Home » ஊழல் அரசியல்வாதிகளுக்கு அரசில் இடமளிக்கக்கூடாது

ஊழல் அரசியல்வாதிகளுக்கு அரசில் இடமளிக்கக்கூடாது

இதுவே மக்களின் பிரதான கோரிக்கை

by Damith Pushpika
November 3, 2024 6:22 am 0 comment
  • தேசிய மக்கள் சக்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர் எம்.என்.இக்ரம்

பொதுத்தேர்லில் தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களில் ஒருவராக விளங்கும் தேசிய மக்கள் சக்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர் எம்.என். இக்ரம் தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த விசேட பேட்டி

கேள்வி: உங்களைப் பற்றியும் உங்களது அரசியல் பிரவேசம் குறித்தும் சுருக்கமாகக் குறிப்பிட முடியுமா?

பதில்: ஆம். குருநாகல் மாவட்டத்தில் நிகவரட்டிய, பன்னவையை பிறப்பிடமாகக் கொண்ட நான், ஆரம்பக் கல்வியை பன்னவ முஸ்லிம் மத்திய கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை கம்பளை ஸாஹிரா கல்லூரி, கெகுனகொல்ல தேசிய பாடசாலையிலும் உயர் கல்வியை ஜாமியா நளிமியாவிலும் மேற்கொண்டேன். பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பட்டத்தை பெற்றுக்கொண்ட நான், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் பட்டப் பின் டிப்ளோமா பட்டத்தையும் தொடர்ந்தும் கல்வித்துறையிலேயே முதுமாணிப் பட்டத்தையும் நிறைவு செய்துள்ளதோடு அதே துறையில் MPhil பட்டப் பின்படிப்பையும் அதே பல்கலைக்கழகத்தில் தொடர்கின்றேன்.

அதேநேரம் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தேசிய சமூக, அரசியல் பணிகளில் ஈடுபட்டுவருவதோடு, 2018 களில் தேசிய மக்கள் சக்தியின் உருவாக்கச் செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்ததிலிருந்து எனது சமூக அரசியல் பணிகள் விரிவடைந்தது. அதற்கு முன்னர் எந்தவொரு கட்சி அரசியலிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடவில்லை. ஏனெனில் கடந்த கால அரசியல் முறைமைகளுக்கு எதிரானவன் நான். அதனால் அவற்றுடன் இணங்கிப் போய் அவற்றில் சரணாகதி அடையும் நிலையில் இருக்கவில்லை.

கேள்வி: நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தும் குறிப்பாக .ல.முகா., அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இருந்தும் நீங்கள் தேசிய மக்கள் சக்தியை தேர்ந்தெடுக்கக் காரணம்?

பதில்: தே.ம. சக்தியை தேர்ந்தெடுத்தேன் என்பதனை விடவும் நாம் அதனை உருவாக்கிக் கொண்டோம் என்று கூறுவதே பொருத்தமானது. நாட்டில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தம் 2009 இல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்நாட்டின் அபிவிருத்தி குறித்தும், அதன் வளர்ச்சி குறித்தும் பாரிய எதிர்பார்ப்புக்கள் மக்கள் மத்தியில் மேலோங்கி இருந்தன. ஆன போதிலும் தவறானதும் பிழையானதுமான அரசியல் முன்னெடுப்புக்களால் அவை சொற்ப காலத்தில் வெற்றுக் கனவுகளாகின. அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக நாடு அசாதாரண சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டது. பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீதும் அரசியல்வாதிகள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்தனர். குறிப்பாக 2015 இல் அமையப் பெற்ற அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் இதனை இன்னும் வலுப்படுத்தின.

