இலங்கை, மருதூர் ஜமால்தீனின் 19 சிறுகதைகளை உள்ளடக்கிய 92 பக்க நூல் “திருப்பம்”என்ற பெயரில் அண்மையில் (அக்டோபர் 2024)வெளிவந்திருக்கின்றது. வழுத்தூர் சிராஜுல் மில்லத்தின் 99 ஆவது பிறந்த நாளில்(04-.10-.2024 ) ருகையா பதிப்பக வெளியீடாக தஞ்சாவூர் மாவட்ட, வழுத்தூர் சிராஜுல் மில்லத் தமிழ் இலக்கியப் பேரவை வழங்கியிருக்கின்ற நூல் இது.
இலங்கை – இந்திய இலக்கிய உறவில் இப்பொழுதெல்லாம் புதியதொரு மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நமது நூல்கள் அங்கு நூலுருவாக்கம் பெறுகின்றன.
இலங்கைப் படைப்பாளர்களின் நூல்களுக்கு அறிமுகக் கூட்டங்கள், விமர்சனக் கூட்டங்கள் நடை பெறுகின்றன.
“இலங்கை – இந்திய இலக்கிய உறவு ஒரு வழிப்பாதையாக இருக்கிறது. நமது படைப்புகளுக்கு அங்கு இடமில்லை “என்றிருந்த நிலை தற்போது மாறி வருகிறது என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக “திருப்பம்” நூல் வெளியீட்டைக் குறிப்பிடலாம்.
முகநூல் அறிமுகத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு, ஆசிரியரின் எழுத்துப் பிரதியைப் பெற்று, நூலுருவாக்கம் செய்து இவ்வாறானதொரு நற்பணியைச் செய்திருக்கின்ற தாராளர் வழுத்தூர் ஹாஜி லயன் அ.பஷீர் அஹ்மது றப்பானி பாராட்டப்பட வேண்டியவர்.
மருதூர் ஜமால்தீன் சாய்ந்த மருதூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஏறாவூரில் வாழ்ந்து வரும் அவர், நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலக்கிய உலகில் தடம் பதித்து வருபவர். கதைஞர், கவிஞர், மார்க்கச் சொற்பொழிவாளர். ஏற்கனவே,
11 நூல்களை வெளியிட்டிருக்கின்றார். கலாபூஷணம் உட்படப் பல இலக்கிய விருதுகளைப் பெற்றிருக்கும் அவரின் முதலாவது சிறுகதைத் தொகுதி இது.
முஸ்லிம் மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு அம்சங்களில் தோய்ந்தனவாக பெரும்பாலும் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களின் பேச்சு மொழியில் அமைந்தனவாக, வாழ்வியல் அனுபவங்களாக அவரின் கதைகள் அமைந்து வந்திருக்கின்றன.
கதைகள் நீண்டு விடவில்லை. சாதாரண வாசகரும் மனம் வைத்துப் படிக்கக் கூடியதாக இலகு நடையில், குறைந்த பக்கங்களில் கதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. “திருப்பம்” முதலாவது சிறுகதை.
சில பள்ளிவாசல் நிர்வாகிகளின் கெடுபிடியைக் கூறுகின்ற கதை. ஐவேளைத் தொழுகையை நடத்தும் இமாம், தொழுகைக்காக அழைக்கும் முஅத்தின் போன்றவர்களை அவர்கள் நடத்தும் விதம் பற்றி எடுத்துக் கூறி, அவ்வாறு நடத்துபவர்களின் மனங்களை மாற்றித் திருந்தச் செய்கின்ற கருப்பொருளில் அமைந்திருக்கின்ற கதை.
கிழக்கு மண்ணிலிருந்து இமாமாக வேலைக்கு வந்திருப்பவர் ஜெஸீல் மௌலவி.
சுப்ஹு தொழுத முஅத்தின் மேல்கடுப்பு, காய்ச்சலால் படுத்துக் கிடக்கிறார். அன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக ஜமா அத்தார் வருவதற்கிடையில் பள்ளி வெளி வளாகம், உட்பள்ளி, ஹவ்ளு, மலசல கூடம் போன்றவற்றை துப்பரவு செய்யவேண்டும் . மு அத்தினின் பணியை இமாம் செய்துகொண்டிருக்கிறார். உட்பள்ளியை அவர் சுத்தம் செய்கிறபோது, “மோதிமியார் மோதிமியார் எங்கவன் ஏய் மோதிமியார் கூப்பிடுய வெளங்கலியா” அதிகாரம் சுமந்த அதட்டல் குரல். இமாம் வெளியில் வந்து பார்க்கிறார். கம்பீரமான தோற்றம். உயர் ரக ஆடை. பணத்திமிர். அருகே அழகிய கார்.
“என்தியன் பார்க்கிய கூப்பிடுய விளங்கலியா இந்தா பாருங்க வெளியில் சரியா கூட்டுப்படல.
மனுஷன் மக்கள் வாற இடமலியன் துப்புரவா இருக்கோணும் நீங்களா புதுசா வந்த மோதிமியார்” என்று கர்ஜித்தார்.
