட்சி தனியான திட்டத்தை வகுத்துள்ளது. வத்தளையில் மாத்திரமன்றி முழு நாட்டுக்குமான திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும்.
கேள்வி : கம்பஹா மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இதுவரை பாராளுமன்றத்தில் இடம்பெறவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் இதே போன்ற பாடசாலைப் பிரச்சினையை முன்வைத்து விசேடமாக தமிழ்ப் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட்டனர் அல்லவா?
பதில் : ஆம். மக்களின் தேவைகளுக்கு இவர்கள் விசேடமாக எதுவும் செய்யவில்லை. வாக்குகளைப் பெறுவதிலேயே கவனம் செலுத்தினர். தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைத்ததாக தெரியவில்லை.
கேள்வி : உங்களுக்கும் இந்தக் கட்சிக்கும் இடையில் எப்படி தொடர்பு ஏற்பட்டது?
பதில் : வர்த்தகர் என்ற ரீதியில் வத்தளையில் உள்ள ஆலயங்களில் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபாடு இருந்தது. பல சமூக சேவைகளை இதனூடாக முன்னெடுத்திருந்தேன்.
கட்சியின் பிரதேச சபை உறுப்பினருடனான நல்லுறவும் எனக்கிருந்தது. ஜனாதிபதித் தேர்தலின்போது கட்சியின் சிறந்த கோட்பாடுகளுக்கு அமைவாக ஒன்றிணைந்து செயற்பட்டோம். இதனால் கட்சிக்கும் எனக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டது. இனங்களுக்கிடையிலான நல்லுறவின் அடிப்படையில் என்னை கட்சி தேர்வு செய்தது.
கேள்வி : கொழும்புக்கு வரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் கொழும்பில் சாதாரண தொழில்களில் ஈடுபட்டபோதிலும் படிப்படியாக வளர்ச்சியடைந்து பல வர்த்தக நிலையங்களில் உரிமையாளர்களாக மேம்பட்ட வரலாறும் உண்டு. ஆனால் தற்போதைய இந்தக் காலப்பகுதியில் கொழும்புக்கு வந்த பலர் மதுபோதைக்கு அடிமைப்பட்டும் தவறான வாழ்க்கை முறையில் தமது வாழ்க்கையை சீரழித்துக்கொண்டிருக்கின்றனர். விசேடமாக வத்தளைப் பிரதேசத்தில் சுமார் 60 குடும்பங்கள் 6 அல்லது 7 அடி பரப்பளவை கொண்ட அறைகளில் குடும்பமாக கஷ்டப்படுவதாக சமுர்த்தி அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளீர்களா?
பதில் : மலையகத்தில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வரும் இளைஞர்கள், யுவதிகள் தமது வாழ்க்கையை தவறவிடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றனர். முன்னைய காலப்பகுதியிலும் பார்க்க மாறுபட்ட காலத்தில் இவர்கள் வழிதவறுகின்றனர். இவ்வாறான நிலை நாடு முழுவதும் நீண்டுள்ளது.
இவர்களது குறைகளை தீர்ப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதுமாத்திரமன்றி ஒவ்வொரு தொகுதியிலும் தொகுதி சபை செயல்படுகிறது. இதனூடாக இவர்களது குறைகளை தீர்க்க நானும் முயற்சித்து வருகின்றேன்.
கேள்வி : உங்களது சகோதரர் சமசமாஜக் கட்சியின் தலைவர் என்.எம்.பெரேராவுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக குறிப்பிட்டீர்கள். அதன் மூலமாகவே உங்களுக்கும் இடதுசாரி கொள்கையில் நாட்டம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டீர்கள். கலாநிதி என்.எம்.பெரேராவின் பொருளாதார திட்டங்கள் தொடர்பில் கூறுவதாயின்?
பதில் : ஆம். எதனைக் குறிப்பிடுகின்றீர்கள்? 1970ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் அப்போதைய பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையில் சமசமாஜக் கட்சியும் இணைந்து அரசாங்கம் அமைத்திருந்தது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக சில முற்போக்குத் திட்டங்கள் அந்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டன.
விசேடமாக நிதியமைச்சராக இருந்த கலாநிதி என்.எம்.பெரேரா முற்போக்கு திட்டங்களைக் கொண்ட வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். இதில் இறக்குமதிக்கு முக்கியத்துவம் அளிக்காமல் உள்ளுர் உற்பத்திக்கு முதலிடம் வழங்கப்பட்டது.
அதுமாத்திரமன்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கான சில அதிரடி நடவடிக்கைகளை அவர் அப்போது மேற்கொண்டார்.
கேள்வி : தற்போதைய ஜனாதிபதி முற்போக்கு சிந்தனையுடனான இடதுசாரி கொள்கையுடன் செயற்பட ஆரம்பித்துள்ளார்.இந்த அரசாங்கமும் அவ்வாறான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமா?
பதில் : காலத்துக்கு ஏற்ற உலக நடப்புக்கு ஏற்ற வகையில் அபிவிருத்திப் பொருளாதார கொள்கைகளை சமகால அரசாங்கம் செயல்படுத்தும். இதில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கம் செயல்படுமென்று திடமாக நம்புகின்றேன்.
கேள்வி : நீங்கள் மலையகத்தைச் சார்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டீர்கள். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கும். ஏனைய பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் தீர்வு காணுமா?
பதில் : ஆம். புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் இவர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி மலையக மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் நிச்சயம் திட்டங்களை மேற்கொள்ளும்.
நேர்காணல் ஏ. கே. எம். பிள்ளை