தேர்தலில் வெற்றிபெற்றால் தாங்கள் அதிகூடிய முன்னுரிமை அளிப்பது யாழ். மாவட்டத்தின் போதைப் பாவனையை ஒழிப்பதற்குத் தான் என்கிறார் யாழ். மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் க. இளங்குமரன். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில்
வடக்கில் செயலிழந்திருக்கும் தொழிற்சாலைகள் மீள ஆரம்பிக்கப்படுமென்றும் அதற்கான பலமான ஆணையை மக்கள் தர வேண்டுமென்றும் கூறுகின்றார். அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு…
கேள்வி: ஜனாதிபதி தேர்தல்களின் போதும் நீங்கள் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டிருப்பீர்கள். அதன் போது யாழ். மாவட்டத்தில் இருந்த மக்கள் ஆதரவுக்கும் இப்போது இருக்கும் மக்கள் ஆதரவுக்கும் என்ன வித்தியாசத்தை காண்கிறீர்கள்?
பதில் : நிச்சயமாக நிறைய வேறுபாடு இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வடக்கு மக்களில் அநேகமானோருக்கு அநுர குமார திசாநாயக்க யார்? திசைகாட்டி என்றால் என்ன? என்பது பற்றி தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது அநேகருக்கு அது பற்றி தெரிந்திருக்கிறது. ஜனாதிபதிக்கான வரவேற்பு பெருமளவில் அங்கு அதிகரித்திருக்கிறது.
கேள்வி: பொதுவாகவே ஜேவிபி என்றால் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் தான் இருந்தது. இன்னமும் அவ்வாறு தப்பான அபிப்பிராயங்களோடுதான் தான் வடக்கு மக்கள் இருக்கிறார்களா?
பதில்: இதுவரைகாலமும் ஜேவிபி பற்றி அல்லது தேசிய மக்கள் சக்தி பற்றி வடக்கு தமிழ் மக்களிடையே தப்பபிப்பிராயம்தான் நிலவியது. ஆனால் இப்போது ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்னர் அவர்கள் அநுர குமாரதிசநாயக்க யார் ஜேவிபியின் கட்டமைப்பு என்ன என்பதை தேட ஆரம்பித்திருக்கிறார்கள். எங்களை நாடி வர ஆரம்பித்திருக்கிறார்கள்.
கேள்வி: தெற்கு மக்கள் அடிக்கடி தேர்தல்களில் தங்கள் விருப்பினை மாற்றியிருக்கிறார்கள். முதலில் மஹிந்த ராஜபக்ஷ பின்னர் மைத்திரிபால சிறிசேன அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ என்பதாக அவர்கள் இலகுவாக தங்கள் தேர்வை மாற்றியிருந்திருக்கிறார்கள். ஆனால் வடக்கின் மக்கள் அவ்வாறானவர்கள் அல்ல. அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது தமிழரசுக் கட்சி கைகாட்டிய வேட்பாளருக்கு தான் இதுவரை வாக்களித்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் தற்போதும் தமிழரசு கட்சி கைகாட்டாத ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றனவா?
பதில்: தெற்கில் நீங்கள் குறிப்பிட்டது போல மாறி மாறி வாக்களித்திருக்கிறார்கள் தான் ஆனால், அவ்வாறு தெரிவு செய்யப்பட்டு வந்தவர்களின் முகங்கள் தான் மாறி இருந்தனவே தவிர, அவர்களின் கொள்கைகளில் மாற்றமில்லை. ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பாரிய ஒரு மாற்றத்தை தெற்கு மக்கள் காண்பித்திருக்கிறார்கள். அதற்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மூன்று சதவீத வாக்குகளை பெற்ற அநுர குமார திசாநாயக்க பாரிய வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் இவரே இம்முறை பாரிய வெற்றி பெற்றிருக்கிறார். மக்கள் தங்கள் வாக்குகளால் புரட்சி செய்திருக்கிறார்கள். தெற்கின் மக்கள் ஜேவிபியை புரிந்து கொண்டது போல, தற்போது ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் அநுர குமார திசநாயக்க காட்டி வரும் பண்புகள், வடக்கு மக்களை அதிக அளவில் ஈர்த்திருக்கின்றது. அவரது தற்துணிவும் அவர் எடுக்கும் முடிவுகளும் வடக்கு மக்களை அதிக அளவில் ஈர்த்துள்ளது. குறிப்பாக வடக்கு மக்கள் நேர்மையின் பக்கம் நிற்பவர்கள். எங்கெல்லாம் லஞ்சம், ஊழலுக்கு எதிரான ஆட்சி நடக்கிறதோ அதற்கு ஆதரவளிப்பார்கள். நாங்கள் பிரசாரத்துக்காக கிராமங்களுக்குச் செல்லும்போது நீங்கள் வரத் தேவையில்லை. நாங்கள் உங்களுக்கு தான் வாக்களிப்போம் என்று அவர்கள் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு அநுர குமார திசநாயக்க என்ற பெயர் மக்கள் உள்ளங்களில் தற்போது பதிந்திருக்கிறது. அவரது பிரதிநிதிகளை வடக்கில் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது. யாழ். மாவட்டத்தில் போதைப் பொருள் தலைவிரித்தாடுகின்றது. வேலைவாய்ப்பின்மை அதிக அளவில் இருக்கிறது வெளிநாட்டு உறவுகள் என்பது பூச்சியமாகவே இருக்கிறது. புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி இளைஞர்களை போதையின் பிடியிலிருந்து மீட்டு வடக்கு மக்களை புத்துணர்ச்சி மிக்கவர்களாக மாற்றுவது எங்கள் நோக்கமாக இருக்கிறது
கேள்வி: வடக்கில் தொழில் வாய்ப்பை அதிகரிப்பதாக நீங்கள் குறிப்பிட்டீர்கள் ஆனால் அங்கு ஏற்கனவே இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் மேற்கொள்ளப்படவிருந்த காற்றாலை மின் உற்பத்தி திட்ட வேலைகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் கிடைக்கின்றன. அப்படியானால் எவ்வாறு அங்கு தொழிற்சாலைகள் உருவாக்கப்படப் போகின்றன?
