பெரும்போக நெல் அறுவடையில்,10 வீத நெல்லை கட்டாயமாக கொள்முதல் செய்து கையிருப்பில் வைத்துக்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம். விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதற்கென நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் பயன்படுத்தப்படும். இதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இதுபற்றித் தெரிவித்த அவர்; அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏகபோக உரிமையைப் பேணிக்கொண்டு அரிசியின் விலையை அதிகரிப்பதை தடுப்பதே இதன் நோக்கமாகும். இதனால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்க முடியும். சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை இனிமேல் அறுவடைக்கு வழங்கப்படும்.இதன் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்து அதனை விரைவாக அரிசியாக மாற்ற அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு முடியும்.
பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் மொத்த அரிசி உற்பத்தியில் 23 வீதத்தையே கொள்வனவு செய்கின்றனர்.நெற் சந்தைப்படுத்தல் சபையில் 10 வீத நெல்,கையிருப்பிருந்தால், தேவையான நேரங்களில் விலைக்கட்டுப்பாடுகளுக்கான பாதுகாப்பை வழங்க முடியும்.அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது தவறானதெனவும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.