கொழும்பு மாவட்டத்தில் வாழ்கின்ற மூவின மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி அவர்களுக்கு தனது அரசியலினூடாக சிறந்த வாழ்வாதார வசதிகளை பெற்றுக்கொடுப்பதே, தனது அரசியலின் பிரதான நோக்கமாகுமென புதிய ஜனநாயக முன்னணி சார்பில் (சிலிண்டர் சின்னத்தில்) கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் நௌஸர் பௌஸி தெரிவித்தார்.
சிரேஷ்ட அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். பௌஸியின் புதல்வரான நௌஸர் பௌஸி, கொழும்பு மாவட்ட அரசியலில் பிரபலமிக்கவர். மாவட்டத்தின் மூவின மக்களின் ஆசிர்வாதத்துடன் இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வி.
கேள்வி: உங்களுடைய அரசியல் பிரவேசம் பற்றி வாசகர்களுக்கு கூற முடியுமா?
எனது அரசியல் பிரவேசம் கொழும்பு மாநகர சபையில் இருந்து ஆரம்பிக்கிறது. 1996ஆம் ஆண்டு நான் முதல் தடவையாக உள்ளூராட்சி மன்றத்தேர்தலில், கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டு மாநகர சபை உறுப்பினராக தெரிவானேன். அப்போது கொழும்பு மாநகர சபை வாழ் மக்களுக்கு எவ்வித கட்சி இன மத பேதமின்றி நான் எனது சேவையை வெற்றிகரமாக முன்னெடுத்தமை எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. எனது தகப்பனாரின் வழிகாட்டலில் கொழும்பு வாழ் மக்களுக்கு என்னால் முடியுமான சேவையை பெற்றுக்கொடுத்தேன்.
கேள்வி: கொழும்பு மாநகர சபை உறுப்பினராக சேவையாற்றிய பின்னர் என்ன செய்தீர்கள்?
உண்மையில், கொழும்பு மாநகர சபை உறுப்பினராக இருந்து நான் பெற்ற அரசியல் அனுபவத்தைக் கொண்டு, எனது கொழும்பு வாழ் மக்களின் ஆசீர்வாதத்துடன் 1997ஆம் ஆண்டு மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டேன். அதிலும் மக்கள் எனக்கு வழங்கிய விருப்புவாக்குகளினால் நான் தெரிவு செய்யப்பட்டேன்.
கேள்வி: மேல் மாகாண சபை உறுப்பினராக இருந்து உங்கள் மாவட்டத்துக்கு மாத்திரமன்றி உங்கள் பிரதேச மக்களுக்கும் என்ன செய்தீர்கள்?
இது நல்லதொரு கேள்வி. உண்மையில் ஒரு மாகாண சபை உறுப்பினராக இருந்துகொண்டு எனக்கு கிடைக்கின்ற நிதியொதுக்கீட்டின் மூலமாக நான் பல அபிவிருத்திகளை எனது மாவட்டத்தில் முன்னெடுத்தேன். அதிலும் விசேடமாக எனது பிரதேசத்திலுள்ள வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களை இனங்கண்டு அவர்களுக்கு சுயதேவைகளை மேற்கொள்ள தேவையான உபகரணங்களை வழங்கி அவர்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவிக்கரம் நீட்டினேன். அத்தோடு, எனக்கு கிடைக்கின்ற நிதியொதுக்கீட்டின் ஊடாக எமது மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலைகளின் வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் நிதியொதுக்கீடுகளை வழங்கி பாடசாலைகளின் குறைபாடுகளை முடியுமானவரை நிவர்த்தி செய்தேன்.
கேள்வி: மாகாண சபைத் தேர்தலில் ஒரு தடவையா நீங்கள் தெரிவு செய்யப்பட்டீர்கள்?
