பலஸ்தீனின் காசா மீதான யுத்தம் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வருகின்றது. கடந்த ஆண்டு (2023) ஒக்டோபர் 07 ஆம் திகதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காகவும், அவர்கள் பிடித்துச் சென்ற பணயக் கைதிகளை மீட்பதற்காகவும் எனக் கூறி இப்போரை இஸ்ரேல் ஆரம்பித்தது.
மத்திய தரைக்கடலை அண்மித்ததாகக் காணப்படும் காசா 23 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. அவர்களில் 47 சதவீதமானவர்கள் சிறுவர்களாவர். இப்போர் காரணமாக காசாவில் இற்றைவரையும் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துமுள்ளனர் என காசா சுகாதார அமைச்சுத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் இப்போர் காசாவின் உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் அழித்தும் சேதப்படுத்தியும் உள்ளது. இந்த யுத்தத்தினால் கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் காசாவில் 87 சதவீதமான வீடுகளும், 80 சதவீதமான வர்த்தகக் கட்டமைப்பு வசதிகளும், 68 சதவீதமான பயிர்ச்செய்கை நிலங்களும், 68 சதவீதமான வீதிகளும், 87 சதவீதமான பாடசாலைக் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன என்று ஐ.நா. நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
காசாவிலுள்ள 36 வைத்தியசாலைகளில் 16 வைத்தியசாலைகள் மாத்திரமே பகுதியளவில் இயங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருக்கிறது. காசாவில் அடிப்படை சுகாதார வசதிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் யாவும் அழிவுற்றும் சேதமடைந்துள்ளதால், தொற்றுநோய்கள் தீவிரமடையும் அச்சுறுத்தல் காணப்படுவதாக சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
உடல் உறுப்புக்களை மாத்திரமல்லாமல் பெற்றோரை இழந்தவர்களையும் உருவாக்கியுள்ள இப்போரினால் உளப் பாதிப்புக்கும் பெருந்தொகையானோர் உள்ளாகியுள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பணயக் கைதிகளில் சுமார் 100 பேர் அளவில் இன்னும் ஹமாஸ் பிடியில் இருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக யுத்தத்தை முன்னெடுத்தும் கூட எஞ்சியுள்ள பணயக் கைதிகளில் ஒரு சிலரைத் தவிர ஏனையவர்கள் இன்னும் விடுவிக்கப்பட்டதாக இல்லை.
இவ்வாறான சூழலில் ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் யஹ்யா சின்வார் அண்மையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஹமாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ‘யுத்தம் நிறுத்தப்பட்டு இஸ்ரேல் படையினர் முழுமையாக வெளியேறும் வரை பணயக் கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் ஏழு நாட்கள் நடைமுறையில் இருந்த ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்த நிறுத்தத்தின் ஊடாக சுமார் 100 பணயக்கைதிகளும் 330 பலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அனைத்துப் பயணக் கைதிகளையும் விடுவிப்பதற்கு முன்னர் இஸ்ரேல் யுத்த நிறுத்தத்தில் இருந்து வெளியேறி போரை மீண்டும் ஆரம்பித்தது.
ஹமாஸ் பிடியிலுள்ள எஞ்சியுள்ள பணயக் கைதிகளை விடுவிப்பதை பிரதான இலக்காகக் கொண்டு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் நிமித்தம் அமெரிக்கா, கட்டார், எகிப்து ஆகிய நாடுகள் கடுமையாக உழைத்து வருகின்றன. இருந்தும் இன்னும் யுத்த நிறுத்தம் ஏற்பட்டதாக இல்லை.
காசாவில் ஆரம்பமான யுத்தம், ஒரு வருடம் நிறைவடைவதற்குள் காசாவுக்கு அப்பால் லெபனானுக்கும் விரிவடைந்துள்ளது. அதனால் லெபனானும் காசாவைப் போன்று சாம்பல் மேடாக மாறி வருகிறது. அத்தோடு சிரியா, யெமன் மீதும் இஸ்ரேல் தாக்குதல்கள் முன்னெடுக்கவே செய்கிறது.
இதேவேளை வடக்கு காசாவில் மீண்டும் படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ள இஸ்ரேல், அதனை 19 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதன் விளைவாக வடக்கு காசாவில் 600 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தும் உள்ளனர்.