பதில்: சூழலுக்கு அல்லது மக்களின் வாழ்வியலுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற எந்த ஒரு திட்டத்துக்கும் தேசிய மக்கள் சக்தி இடமளிக்காது.
யாழ்ப்பாணத்தில் யுத்தத்துக்கு முன்பு நிறைய தொழிற்சாலைகள் இயங்கின. குறிப்பாக வடமாகாணத்தை எடுத்துக் கொண்டால் எங்கள் நில வளத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் எட்டரை மடங்கு கடல் வளம் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் வெட்கக்கேடானது என்னவென்றால், இந்த கடல் வளத்தின் மூலம் பெறக்கூடிய உப்பை கூட நாங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம். அந்த உப்பு உற்பத்திக்கு பாரிய அளவிலான தொழில்நுட்பங்களோ, பாரிய வசதிகள் கொண்ட தொழிற்சாலைகளோ தேவையில்லை. ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் செயற்படுத்தினாலே போதும்.
அங்கு பணியாற்றிய அதிகாரிகளிடம் கதைத்த போது, அவர்கள் ஆறு மாதத்துக்கு எங்களுக்கு இந்த உப்பளத்தை தாருங்கள். முழு இலங்கைக்கும் தேவையான உப்பை நாங்கள் உற்பத்தி செய்து தருகிறோம் என்கிறார்கள்.
உப்பளத்தை வெளிநாடுகளுக்கு விற்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிகளையும் நாங்கள் தான் முறியடித்தோம். எங்களது எண்ணம் வேறொன்றும் அல்ல. அதனையே எந்த பேதமும் இன்றி, செய்து காட்டக் கூடியவர்களின் கைகளுக்கு வழங்கி இலங்கைக்கு மாத்திரம் அல்ல, முழு உலகுக்குமே உப்பை ஏற்றுமதி செய்யக்கூடிய ஒரு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான்.
வடபகுதியை முன்னேற்ற குறுகிய கால, இடைக்கால, நீண்ட கால திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றன. யாழ். மாவட்டத்தில் எல்லா இடத்திலும் உள்ள மக்களின் பிரச்சினைகள் ஒன்றாகவே இருப்பதில்லை. நாங்கள் பிரசார வேலைகளுக்காக செல்லும்போது, ஒவ்வொரு மக்களும் ஒவ்வொரு பிரச்சினைகளை சொல்கிறார்கள். சிலர் போதை வஸ்திலிருந்து தங்கள் பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோருகின்றார்கள். சிலர் வாள்வெட்டு கலாச்சாரத்தை அழித்தொழியுங்கள் என்று கேட்கிறார்கள்
எனவே வாள்வெட்டு, போதைவஸ்து கலாசாரங்களை ஒழித்து புதிய தமிழ் உணர்வுள்ள மக்களை உருவாக்குவதே எங்கள் இலக்காக இருக்கிறது.
வடக்கின் மக்கள் பிரதிநிதிகள் இதுவரை காலமும் மக்களுக்கு பெற்று கொடுத்தது ஒன்றே ஒன்றுதான். அதாவது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஆறாக குறைத்ததுதான் அது. இதற்கு என்ன காரணம்? இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமும், அதன் காரணமான புலம்பெயர்வும் தான்.