இல்லை, நான் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு நான்கு தடவைகள் வெற்றிபெற்றேன். நான்கு தடவையும் கொழும்பு வாழ் மூவின மக்களினதும் ஆதரவுடனேயே வெற்றிபெற்றேன் என்பதை இச்சந்தர்ப்பத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறேன். அதேபோன்று, நான் மூவின மக்களினதும் தேவைகளுக்காகவே அரசியல் செய்தேன். அதனால் தான் இன்றும் மக்கள் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது, தொடர்ந்தும் அரசியலில் இருக்க வேண்டுமென்று என்னைக் கேட்டுக்கொண்டனர். அதேபோல், இவ்வளவு தூரம் நான் அரசியலில் ஒவ்வொரு படியாக முன்னேறுவதற்கு காரணம் இறைவனின் கிருபையும், எனது தகப்பனாரின் வழிகாட்டலும் எனது மக்களின் ஆசிர்வாதமும் என்றால் அது மிகையாகாது.
கேள்வி: தற்போது நீங்கள் துபாய் நாட்டின் நிறுவனமான ‘சயீடா’ நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளராக இருந்து, நாட்டின் கல்வித்துறை மறுமலர்ச்சிக்கு பாரிய பங்களிப்பு செய்து வருவதாக எல்லோரும் சொல்லுகிறார்கள்? அது தொடர்பில்….
ஆம், உண்மைதான். துபாயைச் சேர்ந்த சயீடா நிறுவனம் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு நண்பனுடையதாகும். அவர் என்னை தொடர்புகொண்டு இலங்கையின் கல்வித்துறை மறுமலர்ச்சிக்கு உதவ ஆவலாக இருப்பதாக தெரிவித்தார். அதற்கு எனது ஆதரவையும் வேண்டி நின்றார். நான் அவருடைய வேண்டுகோளை ஏற்று, இன்று நான் சயீடா அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளராக நியமிக்கப்பட்டு, கல்வி வளர்ச்சிக்கான பணியை மேற்கொண்டு வருகிறேன். இதன் நோக்கம், வளப்பற்றாக்குறையுள்ள, இடநெருக்கடி ஏற்பட்டுள்ள பாடசாலைகளை இனங்கண்டு அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான். அதற்காக ஒரு திட்டத்தை செயற்படுத்தி இன்று நாடளாவியரீதியில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறேன்.
கேள்வி: இதுவரை எந்த பகுதி பாடசாலைகளுக்கு கூடுதல் உதவிகளை செய்துள்ளீர்கள் என்பதை குறிப்பிட முடியுமா?
பாடசாலைகளை இனங்கண்டு அப்பாடசாலைகளுக்கு இயன்ற உதவிகளை செய்தோம். தென் மாகாண பகுதியிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பாடசாலைகளை தெரிவு செய்து அவற்றின் வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்தோம். சில பாடசாலைகளுக்கு வகுப்பறை கட்டடங்கள் இன்னும் சில பாடசாலைகளின் கூரைகள் முழுமையாக புனரமைக்கப்பட்டதோடு சில பாடசாலைகளுக்கு மலசல கூட வசதிகளையும் செய்து வழங்கியுள்ளோம். சில பாடசாலைகளுக்கு குடிநீர் வசதிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளதோடு, சுற்றுமதில் இல்லாத பாடசாலைகளுக்கு சுற்றி மதில்களையும் அமைத்து கொடுத்துள்ளோம்.
கேள்வி: நீங்கள் தேர்தலில் களமிறங்கியுள்ள கொழும்பு மாவட்ட பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு என்ன செய்துள்ளீர்கள்?
