ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து, பொதுத்தேர்தலுக்கான பிரசாரங்களில் அரசியல் கட்சிகள் யாவும் தீவிரம் காட்டியிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அமைப்பு மாற்றம் (சிஸ்டம் சேஞ்ச்) குறித்து தேர்தல் மேடைகளில் அதிகம் பேசப்படுகின்றது.
2022 ஆம் ஆண்டு அரகல மக்கள் போராட்டம் முதல் ஜனாதிபதித் தேர்தல் வரையில் அமைப்பு மாற்றம் பற்றிய எதிரொலிப்புகள் இருந்து வந்தன. குறிப்பாக அமைப்பு மாற்றமொன்றை நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள் என்பதை நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் தெளிவாக எடுத்துக் காட்டின.
பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அமைப்பு மாற்றத்துக்கான தேவையை மக்கள் வெகுவாக உணர்ந்தனர். இதுவரை காலமும் தம்மை ஆட்சிசெய்த அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் தமக்காக எடுத்த தீர்மானங்கள் சரியானதாக இல்லையென்பதால், தேவையற்ற விதத்தில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டு விட்டது என்ற கோபமே இதற்கான பிரதான காரணமாகும்.
இந்தக் கோபம் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் மீதான வெறுப்பாக மாறி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அது தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு விட்டது. இந்த வெளிப்பாட்டின் காரணமாகவே தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுர குமார திசாநாயக்கவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த அமைப்பு மாற்றத்தின் மூலம் மக்கள் எதிர்பார்த்த விடயங்களில் அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகள், அரசியல்வாதிகளின் ஊழல், திறமையற்ற தீர்மானங்கள் எனப் பட்டியல் நீளமானது.
இதுவரை ஆட்சிசெய்த ஆட்சியாளர்கள் இவற்றை நிறைவேற்றவில்லையென்பதால், மாற்றமொன்றை வேண்டியும், தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவார்கள் என்ற எண்ணத்திலும் தேசிய மக்கள் சக்திக்கு நாட்டு மக்கள் வாக்களித்திருந்தனர்.
அரசியல்வாதிகளின் சிறப்புச் சலுகைகள்:
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு காணப்படுகின்றது. இவ்வாறான பின்னணியிலேயே பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதற்கான பெரும்பான்மையைப் பாராளுமன்றத் தேர்தலில் தமக்கு வழங்க வேண்டும் எனத் தேசிய மக்கள் சக்தி கோரி வருகின்றது.
இருந்தபோதும், இதுவரை காலமும் காணப்பட்ட சிறப்புச் சலுகைகளுடன் கூடிய அரசியல் கலாசாரத்தைக் கைவிடுவதற்குத் தாம் தயார் இல்லை என்பதை நீண்ட காலமாக அரசியலில் இருக்கும் சிரேஷ்ட தலைவர்கள் உள்ளிட்டவர்கள் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதிகளைப் பராமரிப்பதற்கு நாட்டு மக்களின் பணம் வீணான முறையில் செலவு செய்யப்படுகின்றது. இதனை முற்றாக நிறுத்துவோம் என தேசிய மக்கள் சக்தி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூறியிருந்தது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதும், சலுகைகளைக் கைவிட்டு சாதாரண மக்கள் பிரதிநிதிகளாக சமூகத்தில் வாழ்வதற்கு அவர்களோ தயாராகவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறிய கருத்துகள் இதனை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளன. “முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான சிறப்புச் சலுகைகளை அரசாங்கம் ஏன் குறைக்க நினைக்கின்றது?” என ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பியிருந்தார்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த தலைவர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆபத்து இருப்பதாகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவருக்கும் ஆபத்து இருப்பதாகவும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவர்களின் சலுகைகளைக் குறைப்பதற்கான நோக்கம் என்ன என்ற ரணிலின் கேள்வி தற்பொழுது பேசுபொருளாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள் மாத்திரமன்றி, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் பல்வேறு சிறப்புச் சலுகைகளை இலக்குவைத்தே அரசியலில் இருக்கின்றனர்.
