தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல்வாதிகளுக்கு சுதந்திரம் காணப்படுவதைப் போன்று வாக்காளர்களுக்கும் தமக்கான தெரிவுகளை மேற்கொள்ள சுதந்திரம் காணப்பட வேண்டும். இலங்கையில் இந்த நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார். தபால்மூல வாக்களிப்பு மற்றும் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் அரசாங்க ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கே: 2024 பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புத் தொடர்பில் கூறுவீர்களா?
பதில்: இம்முறை பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்காக 759,083 பேர் பதிவு செய்திருந்ததுடன், இவர்களில் 21,181 பேருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. சரியான தகவல்களை வழங்காமை ஒரு காரணம். சில அரசாங்க சேவையில் உள்ளவர்களைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதில்லை. அவ்வாறானவர்கள் விண்ணப்பித்திருந்ததும் மற்றொரு காரணம். இத்தகைய பல்வேறு காரணங்களுக்காக தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. பெரும் எண்ணிக்கையான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கு என்ன காரணம் எனப் பலரும் கேட்டிருந்தனர். நான் ஏற்கனவே குறிப்பிட்ட விடயங்களே இதற்குப் பிரதான காரணங்களாகும்.
தபால்மூல வாக்களிப்புக்குத் தகுதிபெற்று கடந்த புதன், வெள்ளி மற்றும் திங்கள் (நாளை) ஆகிய மூன்று தினங்களில் தமது வாக்குகளைப் பதிவுசெய்ய முடியும். இந்த மூன்று தினங்களிலும் வாக்களிக்க முடியாதவர்கள் தாம் பணியாற்றும் மாவட்டங்களில் எதிர்வரும் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்களில் அமைக்கப்படும் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க முடியும். இதற்கான முழுமையான பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எந்தச் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. மாவட்ட செயலகங்களில் பாதுகாப்பான முறையில் அவை வைக்கப்பட்டிருக்கும். சுயாதீனமான தேர்தலை நடத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. கடந்த தேர்தலில் இதனை நன்கு உணர முடிந்தது. இம்முறை தேர்தலிலும் அவர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும் என நம்புகின்றோம்.
கே: தேர்தல் பிரசாரங்களுக்காக சுவரொட்டிகளின் பயன்பாடு அதிகமாக உள்ளது. தேர்தல் குறித்த சட்டங்கள் பற்றி அறிந்துகொள்ளாமலா இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்?
பதில்: தேர்தல் குறித்த சட்டத்தில் சுவரொட்டிகளை ஒட்ட முடியாது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி, வேட்பாளர் தனக்காக வாக்குக் கேட்டுச் செல்ல முடியாது என்பதும் சட்டத்தில் உள்ளது. தேர்தல் நடைபெறும் நாளில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட முடியாது. தேர்தலின் போது வாக்குக் கோரி வேட்பாளரின் குடும்பத்தினர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட முடியாது. இதனால்தான் சிலர் வாக்குக் கோரிச் செல்வதில்லை. தமது வீட்டுக்கு அழைப்பார்கள். தேர்தல் காலத்தில்தான் இதுவரை கண்டிராத உறவினர்கள் பலரும் வேட்பாளர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். உபசாரம் மேற்கொள்ள முடியாது. கண்டி மாவட்டத்தில் தேர்தல் காலத்தில் உணவு வழங்குவது ஒரு வழமையாக மாறியுள்ளது. இது தொடர்பில் கலந்த காலத்தில் நாம் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு, அவ்வாறான செயற்பாடுகளைத் தடுத்துள்ளோம். ஏனைய மாவட்டங்களைவிட இங்கு இந்த விடயம் அதிகமாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அதேபோல, சுவரொட்டிகளை அச்சிடுவதாயின் அதனை அச்சிட்டவர் உள்ளிட்டவர்களின் விபரங்கள் அவற்றில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல, பிரசாரங்களுக்குப் பயன்படுத்தும் வாகனங்களைச் சுற்றி ஸ்டிக்கர் ஒட்டும் நடைமுறையொன்றும் காணப்படுகின்றது. குறிப்பாகப் பின்பக்கக் கண்ணாடியை மூடும் வகையிலும் சிலர் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பார்கள். இது தேர்தல் சட்டத்தை மாத்திரமன்றி, சாதாரண போக்குவரத்துச் சட்டத்திற்கும் முரணானது.