எனது கொழும்பு மாவட்டத்திலுள்ள மூவின மாணவர்கள் கல்வி கற்கின்ற பாடசாலைகளை இனங்கண்டு அப்பாடசாலைகளில் எமது சயீடா நிறுவன உதவியுடன் வகுப்பறை கட்டடங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு அதனை திறந்து வைத்துள்ளோம். அதேபோன்று, பின்வரும் பாடசாலைகளுக்கும் என்னால் உதவி வழங்கி அப்பாடசாலைகளின் அபிவிருத்திக்கு களம் அமைத்துக்கொடுக்க முடிந்தது. இதில் கொழும்பு மாவட்டத்திலுள்ள பாத்திமா முஸ்லிம் பெண்கள் கல்லூரி, சேர் ராசிக் பரீத் முஸ்லிம் கல்லூரி, புனித செபஸ்தியன் சிங்கள வித்தியாலயம், டபிள்யூ.பி. /ஜெயா/ வித்யாகார பாலிகா நவோத்யா, புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி, ஹேமமாலி பாலிகா வித்தியாலயம், மகாபோதி கல்லூரி, டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் கல்லூரி, புனித அந்தோனியார் தமிழ் மகா வித்தியாலயம், கைரியா பெண்கள் கல்லூரி, ஹம்ஸா கல்லூரி மற்றும் கலைமகள் தமிழ் வித்தியாலயம் என்பனவாகும். இந்த பாடசாலைகளுக்கு தேவையான வகுப்பறை கட்டடங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளதோடு அனைத்து கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகளின் பங்குபற்றலுடன் கட்டடங்களை திறந்து வைத்தேன்.
மேலும், நாடு முழுவதும் 38 பாடசாலைகளில் எமது அபிவிருத்தி திட்டங்கள் விஸ்தரிக்கப்பட்டு, வகுப்பறைகளை மேம்படுத்துதல், புதிய வகுப்பறை கட்டடங்கள் நிர்மாணித்தல் மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி சரியான கற்றல் சூழலையும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பான இடத்தையும் வழங்க நடவடிக்கையெடுத்துள்ளேன்.
கேள்வி: இளைஞர்களுக்கு இலவச (ICT) தொழில்வாய்ப்புக்கான வழிகாட்டல் நிலையமொன்றை கொழும்பில் உருவாக்கியுள்ளதாகவும் இது முற்றிலும் இலவசமாக நடைபெறுவதாகவும் கேள்விப்பட்டேன். இது உண்மையா?
பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையில் பயிற்சிகளை வழங்கி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பட்டதாரி மாணவனை உருவாக்க வேண்டும் என்ற தூய நோக்கில், கொழும்பு 10, 459, 2ஆவது பிரிவு, மருதானை இல் எனது சொந்த கட்டடத்தில் MS Office இலவச வழிகாட்டல் நிலையமொன்றை உருவாக்கி வகுப்புகளை முன்னெடுத்து வருகிறேன்.
இது முற்றிலும் இலவசமாக செயற்பட்டு வருகிறது. இதில் தரம் 9, 10, மற்றும் O/L மாணவர்களுக்கான தேசிய பாடத்திட்டத்தைப் பின்பற்றி இலவச கணினி வகுப்புகளை ஆரம்பித்துள்ளேன். இதில் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக கணினி வகுப்புகளில் கலந்துகொண்டு கற்று வருகின்றனர். இதற்கு நான் பூரண அனுசரணை வழங்கி வருகிறேன். இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆண், பெண் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த வகுப்புகள் அனைவரையும் உள்ளடக்குவதை ஊக்குவிப்பதற்காக ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
கேள்வி: எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற்றால் மக்களுக்கு என்ன செய்வீர்கள்?
வெற்றி தோல்வி என்பது சகஜம். இரண்டையும் எதிர்பார்த்தே ஒவ்வொருவரும் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில், கொழும்பு வாழ் மக்கள் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் என்னை அவர்களின் பெறுமதியான வாக்குகளினூடாக தெரிவு செய்வார்களாயின் நிச்சயம் நான் எனது அரசியல்பலத்தினூடாக இம்மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரம், சுகாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி மறுமலர்ச்சி உட்பட இன்னோரன்ன தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து எனது சேவையை முன்னெடுப்பேன்.