அவர் பள்ளி பொருளாளராம். ஜெலீஸ் மௌலவியின் கையிலிருந்த தும்புத்தடியைப் பார்த்து அவரை மோதினென நினைத்துக் கொண்டு சொல்லம் பெறிந்தார் அவர். சமூக ஏற்றத் தாழ்வினை, வர்க்க முரண்பாட்டை சுட்டிக்காட்டி, திருந்திட வழிசொல்கிற கதை அது. நூலிலுள்ள ஏனைய கதைகள் கிழக்கு முஸ்லிம்களின் பேச்சுத் தமிழில் அமைந்திருக்க, மேல்மாகாண முஸ்லிம்களின் பேச்சு மொழி இக்கதையில் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.
“லெக்கோவ் செய்னம்பு இது செய்வின தாங்கா. இல்லாட்டி லேசாகிருக்குமே. நீயும் கிரந்தி கிரந்தி யெண்டு எவ்வளவு மூலிகை மருந்தெல்லாம் செய்து போட்டாய். இன்னும் லேசாகல்லண்டா யோசிச்சுப் பாரு” (வினையின் விளைவு)இவ்வாறு, கிழக்கு முஸ்லிம் மக்களின் பேச்சு மொழி, இலாவகமாக வந்து விழுவதை அவரின் ஏனைய கதைகளை வாசிக்கும்போது உணரலாம்.
முஸ்லிம்களின் விவாகம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுதேடும் ‘காழிக் கோட்’ டோடு தொடர்புபட்ட கதை – விவாக விடுதலை -(தலாக்.).
உலாவரும் பாத்திரங்களின் உரையாடல்களில் கதை நகர்கிறது.
“என்ன புள்ள மஸீஹா இஞ்சால வாங்க.நான் எல்லாம் சொல்லிட்டன். இனி சொல்லுறதுக்கு எனக்கிட்ட ஒன்டுமில்லம்மா. மார்க்கத்தில் இல்லாத வீண் பெருமைக்கும் புகழுக்கும் இடம் கொடுக்காம மனசஅலைய வெய்க்காம இது கொஞ்ச கால வாழ்க்க, அல்லாஹ்வுக்குப பயந்து புருசனோடு சேர்ந்து வாழப் பாருமா” என்றார் காழியார். ‘நானும் அவரோட சேர்ந்து வாழத்தான் விரும்புறன். எனக்கு அவர் மட்டும் தான் வேணும் அவர்ர உம்மா வாப்பா குடும்பம் யாரும் எண்டவீட்ட வரவும் போடா அவரும் குடும்பத்திட்ட போகப்புடா அப்படி வந்தாரெண்டா காலம் முழுக்க சந்தோஷமா வச்சிருப்பன்’ என்றாள் மஸீஹா.
அவளின் முடிவால் காழி நீதிமன்றம் திகைத்தது.
“புள்ள உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு. நீ படிச்ச புள்ள தானே . உனக்கு அறிவு இருக்கா மெய்தான் குடிகாரன், கள்ளன், காவாலி அநியாயம் செய்ரவனென்டா இந்த பொடியனை நினைச்சிருக்காய். இஸ்லாத்தப் படிச்சுத்தானே இருக்காய்.
இந்தக் குலம், கோத்திரம், புகழ் பதவியால் அல்லாஹ் கிட்ட எதையும் அடைய இயலா. தக்வா என்கிற இறையச்சம் தான் அவன்கிட்ட உயர்வு தரும் என்று தெரியாதா? டாக்டர் சுன்னத்து வெச்சா கேவலமில்ல அவங்களோட ஆட்கள் வெச்சாஅது கேவலம் என்டு குர்ஆன், ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கா? ஏன் இப்படி பேசுறாய் என்று வருத்தப்பட்டார் காழியார்.
அவள் ஒத்து வராமல் போவதும்
கடைசித் தலாக்கையும் சொல்லிவிட்டு வெளியேற கணவனுக்கு காழியார் அனுமதி வழங்குவதுமாக கதை முடிவுக்கு வரும்.
இவ்வாறு முஸ்லிம் மக்களின் வாழ்வியலோடு தொடர்புபட்ட நுண்ணிய பிரச்சினைகளையும் தனது கதைகளில் எடுத்துக் காட்டித் தீர்வு தேடுகிறார் கதைஞர் ஜமால்தீன்.
அவருக்கு நமது வாழ்த்துகள்
****
நூல் :- திருப்பம்
கிடைக்குமிடங்கள்:- மௌலவி கலாபூஷணம் எம்.எம். ஜமால்தீன் J.P
இல:-116, புதிய வீதி,ஏறாவூர்- 02. இலங்கை.
கைபேசி:-0775590611.
ருகையா பதிப்பகம், ருகையா அமீர் கல்வி அறக் கட்டளை, பிளாட் எண்:-11. ஹாஜியார் பாத்திமுத்து நகர். வழுத்தூர்- 614201.
விலை:- இந்திய ரூபா 200/-