இச்சந்தர்ப்பத்தில் தேசிய, சமூக அரசியல் பரப்பிலும் இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. தேசிய சமூக மாற்றம் ஒன்றை மேற்கொள்வதற்கான தேவை சகல மட்டங்களிலும் உணரப்பட்டது. அப்பின்னணியில் தான் இலங்கையில் காணப்பட்ட முற்போக்கு மற்றும் இடதுசாரி அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, மாற்றுக் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகள் உட்பட பல்வேறு முற்போக்கான சிவில் சேவை அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இந்நாட்டின் புத்திஜீவிகள் என நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி என்ற மக்கள் இயக்கத்தை உருவாக்கினோம். அதனை இந்நாட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் ஒன்றிணைத்து கொண்டு செல்ல ஆரம்பித்தோம்.

கேள்வி: இப்பொதுத்தேர்தலில் தே. ம. சக்தி தேசியப் பட்டியலில் உங்களுக்கு இடமளித்துள்ளது. அந்த வகையில் நீங்கள் நாட்டின் பல பிரதேசங்களுக்கும் பிரசாரங்களுக்கு செல்வீர்களா?

பதில்: ஆம், குறிப்பாக வட,கிழக்கிற்கு சென்று வருகின்றேன். அங்கு தமிழ், முஸ்லிம் சமூகத்தினரிடமும் தே.ம. சக்திக்கு நாளுக்குநாள் ஆதரவு அதிகரித்து வருகின்றது.

எமது மக்கள் இயக்கத்தின் கட்டமைப்பு பரந்தளவில் தெற்கில் விரிவாக்கப்பட்டிருந்தாலும், வட,கிழக்கில் அது குறைவாக உள்ளது. எனினும் சமூக ஊடகங்களின் செல்வாக்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தல் வெற்றி மற்றும் அதனைத் தொடர்ந்து இடம் பெற்றுவரும் முன்மாதிரியான மக்களாட்சி என்பன மக்களிடம் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் அதிலும் தமிழ் இளைஞர்கள் பெருவாரியாக தே.ம. சக்தியுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். இவர்களில் பொதுவாக அவதானித்த ஒரு விடயம்தான், சிறந்த அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களாக அவர்கள் இருக்கின்றனர். அபிவிருத்தி அரசியலைப் பார்க்கிலும், உரிமை அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர்.

இவை இவ்வாறிருக்க, வன்னிப் பிரதேசத்தில் சில முன்னாள் அமைச்சர்கள் தாம் அப்பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்றியதாகவும் அவர்களுக்கான வாழ்க்கை வசதிகளை செய்து கொடுத்ததாகவும் தேர்தல் மேடைகளில் கூறுகிறார்கள். ஆனால் அங்கு சென்று பார்க்கின்ற போதுதான் அங்கு வாழும் மக்கள் படும் துயரங்களை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

கேள்வி: புத்தளம், வன்னி போன்ற மாவட்டங்களில் போட்டியிடும் ஓரிரு கட்சிகள் தாங்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவுக்காகவே தேர்தலில் போட்டியிடுவதாகவும், தங்களை தனித்துப் போட்டியிட ஜனாதிபதியே அனுமதித்துள்ளதாகவும் கிராமங்களில் மக்களிடம் கூறுகின்றனரே?

பதில்: அது அப்பட்டமான பொய். அதில் எவ்வித உண்மையும் இல்லை. எமது தே.ம. சக்திக்கு தனி நபர்களுடனோ ஏனைய கட்சிகளுடனோ அரசியல் உடன்படிக்கை கிடையாது. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அதன் பின்னரும் எங்களுடன் இணைந்து கொள்வதற்கு பல அரசியல் கட்சிகளும், அக்கட்சிகளின் நபர்களும் தனிப்பட்ட வகையில் கூட முயற்சி செய்தார்கள். பலர் எமது பாராளுமன்றத் தேர்தல் அபேட்சகர் பட்டியலில் பணம் கொடுத்தேனும் இடம்பிடித்துக் கொள்வதற்கும் முயன்றார்கள். அது எதுவும் கைகூடாத நிலையில் தற்போது தனிப்பட்ட முறையில் அவர்களது பாராளுமன்றப் பிரவேசத்தை உறுதி செய்து கொள்வதற்காக இவ்வாறு பொய் கூறி மக்களை ஏமாற்ற முயற்சி செய்கிறார்கள். இது தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை.