குறிப்பாக அமைச்சர்களுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லங்கள், வாகனங்கள், எரிபொருள் கோட்டாக்கள் என அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளை அடுக்கிக்கொண்டே செல்ல முடியும். இவ்வாறு சலுகைகளை எதிர்பார்த்து அரசியலுக்கு வருவதாலேயே மக்களுக்கு சார்பான முடிவுகளை அவர்களால் எடுக்க முடியாதிருக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதிகளை ஏன் மக்கள் பராமரிக்க வேண்டும்?
முன்னாள் ஜனாதிபதிகளைப் பராமரிப்பது மற்றும் மக்களின் பணத்தில் அவர்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்குவதற்கான தேவை என்ன உள்ளது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார். காலி மாவட்டம் பத்தேகமவில் நடைபெற்ற பொதுத்தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த அவர், ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலிளிக்கும் வகையில் இவ்விடயத்தைத் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி அநுர உரையாற்றுகையில், ‘அரசியலை வியாபாரம் என்ற நிலையிலிருந்து பொதுமக்கள் சேவை என்ற நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இதற்கான அடித்தளத்தைத் தேசிய மக்கள் சக்தி இட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புச் சலுகைகள் குறைக்கப்பட வேண்டும். அவர்களுக்கான செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும். ஜனாதிபதிக்காக மேற்கொள்ளப்படும் செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளுக்காக மேற்கொள்ளப்படும் செலவுகள் முற்றிலும் குறைக்கப்பட வேண்டும். இவற்றைப் பற்றி ஆராய்ந்து மாற்று நடவடிக்கை எடுக்க நாம் தற்பொழுது குழுவொன்றை அமைத்துள்ளோம். சில சிறப்புச் சலுகைகள் சுற்றுநிருபங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. சில சலுகைகள் சட்டங்களின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன, மேலும் சில அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன. நாம் அமைத்துள்ள குழு உரிய மதிப்பீடுகளை மேற்கொண்டு ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களைச் செய்து இந்தச் சலுகைகளை நிறுத்தும். இதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதிகளை பொதுமக்களின் பணத்தில் பராமரிப்பதை முற்றாக நிறுத்துவோம். தொடர்ந்தும் மக்களின் பணத்தில் இதனைச் செய்ய முடியாது.
இவை சிறிய தொகை அல்ல. 163 பாதுகாப்பு அதிகாரிகள், அம்பியூலன்ஸ், பீ.எம்.டபிள்யூ உள்ளிட்ட 16 வாகனங்களை அவர்கள் கோருகின்றனர். வீட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமான சமையல்காரர்களைக் கோருகின்றனர். இப்படி நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது. அவ்வாறு செய்வது அரசியல் சிறப்புரிமை என அவர்கள் கருதுகின்றனர். அரசியல் செய்தோம், ஜனாதிபதியானோம், ஜனாதிபதியான பின்னர் தம்மைப் பராமரிக்க வேண்டியது மக்களின் பொறுப்பு என அவர்கள் நினைக்கின்றனர். அவர்களைப் பார்ப்பது அல்லது பராமரிப்பது மக்களின் வேலையல்ல. விரைவில் அவற்றை நிறுத்துவோம்.
அனைத்துத் தலைவர்களுக்கும் கேட்கும்படியாக நான் இதனைக் கூறுகின்றேன். அது பழிவாங்கலா, இல்லாவிடில் எவர் மீதாவது காணப்படும் கோபத்தில் எடுக்கப்படும் முடிவா? இல்லை. ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல்வாதிகளை கௌரவ என்ற விழிக்கின்றோம். அவ்வாறு நாம் விழிப்பது போன்று இது கௌரவமான சேவையாக இருக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
நாட்டைப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டேன் எனக் கூறிக்கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பதவியிலிருந்து சென்ற பின்னர் தனக்கு சிறப்புச் சலுகை தேவை, பாதுகாப்பு அதிகாரிகள், வாகனங்கள், குடைகள், சமையல்காரர்கள் தேவை என்ற கோரிக்கையை விடுத்திருந்தார். அதேபோல, தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக் குறைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் தெரிவித்திருந்தார். எனினும், மஹிந்தவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புக் குறைக்கப்படவில்லையென ஜனாதிபதி செயலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி தவறானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, ஜனாதிபதிக்கான ஓய்வூதியம், கொழும்பு 07 விஜயராம வீதியிலுள்ள உத்தியோகபூர்வ இல்லம் என்பன அவருக்கு வழங்கப்பட்டிருப்பதுடன், பென்ஸ் ரக கார், பென்ஸ் ரக ஜீப், லான்ட் குரூஸர் வாகனம், மாதாந்தம் 1950 லீற்றர் எரிபொருள், மூன்று சாரதிகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.