கே: தேர்தல் தொடர்பில் எமது நாடு சிறிது சிறிதாக உயர்ந்ததொரு நிலைக்குச் செல்கின்றதென எண்ணத் தோன்றுகின்றது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: தேர்தல்கள் ஆணைக்குழு என்ற ரீதியில் நாமும் இவ்வாறானதொரு நிலைமையையே எதிர்பார்க்கின்றோம். அரசியல்வாதிக்குப் போட்டியிடுவதற்கு சுதந்திரம் காணப்படுவது போன்று, வேட்பாளர்களுக்கும் தமது தெரிவுகளை மேற்கொள்வதற்கான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். தேவையற்ற விதத்தில் அவர்கள் மீது அழுத்தங்களை அல்லது தாக்கத்தைச் செலுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்பதையே நாமும் உண்மையில் எதிர்பார்க்கின்றோம். சுதந்திரம் என்பது மற்றொருவரின் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். ஒரு வேட்பாளரின் சுதந்திரமான செயற்பாடு என்பது மற்றொருவரின் சுதந்திரத்தைப் பாதிப்பதாக அமைய முடியாது. வேட்பாளர்கள் அனைவரும் சமமான போட்டிச் சூழலில் போட்டியிடக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
கடந்த கால தேர்தல் அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும்போது எமது நாட்டின் வாக்காளர்கள் மாற்றமொன்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதற்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். தகவல்கள் உடனடியாக மக்களைச் சென்றடையுமாயின் வாக்காளர்கள் தெளிவு பெறுவார்கள். இந்த மாற்றத்துக்கு ஊடகங்கள் பாரிய பங்களிப்புச் செலுத்தியுள்ளன என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதேநேரம், தேர்தல் வன்முறைகள் குறைந்திருக்கும் இவ்வேளையில், ஊடகங்கள் மூலமான வன்முறை அதிகரித்துள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும். பாரம்பரிய ஊடகங்கள் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், சமூக ஊடகங்களால் இது மீறப்படும் நிலைமையே காணப்படுகின்றது. ஊடகங்களுக்கு வழிகாட்டல்களை நாம் வழங்கியிருப்பதுடன், ஊடகங்களைக் கண்காணித்தும் வருகின்றோம்.
கே: தேர்தல் செலவினத்தைக் கட்டுப்படுத்தும் சட்டம் பற்றி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகம் பேசப்பட்டது. சில வேட்பாளர்கள் செலவு குறித்த அறிக்கையை முன்வைக்கவில்லையென்றும் கூறப்பட்டது. இதுபற்றி உங்கள் கருத்து?
பதில்: தேர்தல் முடிவடைந்த 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் செயலாளர்கள் செலவு அறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவர்களில் 13 பேரிடமிருந்து இன்னமும் இந்த அறிக்கை கிடைக்கவில்லை. இவ்வாறானவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் அதிகாரம் எமக்கு இல்லை. வழக்குத் தாக்கல் செய்வதற்காக பொலிஸாரிடம் நாம் இவற்றை ஒப்படைக்க முடியும். நாம் இவற்றை பொலிஸ்மா அதிபரிடம் ஆற்றுப்படுத்தியதும், அவரின் தரப்பிலிருந்து விசாரணைகளை நடத்தி சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
கே: இந்தச் சட்டம் பொதுத்தேர்தலுக்கும் ஏற்புடையதா?
பதில்: ஆம், சர்வஜன வாக்கெடுப்பைத் தவிர ஏனைய சகல தேர்தலுக்கும் இந்தச் சட்டம் ஏற்புடையதாகும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், கட்சிகளாயின் செயலாளர்களும், சுயாதீனக் குழுக்களாயின் அதன் தலைவர்களும் இந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வேட்பாளர் ஒருவர் செலவு செய்யக் கூடிய தொகையை நாம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைய இந்தத் தொகையில் வேறுபாடுகள் இருக்கின்றன. தேர்தல் முடிவடைந்ததும் டிசம்பர் மாதம் 05ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து வேட்பாளர்களும் தமது செலவு அறிக்கைகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.