அரிசி விலை அதிகரித்துள்ளது. அதற்கும் கட்டுப்பாட்டு விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் கட்டுப்பாட்டு விலைக்கு வாங்குவதற்கும் அரிசி இல்லை. கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலையில் அரிசியை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களில் சோதனைகளை ஆரம்பித்த போது சந்தையில் அரிசி இல்லை. இது எமது நாட்டில் அரிசி விலை அதிகரிப்பானது கட்டுப்பாட்டு விலையுடன் இணைந்த பொதுவான நடைமுறையாகும். இது அரிசிக்கு மாத்திரமல்ல, முட்டை உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய பொருட்களுக்கும் ஏற்படக்கூடிய நடைமுறையாகும்.
அரிசி விலை எப்படி உயரும்? உண்மையிலேயே கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை வழங்க முடியாதா? ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் விவசாய, வர்த்தக மற்றும் அரிசி சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள் குழுவுடன் இது தொடர்பில் கலந்துரையாடினார்.அரிசியின் விலை மற்றும் அது தொடர்பில் காணப்படும் தற்போதைய நிலவரங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்கிரமசிங்க, வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம். எம். நயிமுதீன், நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஏ. எம். யு. பின்னலந்த, நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
எங்கு பிரச்சினை உள்ளது?
அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடனும் ஜனாதிபதி செயலகத்தில் நுகர்வோர் பொருட்களின் தற்போதைய விலைகள் தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அரிசி விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் நெல்லைப் பெற்றுக் கொள்வதற்கும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்கும் முறையான பொறிமுறையொன்று அவசியம் எனவும் ஜனாதிபதி இந்த கலந்துரையாடல்களின் போது சுட்டிக்காட்டினார்.
உண்மையில், அரச மட்டத்தில் இவ்வாறான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அரிசி தொடர்பில் ஏன் கவனம் செலுத்தப்பட வேண்டும்?
அரிசியின் விலையை செயற்கையாக உயர்த்துவது ஒரு விடயமாகும். அரிசி விலையை அவ்வாறு எப்படி உயர்த்த முடியும்? அரிசியை இறக்குமதி செய்வதன் மூலமும் ஏன் இந்த நிலைமைக்கு தீர்வு காண முடியவில்லை?
அரிசி விலையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு சாதாரண வியாபாரிகளும் நஷ்டமடைந்துள்ளனர். அப்படியானால் இதன் மூலம் பெரும் இலாபம் யாருக்கு கிடைக்கின்றது? இது உண்மையில் ஒரு வெளிப்படையான இரகசியமாகும். இந்நாட்டு அரிசி விலையைக் கட்டுப்படுத்துவது இந்நாட்டைச் சேர்ந்த பாரியளவிலான நெல் ஆலைகளின் உரிமையாளர்களாகும். உண்மையில், பல தசாப்தங்களுக்கு முன்பு அவர்கள் நெல் ஆலை உரிமையாளர்களாகக் கருதப்பட்டாலும், இப்போது அவர்களை நெல் ஆலை உரிமையாளர்கள் என்று அழைப்பதை விட பெரும் ஆதிக்கமிக்கவர்கள் என அழைப்பதே சரியானதாகும். அரிசி விலைக்குக் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்ததாலும், நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயித்தாலும் இந்த பெரிய நெல் ஆலை உரிமையாளர்கள் இவை அனைத்தையும் கட்டுப்படுத்துபவர்களாக மாறிவிட்டனர். இந்த நிலையின் காரணமாக ஜனாதிபதி செயலகத்தில் இந்நாட்டின் பாரிய அரிசி ஆலைகளின் உரிமையாளர்களாகக் கருதப்படும் டட்லி சிறிசேன, நிபுன கம்லத், மித்ரபால லங்கேஸ்வர, ஜயசிறி குணதிலக்க, மேனகா கம்லத் உள்ளிட்ட வர்களுடன் வர்த்தகர்கள் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் குழு சந்தித்து கலந்துரையாடியது. அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அந்த அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இதன்போது கண்டிப்பாகக் கட்டுப்பாட்டு விலைக்கே அரிசியை விநியோகிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. கடந்த வார ஆரம்பத்திலும் ஒரு கிலோ நட்டரிசி நெல்லு 220 ரூபாய் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு கிலோ நாட்டரிசியின் மொத்த விற்பனை விலை 230 ரூபாவாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.அரிசியாக மாற்றுவதற்குத் தேவையான ஒரு கிலோ நாட்டரிசி நெல் 132 முதல் 135 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ சம்பா அரிசி நெல் 139 ரூபாய் என்றும் இதன்போது தெரிய வந்துள்ளது. எனவே, நெல் அரிசியாக சந்தைக்கு வரும் போது கட்டுப்பாட்டு விலையில் வழங்க முடியாது என சிறு மற்றும் நடுத்தர அரிசி வியாபாரிகள் மற்றும் நெல் ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் கீரி சம்பா அரிசியின் விலை 400 ரூபாய் வரை உயர்ந்ததன் காரணமாக கடந்த பெரும் போகத்தில் விவசாயிகள் அதிகளவில் கீரி சம்பா நெற்பயிர்களை பயிரிட்டதாகவும், நாட்டரிசியை குறைந்தளவில் செய்கை செய்ததால் நாட்டினுள் நாட்டரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் மொத்த அரிசி விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர். தற்போது ஒரு கிலோ சம்பா அரிசியின் மொத்த விலை 234 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி சற்று கூடுதலான விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
அரிசி பதுக்கல்
இந்த பெரும் போகத்தில் (2024/25) நெல் அறுவடை அடுத்த ஜனவரி மாதத்திலேயே கிடைக்கும் என்பதால் அரிசியின் விலை இந்த அறுவடை கிடைத்ததன் பின்னரே குறையும் என அந்த அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி வியாபாரிகள் கூறுகின்றனர்.என்றாலும், இந்தவாறான எந்தப் பிரச்சினையும் பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு இல்லை.
அவர்களது களஞ்சியங்களில் போதுமான அளவு கையிறுப்பு உள்ளது. அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுமில்லை. நம் பேச்சு வழக்கில் கூறுவதாயின் ‘அரிசி பதுக்கல்’ செய்யப்படுகிறது. இவ்வாறு பல மாதங்களாக அரிசி பதுக்கப்பட்டிருந்தாலும், இந்த பெரிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
சிலர் ஹெலிகொப்டர்களில் பயணம் செய்கிறார்கள். …
பணத்தை வைத்துக் கொள்வதற்கு இடமில்லாதவர்கள் என அவர்களை ரஜரட்ட பிரதேச மக்கள் கூறகின்றனர்.பிரச்சனை என்னவென்றால், அவர்களின் செயல்கள் எதுவும் சட்டவிரோதமானது அல்லாமல் இருப்பதேயாகும். அவர்களிடம் அரிசி இருக்கிறது. அவை உரிய தொகையை செலுத்தி பொதுமக்களின் நுகர்வுக்கு மிகத் தகுதியான வகையில் பொதி செய்யப்பட்டவையாகும். அதேபோன்று, அரிசி சுகாதாரமான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டும் உள்ளது. அப்படியாயின் வேறு என்ன கதை இருக்கின்றது?
எம். எஸ். முஸப்பிர்