இராணுவ வீரர்களில் மூன்று கொமாண்டோ அதிகாரிகள், 37 ஏனைய சிப்பாய்கள் மற்றும் 4 இதர பிரிவு அதிகாரிகளும் 19 இதர நிலைகளும் இருப்பதோடு இவ்வாறு மொத்தம் 07 இராணுவ அதிகாரிகள் மற்றும் 56 ஏனைய சிப்பாய்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவ வீரர்களுக்கு மேலதிகமாக 180 இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 29 பொலிஸ் சாரதிகளும் உள்ளடங்குகின்றார்கள் என்ற பட்டியலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் மாறுபட்டவர்களா?
இந்த விடயத்தில் ஏனைய நாடுகளின் தலைவர்கள் காண்பித்த முன்மாதிரியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தலைவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் மத்தியில் சுதந்திரமாக நடமாடக் கூடியவர்களாகவும், சிறப்புச் சலுகைகள் அல்லது வசதிகளைக் கோராதவர்களாகவும் உள்ளனர்.
உண்மையில், சுதந்திரத்திற்குப் பிந்திய உடனடியான அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆரம்பத்தில் சிறப்புச் சலுகைகள் எதுவும் பெரிதாக இருக்கவில்லை. அன்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஓய்வு பெற்ற பின்னர் வாடகை வீடுகளில் வாழ்ந்து, வருமானத்துக்கு வழியின்றியும் வாழ்ந்துள்ளனர்.
அன்றைய காலத்தில் சில எம்.பி.க்கள் ஏழைகளாக இறந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகளைப் பற்றிய பொதுமக்களின் பொதுவான பார்வை இதுதான்.
ஒரு காலத்தில் பிரதமராகப் பதவி வகித்த கலாநிதி டபிள்யூ. தஹாநாயக்க தனது காலி தொகுதியில் இருந்து புகையிரதத்தில் பாராளுமன்றம் சென்றார்.
1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன பதவியேற்றவுடனேயே பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளத்தில் பாரிய அதிகரிப்பை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அத்துடன் நிற்காமல், அவர் தனது தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகளையும் வழங்கினார். அவ்வாறு செய்வதன் ஊடாக அமைச்சர்களோ பாராளுமன்ற உப்பினர்களோ ஊழலில் ஈடுபட மாட்டார்கள் என்பது அவருடைய தர்க்கமாக இருநதது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள் வெளிநாட்டில் வீடுகள் மற்றும் சொத்துக்களை வைத்திருக்கும் அளவிற்கு அவரது ஆட்சியின் கீழ் ஊழல்கள் அதிகரிக்கத் தொடங்கின. அதனைத் தொடர்ந்தே ஆளும் கட்சியில் இருந்தால் அதிக பணத்தை ஈட்டமுடியும் என்ற எண்ணப்பாட்டுடன் அனைத்து அரசியல்வாதிகளும் செயற்படத் தொடங்கினர்.
ஜே.ஆர் தொடக்கி வைத்த இந்தச் சலுகை அரசியல் இன்னமும் தொடர்ந்து வருகின்றது. இதில் முன்னாள் ஜனாதிபதிகள் மாத்திரமன்றி அரசியல்வாதிகள் அனைவரும் சலுகைகளுக்காகவே பெருந்தொகை பணத்தை தேர்தலில் செலவுசெய்து அரசியலுக்குள் நுழைகின்றனர். தேர்தலில் செலவிட்ட தொகையைவிட பல மடங்கு சம்பாதிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான அரசியல்வாதிகளின் குறிக்கோளாக இருக்கின்றது.
இந்த அரசியல் போக்கை மாற்றி மக்களுக்கு சேவையாற்றும் அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். மக்கள் வேண்டிநிற்கும் இந்த அமைப்பு மாற்றத்தை ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகின்றது என்பதையே அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.