இந்தியாவின் மீட்சி
நியூசிலாந்துக்கு எதிராக ஒரு வாரத்துக்கு முன்னர் பெங்களூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ஓட்டங்களுக்கு சுரண்டது அந்த அணிக்கு பெருத்த தலைகுனிவாக இருந்தது. என்றாலும் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டு வந்த இந்திய அணி 462 ஓட்டங்களை எடுத்தது.
இதன்மூலம் இந்தியாவால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடிந்தாலும் தோல்வியை தடுக்க முடியவில்லை.
இதில் இந்தியா முதல் இன்னிங்ஸை விடவும் இரண்டாவது இன்னிங்ஸில் பத்து மடங்குக்கு அதிக ஓட்டங்களைப் பெற்றது. அதாவது டெஸ்ட் வரலாற்றில், முதல் இன்னிங்ஸை விடவும் இரண்டாவது இன்னிங்ஸில் பத்து மடங்குக்கு மேல் ஓட்டங்கள் பெற்றது இது இரண்டாவது முறை.
இதனை விடவும் மிகப்பெரிய மீட்சியை கண்ட போட்டி 1924 ஆம் ஆண்டு எட்ஜ்பாஸ்டனில் நடந்தது. அப்போது இங்கிலாந்துக்கு எதிராக தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 30 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி மீட்சி கண்டு 390 ஓட்டங்களை பெற்றது.
இது முதல் இன்னிங்ஸை விடவும் 13 மடங்கு அதிகமாகும். என்றாலும் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 438 ஓட்டங்களைப் பெற்றதால் தென்னாபிரிக்க அணியால் இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்க வேண்டி ஏற்பட்டது.
என்றாலும் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய மீட்சி கண்ட அணி என்ற பெருமையை இங்கிலாந்தின் ஹம்ஷர்வெயர் கௌண்டி அணியிடம் இருந்து யாரும் இதுவரை தட்டிப் பறிக்கவில்லை. 1922 இல் நடந்த கௌண்டி சம்பியன்சிப் போட்டியில் வெர்விக்ஷர் அணிக்கு எதிராக ஹம்ஷர்வெயர் முதல் இன்னிங்ஸில் வெறுவமனே 15 ஓட்டங்களுக்கு சுருண்டது.
என்றாலும் முதலாவது இன்னிஸை விடவும் 34 மடங்கு அதிகமாக 521 ஓட்டங்களைப் பெற்ற அந்த அணி 155 ஓட்டங்களால் வென்றது.
சொந்த மண்ணின் சாபம்
பெங்களூரில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 46 ஓட்டங்களுக்கு சுரண்டது கிரிக்கெட் வரலாற்றில் 18 ஆவது மிகக் குறைந்த ஓட்டங்களாகும். 1994 மார்ச்சில் போர்ட் ஸ்பெயினில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியும் 46 ஓட்டங்களுக்கு சுருண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் மிகக் குறைந்த ஓட்டங்கள் பெற்ற 17 சந்தர்ப்பங்களில் ஆறு முறை சொந்த மண்ணிலேயே ஒரு அணி சொற்ப ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்துள்ளது.
இதிலே டெஸ்ட் வரலாற்றில் மிகக் குறைந்த ஓட்டங்களாக நியூசிலாந்து அணி 1955 இல் இங்கிலாந்துக்கு எதிராக பெற்ற 26 ஓட்டங்கள் கூட அந்த அணி தனது சொந்த மண்ணில் ஒக்லாந்தில் ஆடிய போட்டியாகும்.
இந்த வரிசையில் தென்னாபிரிக்க அணி மூன்று முறை சொந்த மண்ணில் குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்டிருக்கிறது. தென்னாபிரிக்கா பலவீனமாக இருந்த 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த பரிதாபத்தைச் சந்தித்தது.
இதிலே இந்தியா தனது சொந்த மண்ணில் பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்களாக இந்த 46 ஓட்டங்களுக்கு பதிவானது. இதில் 1987 நவம்பரில் டெல்லியில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 75 ஓட்டங்களுக்கு சுருண்டதே முந்தைய மோசமான சாதனையாக இருந்தது. மிக அண்மையில், 2008 ஏப்ரலில் தென்னாரிக்காவுக்கு எதிராக அஹமதாபத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பகல்போசண இடைவேளைக்கு முன்னரே 76 ஓட்டங்களுக்கு சுருண்டது.