இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக கடந்த சில வாரங்களாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் அடிக்கடி விடுக்கப்படுவதால், அண்மைக் காலமாக இந்தியாவில் ஏராளமான விமானங்கள் திருப்பி விடப்படுவதும், சில ரத்து செய்யப்பட்டு பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவதும் தொடர்கதையாகி வருகின்றது.
ஒரு வாரத்தில் மட்டும் இந்திய விமான நிறுவனங்களுக்கு 90 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. அதற்கும் மேல் கடந்த ஜூன் மாதம் ஒரே நாளில் மின்னஞ்சல் வழியாக வந்த 41 மிரட்டல்களால் பல விமானங்கள் தாமதமாகின.
இந்திய விமான நிலையங்களுக்கு இப்படியான வெடிகுண்டு மிரட்டல்கள் புதிதல்ல. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2017 வரை மொத்தம் 120 மிரட்டல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதில், நாட்டின் பெரிய விமான நிலையங்களான மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்களுக்கு வந்த மிரட்டல்கள் பாதிக்கும் அதிகம். எனினும் கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு வந்து கொண்டிருக்கும் மிரட்டல்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.
இந்த மிரட்டல்களை நிபுணர்கள் 5 வகையாகப் பிரிக்கின்றனர். உண்மையிலேயே தீய நோக்கத்துடன் வரும் மிரட்டல், கவன ஈர்ப்புக்காக விடுக்கப்படுபவை, விமானச் சேவையைத் தடுக்கும் நோக்கம் கொண்டவை, மனநலப் பிரச்சினை.
கடந்த ஓராண்டில் மட்டும் 15 கோடி இந்தியர்கள் உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொண்டதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 33 சர்வதேச விமான நிலையங்கள் உட்பட 150- இற்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் தினமும் 3,000 இற்கும் மேற்பட்ட விமானங்கள் இந்தியாவுக்கு வந்து செல்கின்றன.
கடந்த ஒக்ேடாபர் 14 அன்று இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் சுமார் 4,84,263 பயணிகள் விமானப் பயணங்களை மேற்கொண்டிருக்கின்றனர். இப்படியான ஒரு சூழலில்தான் இந்த வெடிகுண்டு புரளிகளும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சம் தொட்டுள்ளன.
வானில் பறந்துகொண்டிருக்கும் ஒரு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும்போது அதில் இருக்கும் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள், பீதி விபரிக்க முடியாதவை.
விமானம் உடனடியாக அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு விமான நிலையத்தில் தரையிறக்கப்படும். அந்த விமானம் தரையிறங்கியதும், அதில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகள் அனைத்தும் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். கண்டிப்பாக இதற்குப் பல மணி நேரம் ஆகும்.
இன்னொருபுறம் விமானத்திலிருந்த விமானிகள் உள்ளிட்ட அதே குழுவினர் மீண்டும் அதே விமானத்துக்கு அனுப்பப்பட மாட்டார்கள். அதற்குப் பதில் வேறொரு குழு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இதற்கும் சில மணி நேரங்கள் ஆகும். சிலநேரம் இந்த தாமதம் விமானம் ரத்து செய்யப்படவும் வழிவகுக்கும்.
யாரோ சிலர் தங்கள் பொழுதுபோக்குக்காக விடுக்கப்படும் இது போன்ற போலி வெடிகுண்டு மிரட்டல்கள் ஆயிரக்கணக்கான மக்களின் நேரத்தையும், விமான நிறுவனங்களின் பணத்தையும் வீணாக்குகின்றன.
வரும் மிரட்டல்களில் 99.9 சதவீத மிரட்டல்கள் போலியானவைதான் என்றாலும், அந்த 0.1 சதவீத மிரட்டல் உண்மையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே இத்தனை கெடுபிடிகள். கடந்த வாரம் வந்து 90 மிரட்டல்களில் 70% மிரட்டல்கள் ஆடம் லான்ஸா (@adamlanza1111) என்ற எக்ஸ் கணக்கிலிருந்து வந்துள்ளன.
இந்த ஆடம் லான்ஸா யார் என்று பார்த்தால், இவர் கடந்த 2012ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஒரு சிறார் பாடசாலையில் 20- இற்கும் மேற்பட்ட பிஞ்சுக் குழந்தைகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்று தானும் சுட்டு தற்கொலை செய்துகொண்டவர். அவரது பெயரில் ஒரு போலிக் கணக்கு தொடங்கி மிரட்டல் விடுப்பதன் மூலம் மிரட்டல் விடுக்கும் அந்த நபர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.
கடந்த ஒக்ேடாபர் 15-ஆம் திகதி மும்பையிலிருந்து 211 பயணிகளுடன் சிக்காகோ புறப்பட்ட போயிங் விமானம் ஒன்று திருப்பி விடப்பட்டது. இது போல இன்னும் சில விமானங்கள் வேறு விமான நிலையத்துக்கு விடப்பட்டதால் சமூக வலைத்தளங்களில் விமான நிறுவனங்களின் பக்கங்களில் பயணிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஒக்ேடார் 20 அன்று விஸ்தாரா, எயார் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களுக்குச் சொந்தமான 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.
இந்தியாவில் பல விமானங்களுக்கு ஏற்கெனவே வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் விடுத்துள்ள மிரட்டல் ஒன்று கூடுதல் கவனம் பெற்றுள்ளது. சீக்கியர் படுகொலையின் 40- ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ‘நவம்பர் 1- ஆம் திகதி முதல் 19- ஆம் திகதி வரை எயார் இந்தியா விமானத்தில் யாரும் பறக்க வேண்டாம்’ என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளது பீதியை மேலும் கிளப்பியது.
ஆனால், சமீபத்தில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்கும் காலிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது சந்தேகமே.
எந்தவொரு அடையாளமும் இல்லாமல் போலி சமூக ஊடக கணக்குகளிலிருந்து விடுக்கப்படும் இந்த மிரட்டல்களால், அதை விடுத்தவரின் நோக்கம் என்னவென்று அறிந்து கொள்வதே அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியைத் தருகிறது. காரணம், மிரட்டல் விடுத்தவர் யார்? அவரது நோக்கம் என்ன? உண்மையிலேயே அவருக்கு இருப்பது தீய நோக்கமா? அல்லது பொழுதுபோக்குக்காக இப்படிச் செய்தாரா? அவர் தனிநபரா? அல்லது குழுவா?
எதுவுமே புரியவில்லை.
எஸ்.சாரங்கன்