தே.ம சக்தி இப்படி கூட்டமைப்பு அமைப்பதற்கும், வாக்குறுதி வழங்குவதற்கும் அது ஒரு பாரம்பரிய அரசியல் கட்சியல்ல. அது ஒரு அரசியல், சமூக மக்கள் இயக்கம். அதேநேரம் பாரம்பரிய அரசியல் சமூக அமைப்பை பாதுகாப்பதற்கு ஒத்துழைத்த, ஊழல், மோசடிகளுடன் தொடர்பான அரசியல்வாதிகளை நாம் எம்மோடு இணைத்துக் கொள்வதை மக்கள் ஒரு போதும் அனுமதிக்கவும் மாட்டார்கள்.

நான் கடந்த வாரம் வன்னிக்குச் சென்றிருந்த போது மக்கள் எனது கரங்களை பிடித்து ஒரு உறுதி மொழி கேட்டார்கள். “நாம் எல்லோரும் மிகுந்த அவதானத்துடனும் ஆபத்தான நிலையிலும்தான் உங்களுக்கு வாக்குத் தந்துள்ளோம், தர உத்தேசித்துள்ளோம். ஆனால் நீங்கள் எமக்கு ஒரு வாக்குறுதி தர வேண்டும். எமது பிரதேசத்தில் உள்ள ஊழல் அரசியல்வாதிகளை நீங்கள் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதனை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிடின் நாம் ஆபத்தில் வீழ்ந்து விடுவோம்’ என்பதே அவர்களது கோரிக்கையாகும். இதேபோன்றே கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலங்களிலும் குறிப்பாக வட, கிழக்கு மக்கள் கூறினார்கள். அதனால் நாம் இவ்விடயத்தில் ஆரம்பம் முதலே மிகவும் கறாராக உள்ளோம்.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அநுர குமார திசாநாயக்க மக்கள் மத்தியில் உறுதிமொழிகள் பலவற்றை வழங்கியுள்ளார். அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியுமென நினைக்கின்றீர்களா?

பதில்: தோழர் அநுரகுமார திசாநாயக்க அப்படி தனிப்பட்ட வகையில் எந்த உறுதி மொழியையும் வழங்கவில்லை. அப்படி அவர் வழங்கவும் மாட்டார். எமது அரசியல் செயற்பாடு கூட்டிணைவுடன்தான் இடம்பெறும். நாங்கள் கடந்தகால ஆட்சியாளர்களைப் போன்று வாக்குகளைப் பெறுவதற்கான உறுதிமொழிகள் எதனையும் வழங்கவில்லை. மாறாக நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பான எங்களது கொள்கைகளை, திட்டங்களைத் தான் மக்கள் முன் முன்வைத்துள்ளோம்.

அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தவே மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். இத்திட்டங்களை நாம் தனிநபராகவோ அரசு என்ற வகையில் தனியாகவோ அல்லாமல் மக்கள் பங்கேற்புடனேயே செயற்படுத்துவோம்.

ஆனால் கடந்த காலங்களில் அரசியற் பங்கேற்பில் மாத்திரமல்லாமல் பொருளாதார பங்கேற்பிற்கான இடம் கூட மக்களுக்கு வழங்கப்படவில்லை. ஊழல் ஆட்சியாளர்களும் அவர்களைச் சூழ கட்டமைக்கப்பட்டிருந்த மோசடிக்காரக் கும்பலுமே அவை அனைத்தையும் வைத்திருந்தார்கள். அதனை இல்லாமல் செய்து ஆட்சி மற்றும் பொருளாதார செயன்முறைகளில் மக்களை சுதந்திரமாக இயங்க விடுவதும், மக்கள் பங்கேற்பை அதிகரிப்பதுமே எமது ஆட்சியின் முறைமையாக அமையும்.

