Home » ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் தெரிவிக்கும் செய்தி என்ன?

ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் தெரிவிக்கும் செய்தி என்ன?

by Damith Pushpika
October 27, 2024 6:23 am 0 comment

ஒக்டோபர் 1ஆம் திகதி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது. அதன் பிறகு அங்கு போர் துவங்குவதற்கான ஒரு பதற்றமான சூழல் நிலவத் துவங்கியது.

தற்போது, ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் தன்னுடைய தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பலத்த சத்தம் கேட்டதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில், ஈரானின் கூட்டணி அமைப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி முதல் இடைவிடாமல் இஸ்ரேலை தாக்கி வருவதால், உலகில் உள்ள வேறெந்த சுதந்திரமான, சுயாட்சி உள்ள நாடுகளைப் போலவே இஸ்ரேலுக்கும் அதற்கு பதிலடி கொடுக்கும் கடமை இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

ஒக்டோபர் 1ஆம் திகதி ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் தற்போது பதிலடி கொடுத்திருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேல், ஈரான் இருவரில் படை மற்றும் ஆயுத பலத்தில் யார் வலிமையானவர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கட்டுரை அதை அலச முயல்கிறது.

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு ஒக்டோபர் 1ஆம் திகதியன்று ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

அந்தத் தாக்குதலில் ஈரான் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தாக்குதலைக் காட்டிலும் இது சற்றே பெரிய தாக்குதலாக இருந்தது. ஏனென்றால் அப்போது ஈரான் 110 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் 30 க்ரூஸ் வகை ஏவுகணைகளையும் ஏவியது.

அந்தத் தாக்குதலில், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான அயர்ன் டோம், பெரும்பாலான ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

ஏவுகணைகள் ராணுவ தளங்கள், சில உணவகங்கள் மற்றும் பாடசாலைகளைத் தாக்கியதாக இஸ்ரேலில் உள்ள பிபிசி செய்தியாளர் அப்போது தெரிவித்தார். இந்நிலையில், போர்ச் சூழல் வந்தால் இருநாட்டில் யார் வலுவானவர்கள் என்ற கேள்வி எழுகிறது. பிபிசி இந்தக் கேள்விக்கான பதிலைப் பெற பல்வேறு ஆதாரங்களை ஆய்வு செய்தது. இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க திறன்கள் உள்ளன, அவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. எனவே எந்த நாடு பலம் மிக்கது என்பதைத் துல்லியமாகக் கூற இயலாது.​ ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டும் இத்தகைய மதிப்பீடுகளைச் செய்கிறது.

இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகளின் மக்கள் தொகையிலும் பெரும் வேறுபாடு உள்ளது. ஈரானின் மக்கள் தொகை இஸ்ரேலை காட்டிலும் அதிகம். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இஸ்ரேல் முன்னணியில் உள்ளது. அதாவது இஸ்ரேலின் ஜிடிபி அதிகமாக உள்ளது. அதேபோல இஸ்ரேல், தனது பாதுகாப்புக்காக ஈரானை காட்டிலும் அதிகமாகச் செலவழிக்கிறது என்று ஐ.ஐ.எஸ்.எஸ் கூறுகிறது.

இஸ்ரேல் ஈரானில் இருந்து 2100 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே இரு நாடுகளுக்கு இடையே “போர் என்று வந்தால் வான்வழித் தாக்குதல்தான் நடைபெறும். இஸ்ரேல் ஈரானுடன் தரைவழித் தாக்குதலை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு” என்கிறார் டிஃபன்ஸ் ஐ (Defence Eye ) பத்திரிகையாளர் டிம் ரிப்ளே.

ஐ.ஐ.எஸ்.எஸ் (IISS) புள்ளிவிவரங்கள், இஸ்ரேலிடம் 340 ராணுவ விமானங்கள் போருக்குத் தயாராக இருப்பதாகக் காட்டுகின்றன.

ஜெட் விமானங்களில் நீண்டதூர வரம்பைக் கொண்ட F-15 விமானங்கள், ரேடாரை தவிர்க்க வல்ல உயர் தொழில்நுட்ப F-35 விமானங்கள் மற்றும் துரிதமான தாக்குதலை நடத்தவல்ல ஹெலிகாப்டர்கள் ஆகியவை இதில் அடங்கும்.