30 ஆண்டு கால யுத்தத்தினால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வேலைவாய்ப்புக்கு யாழ். மாவட்ட இளைஞர்கள் அல்லாட வேண்டியிருந்தது. இதுவே புலப்பெயர்வுக்கும் வழி வகுத்தது. மக்கள் தொகை குறைய யாழ். மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்தது . யாழ். மாவட்டத்தில் தொழிற்சாலைகள், தொழிற்துறைகள் அதிகரிக்கும் போது வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள் இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்கள் மீண்டும் வடக்கு நோக்கி திரும்பி வர விரும்புவார்கள். இதனால் எங்கள் மக்கள் தொகை கூடும். எங்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை கூட கூடும்.
அந்த இலக்கிய நோக்கி நகர்வோம் என்ற நம்பிக்கை திடமாக இருக்கிறது.
கேள்வி :நீங்கள் தேர்தலில் வெற்றிபெற்றால் நீங்கள் முன்னுரிமை கொடுத்து செயற்படுவது எதுவாக இருக்கும்?
நாங்கள் அதிகூடிய முன்னுரிமை அளிப்பது யாழ். மாவட்டத்தின் போதை பாவனையே ஒழிப்பதற்குத் தான். நாட்டுக்குள் போதைப்பொருள் எவ்வாறு வருகிறது? கடல் மார்க்கமாகவும், ஆகாய மார்க்கமாகவும் தான். எனவே அவை இரண்டையும் பாதுகாப்பதன் மூலம் நாங்கள் போதைப் பொருள் நாட்டுக்கு வருவதை தடுக்கலாம்.
நாங்கள் இரண்டாவதாக முன்னுரிமை அளிப்பது வடக்கில் செயலிழந்திருக்கும் தொழிற்சாலைகளை மீள ஆரம்பிப்பதில். குருநகரில் இருக்கும் சீனோர் நிறுவனம் நீண்ட காலமாக செயலிழந்திருக்கிறது. அதனை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.
ஆனையிறவு உப்பளமும் பல ஆண்டு காலமாக செயலிழந்து இருக்கிறது. அதனை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
பரந்தன் இரசாயன தொழிற்சாலையை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இது எல்லாவற்றையும் செய்யும்போது பொதுமக்களுக்கு இயற்கையாகவே எம்மில் நம்பிக்கை ஏற்படும். யாழ். மக்கள் எங்களுக்கு பலமான ஆணை தந்தால் நிச்சயம் எம்மால் இவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியும்.
கேள்வி: தேசிய மக்கள் சக்தி இனப் பிரச்சினைக்கான தீர்வாக எதனை முன்வைக்கிறது?
பதில்: இனப்பிரச்சினை இந்நாட்டில் கடந்த 76ஆண்டுகளாக பாரிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 21 தடவை அரசியலமைப்பு திருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றால் மக்கள் என்ன நன்மையடைந்தார்கள்? இனிமேலும் அரசியலமைப்பு திருத்தியமைக்கப்பட வேண்டியதில்லை. மாறாக நாட்டின் அனைத்து மக்களினதும் கருத்துகளை உள்ளடக்கிய அரசியலமைப்பொன்று இலங்கைக்கு தேவை. அதனை உடனே செய்ய முடியாது. குறைந்தது 2 வருடங்கள் அதற்குத் தேவைப்படும். நாங்கள் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம். அதன் மூலம் அர்த்தபுஷ்டியான மாகாணசபையை உருவாக்குவோம். மக்கள் சேவை மையங்களை உருவாக்கி, மக்களுக்கான சிறந்த சேவைகளை வழங்குவோம். தனது பாதுகாப்பு மக்கள்தான் என்றே தோழர் அநுர சொல்வார். அதனால்தான் சாதாரண குடிமகனைப்பொல மக்களிடம் செல்கின்றார்.
கேள்வி: நாட்டின் பொருளாதாரம் இன்னமும் வங்குரோத்து நிலையில்தான் இருக்கிறது எனில், நீங்கள் மேற்கொள்ள எதிர்பார்க்கும் திட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவீர்கள்?
பதில்: இன்றைய நிலையில் எம்மால் முடியாது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். ஆனால் எங்களால் முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம். ஜனாதிபதி அநுர பதவியேற்றவுடனேயே வௌிநாட்டில் உள்ள இலங்கையர்கள் இலங்கையில் முதலிட போட்டிபோட்டுக் கொண்டு வந்துவிட்டார்கள். வௌிநாட்டில் வசிக்கும் ஒருவர் கிளிநொச்சியில் 50 ஏக்கர்காணி தருமாறு கேட்கின்றார். அவ்வாறு தந்தால் தான் கோழிப்பண்ணை உருவாக்கி நாடு முழுவதும் 22 ரூபாவுக்கு முட்டையை வழங்குவேன் என்கிறார். இந்தியாவில் உள்ளதைப்போன்று ஒரு முட்டைக் கிராமத்தையே உருவாக்கலாம். இவற்றுக்கெல்லாம் காரணம் அநுர தோழர் மீது எல்லோரும் கொண்டிருக்கும் நம்பிக்கை தான்.
நேர்கண்டவர்: வாசுகி சிவகுமார்