நாம் இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து இந்நாட்டின் வளமாகக் கருதுகின்றோம். எனவேதான் நாம் அதிகம் தேசிய ஐக்கியத்தை வலியுறுத்துகிறோம். இந்நாடு பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக வீழ்ந்திருப்பதற்கான முக்கியமான காரணங்களுள் முதன்மையானது இந்நாட்டின் மனித வளம் முறையாக பயன்படுத்தப்படாமையேயாகும்.

கேள்வி: பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களைப் பெறாமல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வழி கிடைக்காது அல்லவா? அத்தகைய பெரும்பான்மையை தே.ம. சக்தி பெறுவது சாத்தியமா?

பதில்: நாம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை எங்கும் கோரவில்லை. மக்கள் அளிக்கும் போது அதனை மறுக்கமாட்டோம். பலமான பெரும்பான்மை அரசொன்றை அமைப்பதற்கான ஆதரவை நாம் கோருகின்றோம். அது எப்படி அமைய வேண்டும் என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள். மக்கள் எம்மை நன்கறிவர். நாம் முன்வைத்திருக்கின்ற மாற்றத்திற்கான திட்டத்தை நன்கு அவதானித்து அதற்குரிய பலத்தை அவர்கள் எமக்களிப்பார்கள். வீண்விரயத்தைக் குறைக்க வேண்டும். ஆட்சியாளர்களின் வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்ய வேண்டும், ஊழல் மோசடி இல்லாத ஒரு ஆட்சிமுறைமை நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அவர்களது எதிர்பார்ப்புக்கு அமைய எமது ஆட்சி அமையும்.

கேள்வி: தற்போது ஊழல் மோசடி விசாரணைகளில் தாமதம் நிலவுவதாக மக்கள் கருதுவதாகக் கூறப்படுகிறதே?

பதில்: இது மக்கள் மத்தியிலான அபிப்பிராயம் என்பதனை விட, சில அரசியல்வாதிகளுடன் தொடர்பு பட்டவர்களினதும் அவர்களுக்கு சோரம் போகும் ஒரு சில ஊடகங்களினதும் கருத்துக்களாகவே நாம் பார்க்கிறோம். நாம் தற்போது அமைத்திருப்பது ஒரு இடைக்கால அரசாங்கம். எமது அமைச்சரவையில் மூன்றுபேர் இருக்கின்றனர். ஒருவர் ஜனாதிபதி, மற்றொருவர் பிரதமர், இன்னுமொருவர் அமைச்சர். இவர்கள் மூவரும் இணைந்து கடந்த ஒரு மாதகாலமாக முன்கொண்டு செல்லும் நடவடிக்கைகளை அவதானித்தால் இதற்கான விசாரணைகள் எப்படி இடம்பெறும் என்பதனை தீர்மானித்துக் கொள்ளலாம். யாரும் அவசரப்பட வேண்டியதில்லை. எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி விசாரணைகள் முறையாக இடம்பெற்று குற்றவாளிகள் உரியமுறையில் தண்டிக்கப்படுவார்கள்.

கேள்வி: இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை கடந்தகால அரசுகளுக்கும், இன்றைய அரசுகளுக்கும் இடையில் வித்தியாசத்தை எவ்வாறு நோக்குகின்றார்கள்?

பதில்: இதுவரை காலமும் இலங்கையில் அமைக்கப்பட்ட அரசுகள் இனவாத்தை அடிப்படையாகக் கொண்ட இனவாத அரசுகள் என்று நான் கூறினால் அது மிகையான கூற்றாக அமையாது என நினைக்கிறேன். கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட அரசு இந்நாட்டு மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் அரசு.

தே.ம. சக்தி என்ற மக்கள் இயக்கத்தை சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து உருவாக்கினோம். அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலில் முழு நாடும் ஒன்றிணைந்தே இந்த அரசை உருவாக்கியது. அதேபோன்று பாராளுமன்றத் தேர்தலிலும் அதிகப்படியான பெரும்பான்மை வழங்கி தே.ம. சக்தியை மக்கள் வெற்றி பெறச் செய்வர்.