இஸ்ரேலின் வான் படை மற்றும் Guided Weapons எனப்படும் கட்டுப்படுத்தவல்ல ஆயுதங்கள் அந்நாட்டிற்குப் பெரும் பலமாக உள்ளன. ஈரானில் உள்ள இலக்குகளை இஸ்ரேல் வான்வழியாகத் தாக்க முடியும். சமீபமாக ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டது இதற்கு ஓர் உதாரணம்.

மறுபுறம் ஈரானிடம் சுமார் 320 போர் விமானங்கள் இருப்பதாக ஐ.ஐ.எஸ்.எஸ் மதிப்பிட்டுள்ளது. இந்த ஜெட் விமானங்கள் 1960களில் இருந்தே இருப்பவை. இதில் F4, F5 மற்றும் F14 ஆகியவை அடங்கும்.

இந்தப் பழைய விமானங்களில் உண்மையில் எத்தனை விமானங்கள் பறக்கக்கூடியவை என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் பழுது பார்க்கும் பாகங்களைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்,

இவைதவிர, ஈரானின் ஏவுகணைத் திட்டம் மத்திய கிழக்குப் பிராந்தியத்திலேயே மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில், அமெரிக்க மத்திய கட்டளையின் ஜெனரல் கென்னத் மெக்கென்சி, ஈரானிடம் ‘3,000க்கும் அதிகமான’ பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருப்பதாகக் கூறினார். ஈரான் குறுகிய மற்றும் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை உருவாக்கியுள்ளது. அவற்றில் பல, கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன.

ஆனால் இஸ்ரேலிடம் இதற்குத் தீர்வு உள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பின் முதுகெலும்பாக, அதன் ‘அயர்ன் டோம்’, ‘ஏரோ’ அமைப்புகள் மற்றும் டேவிட் ஸ்லிங் ஆகியவை இருக்கின்றன. சுமார் 10 கி.மீ. தூரத்தில் இருந்து ஏவப்படும் குறுகிய தூர ராக்கெட்டுகளை அயர்ன் டோம் இடைமறித்துவிடும்.

டேவிட் ஸ்லிங் அமைப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் உருவாக்கப்பட்டது. இதைக் கொண்டு இடைதூர மற்றும் நீண்டதூர ராக்கெட்டுகள் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறிக்க முடியும். சுமார் 100 கி.மீ. தூரம் வரை பாய்ந்து செல்லக்கூடிய தொலைதூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏரோ அமைப்பு தடுக்கும் வல்லமை கொண்டது.

ஈரானிடம் இஸ்ரேலை காட்டிலும் 6 மடங்கு அதிக படை வீரர்கள் உள்ளனர். ஐஐஎஸ்எஸ்-இன் தரவுகள்படி ஈரானிடம் 6 லட்சம் படைவீரர்கள் உள்ளனர், இஸ்ரேலிடம் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் படைவீரர்கள் உள்ளனர்.

தற்காலத்தில், எந்தவொரு நாடும் தனியாகப் போரிட முடியாது. ஈரானிடம் ‘ஆக்ஸிஸ் ஆஃப் ரெஸிஸ்டென்ஸ்’ உள்ளது. அதாவது அண்டை நாடுகளில் உள்ள பல ஆயுததாரி குழுக்கள் ஈரானுக்கு ஆதரவாக இருக்கின்றன. லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹூத்தி குழு, பஹ்ரைனில் அல் அஷ்தார் ப்ரிகேட் ஆகியவை உள்ளன.

இதுதவிர, ஹமாஸ் குழுவும் உள்ளது. இதன் வாழ்நாள் இலக்கு இஸ்ரேலை அழிப்பது மட்டுமே. ஈரானின் புரட்சிகர காவல் படை மற்றும் குத் படை மத்திய கிழக்கில் தனது அதிகாரத்தை நிலைநாட்ட இந்த ஆயுதக் குழுக்களுக்கு பல மில்லியன் டொலர்கள் நிதியுதவியாக வழங்குகின்றன. இவற்றுக்குப் பயிற்சியையும் வழங்குகிறது. அதேபோல் இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனைத்து வழிகளிலும் உதவி வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே ஆண்டுதோறும் 50 பில்லியன் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறுகிறது. அதேபோல, போர்ச் சூழல் எழுந்ததால் அணு ஆயுத அச்சுறுத்தலும் எழுகிறது. இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இஸ்ரேல் அதை வெளிப்படையாகச் சொல்வதைத் தவிர்க்கிறது. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. ஆனால் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. ஈரான் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division