19 நாட்களுக்கும் மேலாக வடக்கு காசா முற்றுகை நீடிப்பதால் பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. முகவரகம், அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய அனுமதிக்கும் வகையில் உடனடியாக யுத்தத்தை நிறுத்துமாறு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்தோடு அம்முகவரகத்தின் தலைவர் பிலிப்பே லஸ்ஸாரினி ‘எக்ஸ்’ தளத்தில், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு, தண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் காசா தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளது. அத்தகவல்களில் இப்போர் காரணமாக காசா அபிவிருத்தியில் 69 வருடங்கள் பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசா மீதான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ள சூழலில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (யூ.என்.டி.பி) மேற்கொண்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையும் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில் காசா, மேற்கு கரை, கிழக்கு ஜெரூஸலம் உள்ளிட்ட பலஸ்தீன பிராந்தியத்தில் 2024 ஆம் ஆண்டு நிறைவடையும் போது வறுமை 74 சதவீதத்தை தாண்டும் என்றும், தற்போது 41 இலட்சம் மக்கள் வறுமைக்கு உள்ளானவர்களாகக் கருதப்படுகின்றனர்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் மாத்திரம் 2.61 மில்லியன் பேர் வறுமைப்பட்டியலுக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்தோடு இலட்சக்கணக்கான பலஸ்தீனியர்கள் ஏற்கனவே வறுமைக்கோட்டின் கீழ் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையொன்று தெரிவித்திருக்கிறது.
மேலும் காசா உள்ளிட்ட பலஸ்தீனில் கல்வி, சுகாதார வசதிகளின் அபிவிருத்தி இப்போரினால் 70 வருடங்களுக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இந்த யுத்தம் தொடங்க முன்னர் இஸ்ரேலில் வேலைவாய்ப்பை பெற்றிருந்த காசா மக்கள், யுத்தம் ஆரம்பமான பின்னர் வேலை வாய்ப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அத்தோடு காசாவின் கைத்தொழில் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இப்போர் பாதிப்புக்களையும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் காசாவில் உள்ளிட்ட பலஸ்தீனப் பிராந்தியத்தில் வேலையின்மை பெரிதும் அதிகரித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் 49.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. போரின் விளைவாக காசாவின் மனித மேம்பாட்டு சுட்டி 69 வருடங்களுக்கு அல்லது 1955 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு பின்தள்ளப்பட்டிருப்பது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
இச்சுட்டி மேற்கு கரையில் தற்போது 16 வருட வீழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. யுத்தம் நீடிப்பதால் இது மேலும் மோசமடையக்கூடிய அபாயம் உள்ளதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் யூ.என்.டி.பி தலைவர் அசிம் ஸ்டெய்னர் ஏ.எப்.பியிடம் கூறுகையில், இப்போரினால் உட்கட்டமைப்பு அழிவும் வறுமை மற்றும் வாழ்வாதார இழப்பு போன்ற உடனடி விளைவுகளும் மிகவும் பாரியதாக உள்ளது. போர் முடிவடைந்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டாலும் கூட, பலஸ்தீனியப் பொருளாதாரம் பழைய நிலைக்கு மீட்சி பெற குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கு மேல் செல்ல முடியும்’ என்றுள்ளார்.
இவை இவ்வாறிருக்க, இப்போரின் போது 75 ஆயிரம் தொன் வெடிபொருட்கள் காசாவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக 42 மில்லியன் தொன் திண்மக்கழிவுகள் சேர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள காசா ஊடக அலுவலகம், கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் யுத்தத்தினால் 33 பில்லியன் டொலர் நேரடி சேதங்கள் காசாவில் ஏற்பட்டுள்ளன’ என்றுள்ளது. இங்கு சேர்ந்துள்ள திண்மக்கழிவுகளை முழுமையாக அகற்றுவதற்கு 15 வருடங்களுக்கு மேல் செல்ல முடியும் என ஐ.நா. சுற்றாடல் திட்டம் ஏற்கனவே தெரிவித்திருக்கிறது.
மின்சாரத்திற்காக காசாவில் சூரியப்படல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்போரினால் சூரியப்படல்களும் அழிவடையவும் சேதமடையவும் செய்கின்றன.
ஆனால் இப்படல்களில் காணப்படும் ஈயம் உள்ளிட்ட பிற கனரக உலோகங்கள் உடலாரோக்கியத்திற்கு மிக மோசமான தீங்குகளை விளைவிக்கக்கூடியவை என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இப்போரின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுத தளவாடங்களில் வெடிக்காத வெடிபொருட்களும் காசாவில் பரவலாகக்காணப்படுகின்றன. அவை எந்தவேளையிலும் வெடித்து சிதறும் அபாயத்தைக் கொண்டுள்ளன.இந்த யுத்தத்தின் விளைவான கோரப்பிடிக்குள் காசா மக்கள் சிக்குண்டுள்ளார்கள். அதனால் யுத்தத்தை நிறுத்தி உடனடியாக அமைதி வழிக்கு திரும்புமாறு முழு உலகமும் வலியுறுத்தி வருகிறது.
மர்லின் மரிக்கார்