ஏனது நிகழ்ந்தது
ஏனது நடந்தது
ஏனது வந்தது
ஏனது மாய்ந்தது
அந்த வேளை
அந்த நேசம்
நாடகங்கள்
வேண்டாமே
நாடியில் என்றும்
நீதானென்று
அறியாயா நீ
ஏனிந்த மாற்றம்
ஏனிந்த மந்தம்
இயல்பானவை
தொலைந்து
கருமேகம்
சூழ்ந்த ஆகாயமாய்
இரு விழிகளில் கடல் தாங்கி
கவலையாகிறேன்
நீ வராது விட்டிருந்தால்
இந்த துயரம் இருந்திருக்காது
புதைகுழி விட்டும்
மரித்த நேசத்தை
உயிர்த்தெழுப்பி விட்டாய்
உயிர் கொண்டதும்
ஊமையாகிப் போனாய்
அழுது அரற்றி
அநாதையாய் அலைகிறது பார்
நம் நேசம்
அகந்தை கொண்டிருந்தேன்
பேரழகின் நேசத்தைக்
கொண்டாடிக் கொண்டிருந்தேன்
பிரிவின் விலாசம் தொலைந்த
பேரானந்தம் எனக்குள்
வலி வியூகமமைத்து
வீழ்த்திய பின்னரும்
உன்னையே நினைக்கிறேன்
உன்னையே நேசிக்கிறேன்
பிடித்தமானவர்களைக்
கொண்டிருக்கும் மனம்
பிரிய நினைவுகளால்
நிரம்பி இருக்கும் மனம்
அத்தனை பலம் கொண்டது
எவருமறியா வீரியம் மிக்கது
—
மறந்து போகச்
சொன்ன பின்னர்தானே
அதிகம்
நினைத்துக்கொண்டிருக்கிறது!!