இந்நிலையில் சிறுபான்மை சமூகங்களது தனிப்பட்ட விவகாரங்கள், அவர்களது தனித்துவமான விடயங்களில் இந்த அரசு மோசமான போக்கை கையாளும் என்ற சந்தேகங்களை சிலர் தமது அரசியல் வங்குரோத்து நிலையை மறைப்பதற்காக கிளப்புகின்றனர். இவை அனைத்தும் அப்பட்டமான அபாண்டங்கள்.

நாம் ஒரு மக்கள் இயக்கம் என்ற வகையில் பல்வேறு கருத்துப் போக்குகளும் சிந்தனைகளும் உள்ளவர்கள் எம்முடன் உள்ளனர். எப்படி பல இனங்கள், மதங்கள், மொழி பேசுபவர்கள் இணைந்துள்ளோமோ அது போன்றுதான் இந்த விடயமும். எமக்கு மத்தியில் தாராளமான கருத்துச் சுதந்திரமும் ஜனநாயகமும் நிலவுகின்ற அதேநேரம் நாம், எமது பயணத்தை ஐக்கியமாகவும் சகோதரத்துவத்துடனும் முன்கொண்டு செல்கிறோம். அந்த வகையில் ஒவ்வொரு சமூகத்துடனும் தொடர்பான விவகாரங்கள் அது மத விவகாரமாக இருக்கலாம், சமூக விவகாரமாக இருக்கலாம், கலாசாரத்துடன் தொடர்புபட்டதாக இருக்கலாம். அவை அனைத்தும் அந்தந்த சமூகத்துடன் கலந்துரையாடாமல் அவற்றில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும் எண்ணமோ, திட்டமோ தே.ம. சக்தியிடமில்லை. உதாரணமாக இந்நாட்டின் அனைத்து சமூகங்களுக்கும் தனியார் சட்ட ஒழுங்குகள் காணப்படுகின்றன. அவற்றை நாம் அவரவரிற்குரிய தனித்துவங்களை பேணிய வகையிலேயே அணுகுவோம். அவற்றை இல்லாமல் செய்யும் எண்ணம் எம்மிடமில்லை.

கேள்வி: பொதுத்தேர்தலின் பின்னர் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தே.ம. சக்தியுடன் இணைத்துக் கொள்ளப்படுவரா?

பதில்: கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்ட, மோசமான சமூக அரசியல் கலாசார முறைமைகளை பாதுகாப்பதற்காக முன்நின்ற எவரையும் இணைத்துக் கொள்ளும் எண்ணம் எம்மிடமில்லை. உண்மையில் தே.ம. சக்தியினுடைய இணைவு மக்களுடனானது. எமக்கு எந்தப் பிரதேசத்திலும் சமூகத்திலும் மொழிபேசுபவரிடத்திலும் மதத்தை பின்பற்றுவோரிடமும் முகவர்கள் கிடையாது.

கடந்த கால அரசியல் கலாசாரத்தில் காணப்பட்ட மோசமான டீல் கலாசாரத்திற்கு எமது அரசியல் ஊடாக நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். மக்களும் அதனையே எம்மிடம் எதிர்பார்க்கிறார்கள். எமது அரசியற் செயற்பாட்டில் அரசியல்வாதி என்பவர் கடந்த கால முறைமைக்குள்ளால் இருந்த பூடகமான ஒரு பூர்சுவா அல்ல. அவர் ஒரு மக்கள் சேவகராகவும் சாதாரணமானவராகவும் மக்களுடன் இருப்பார். எங்களது முறைமைக்குள்ளால் அரசியல்வாதியை விட மக்கள் பலமானவர்கள். நாம் மக்களுடன் நிற்கவே விரும்புகிறோம்.

பேட்டி கண்டவர்: மர்லின் மரிக்கார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division