உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான மற்றுமொரு வெளிப்படுத்தலை முன்வைப்பதாகக் கூறி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கடந்த திங்கட்கிழமையும் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியிருந்தார்.
இதில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். ஐ. இமாம் தலைமையிலான குழுவின் அறிக்கையை கம்மன்பில பகிரங்கப்படுத்தியிருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ‘சனல் 4’ தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொலி குறித்து விசாரிப்பதற்காகக் குறித்த குழு நியமிக்கப்பட்டிருந்தது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தராக இருந்த அசாத் மௌலானா என்பவர் வழங்கிய கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இந்த சனல் 4 காணொலி வெளியிடப்பட்டிருந்தது. இதில் முகத்தைக் காண்பிக்காது கருத்துத் தெரிவித்த பொலிஸ் அதிகாரியொருவரின் குரலும் உள்ளடங்கியிருந்தது. கடந்த வாரம் மற்றுமொரு குழுவின் அறிக்கையைப் பகிரங்கப்படுத்துவதாகக் கூறி முன்வைத்த அதே குற்றச்சாட்டுகளையே கம்மன்பில இவ்வாரமும் முன்வைத்திருந்தார்.
குறிப்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் மீது நம்பிக்கை இல்லையென்ற குற்றச்சாட்டையே இரண்டாவது வாரமும் கம்மன்பில முன்வைத்திருந்தார்.
சனல் 4 தொலைக்காட்சி காணொலி குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு 2024 ஜுலை மாதமே தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தபோதும், அவர் செப்டெம்பர் மாதம் வரையில் அந்த அறிக்கையை பகிரங்கப்படுத்தவில்லை. இதுவரை அந்த அறிக்கையை வெளியிடாதிருந்த ரணில் விக்கிரமசிங்க பற்றி எதனையும் குறிப்பிடாத கம்மன்பில, புதிய ஜனாதிபதி அநுர குமார மற்றும் அவருடைய அரசாங்கம் மீது குற்றஞ் சுமத்தும் நோக்கிலேயே இதனைப் பயன்படுத்தியுள்ளார்.
அது மாத்திரமன்றி, ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட இமாம் மற்றும் அல்விஸ் ஆகியோர் தலைமையிலான விசாரணைக் குழுக்கள் முழுமையான அதிகாரத்தைக் கொண்ட குழுக்கள் இல்லையென்பதை அரசாங்கம் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது. அது மாத்திரமன்றி, சனல் 4 தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழு அசாத் மௌலானாவைத் தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகளில் தோல்வியடைந்துள்ளது.
எனவே, பிள்ளையான் மற்றும் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலி போன்ற சிலருடைய சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. அது மாத்திரமன்றி குறித்த ஒரு சில உயர் புலனாய்வு அதிகாரிகள் மீது தவறு இல்லையென்பதைக் காண்பிப்பதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது உதய கம்மன்பில் தனது அரசியல் பயணத்துக்கான ஓர் துரும்பாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றார் என்பது தெளிவாகியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் உலவுகின்றன. அது மாத்திரமன்றி, ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரைத் தொடர்ந்தும் பதவிகளில் வைத்திருப்பதால் உயிர்த்த ஞாயிறு குறித்த விசாரணைகளில் தாக்கம் ஏற்படும் என்பதே அவருடைய குற்றச்சாட்டு.
அத்துடன், ஜனாதிபதி அநுர குமார பதவியேற்ற முதல் மாதத்தில் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான மக்களின் அதிருப்தி குறித்துத் தெரியப்படுத்தும் வகையில் பொதுமக்கள் மனுவில் கையொப்பங்களைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் கம்மன்பில ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த புதிய தகவல்களைப் பகிரங்கப்படுத்தப் போகின்றேன் என்று கூறி நடத்திய இரண்டு ஊடகவியலாளர் சந்திப்பிலும் புது விடயங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. அரசியல் நோக்கத்தில் அரசாங்கத்தையும் ஜனாதிபதி அநுர குமாரவையும் குற்றஞ்சாட்டும் நோக்கிலேயே இந்த விடயத்தைக் கையில் எடுத்துள்ளார் என்பது வெளிவாகியுள்ளது.
அது மாத்திரமன்றி சனல் 4 காணொளி தொடர்பில் பாராளுமன்றத்திலும் சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்பட்டிருந்தது. இந்த விவாதத்திலும் சரியான தகவல்கள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை. இவ்வாறான பின்னணியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தைத் தொடர்ந்தும் அரசியலாக்கி அதன் ஊடாக வாக்குகளைப் பெற்றுக்கொள்ள கம்மன்பில எடுக்கும் முயற்சி பெரிதாக வெற்றிபெறவில்லையென்றே அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஏனெனில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விபரங்கள் அரசியல் அரங்கத்தில் பேசுபொருளாகி பாரிய அரசியல் சுனாமியை ஏற்படுத்தும் என்ற கம்மன்பிலவின் கணிப்பு பிழைத்து விட்டது என்றே கூறவேண்டும். ஊடகங்களிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ இந்த விடயம் பெரிதாக ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மூன்று ஜனாதிபதிகள் ஆட்சியில் இருந்தாலும் அவர்களின் காலத்தில் சூத்திரதாரிகள் எவரும் கண்டுபிடிக்கப்படவோ எவரும் தண்டிக்கப்படவோ இல்லை. எனினும், சரியான விசாரணைகளை நடத்தி உண்மையைக் கண்டுபிடிப்போம் என ஜனாதிபதி அநுர தேர்தல் காலத்தில் உறுதிமொழி அளித்திருந்தார்.
அது மாத்திரமன்றி குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேர்மையான விசாரணைகளை நடத்தி, கடந்த அரச தலைவர்களால் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்ட ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை இந்த விசாரணைகளில் ஈடுபடுத்துவதிலும் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இந்த முயற்சிகளைத் தடுப்பது அல்லது இவற்றைக் குழப்புவது கம்மன்பிலவின் நோக்கமாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் உரிய முறையில் விசாரிக்கப்பட்டால் அதன் பின்னணியில் உள்ள இனவாத சக்திகள் வெளியாகிவிடும் என்ற அச்சம் அவருக்கு இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
பி.ஹர்ஷன்