பழைய அரசியல்வாதிகளின் வாக்கு வங்கி நன்றாக சரிந்து விட்டது. குறைந்தது இவர்கள் எவரிடமும் தமக்கு நம்பிக்கை இல்லை. யாராவது புதிதாக வந்தால் அவர்களுக்கு ஒரு சர்ந்தப்பத்தைக் கொடுத்துப் பார்க்கலாம் என்ற மனப்பாங்கு யாழ். மக்களுக்கு வந்துள்ளது என்கிறார் யாழ். மாவட்டத்தில் சுயேச்சைக்குழு 17இல் களமிறங்கும் சிவப்பிரகாசம் மயூரன். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வியில் யாழ். மாவட்டத்தில் தேசியவாதிகளின் சரிந்த வாக்கு வங்கியை தாம் பிடிக்கும் நம்பிக்கை உள்ளதென்கிறார். தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய செவ்வி…
கேள்வி: உங்களைப் பற்றிக் கூறுங்கள்…?
பதில்: நான் சிவப்பிரகாசம் மயூரன் (B.Sc. Eng, (Hons) University of Morattuva, ACCA, CMA (USA) CIMA Affiliate , CII ) பிறந்த இடம் மீசாலை, சாவக்கச்சேரி. யாழ் இந்துக் கல்லுாரியில் கணிதத்துறையில் உயர்தரம் கற்று 2005 க.பொ.த.உயர் தரத்தில் அகில இலங்கை ரீதியில் கணிதத்துறையில் முதலாவது இடம் பெற்றேன்
எனது இசட் ஸ்கோர் 3.2884 இதுவரை 18 வருடங்களாக அந்தப் புள்ளியை இதுவரை எவரும் முறியடிக்கவில்லை. நான் மொரட்டுவை பல்கழைக்கழகத்தில் இலத்திரனியல் தொலைத்தொடர்புத்துறையில் பொறியியலாளராக பட்டம் பெற்றேன். அங்கு கற்கும்போதே இரண்டு வருடத்திற்குள் சி.ஜ.எம்.ஏ (பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் முகாமைத்துவ கணக்காளர் (லண் டன்) பரீட்சையில் சித்தியடைந்தேன்.
அதன் பின்னர் கணக்கியல் துறையில் பல்வேறு நிறுவனங்களில் விரிவுரையாளராக கடமையாற்றினேன். அத்துடன் கணக்கியலில் பகுதி நேர விரிவுரையாளராக இந்தியா, மாலைதீவு, கட்டார், பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கும் சென்று விரிவுரையாற்றுகின்றேன். அதன் பின்னர் கணக்கியல் துறையில் ஏ.சி.சி.ஏ, சி.எம்.ஏ (ஜக்கிய அமேரிக்கா) சி.ஜ.ஜ. காப்புறுதி நிதி போன்ற பட்டங்களையும் பெற்றேன். தற்பொழுது பஹ்ரைனில் உள்ள கணக்கியல் சம்பந்தமான தனியார் பல்கலைக்கழகத்தில் நிதி கணக்கியல் பகுதிக்கு தலைவராக கடமையாற்றுகின்றேன்.
கேள்வி: தற்பொழுது யாழ். மாவட்டத்தில் தேர்தலில் குதிப்பதன் நோக்கம் என்ன?
பதில்: யாழ்ப்பாணத்தில் வைத்தியர் ஆர். அர்ச்சுனா தலைமை வேட்பாளர். அவர் எனது பாடசாலையில் மாணவத் தோழன். அவருடன் இணைந்து நாங்கள் சுயேச்சைக் குழு 17 இல் களமிறங்கியுள்ளோம். எங்களது சின்னம் மருந்தேற்றும் ஊசி , 9 பேர் யாழ்., கிளிநொச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றோம் எனது விருப்பு வாக்கு இல 8 ஆகும்.
கேள்வி: உங்களைப்பற்றி மக்கள் அறிந்துள்ளார்களா? உங்களது தேர்தல் பிரசாரம் யாழ். மக்களிடம் எவ்வாறு சென்றடைகிறது?
பதில்: டொக்டர் ராமநாதன் அர்ச்சுனா ஊழல்களுக்கு எதிராக எழுந்து குரல் கொடுத்தார். பல பிரச்சினைகளை ஏற்படுத்தினார்கள். வைத்தியசாலைகளில் நடைபெறும் ஊழல்களையும் அவர் வெளியில் கொண்டு வந்தார். அதன் பின்னர் மக்கள் அவரின் பின்னே அலை அலையாக ஒன்று சேர்ந்து கொண்டனர். அதே போன்று பாராளுமன்ற பிரதிநிதியாகி அவர்கள் மக்களது பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்காக நாங்கள் சுயேச்சையாக ஒர் அணியாக திரண்டு இருக்கின்றோம்.
ஏற்கனவே அந்த மக்களது பிரநிதிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் வாக்களித்த பிரதிநிதிகள் அங்கு எவ்வித வேலையையும் அங்கு செய்ய வில்லை தேர்தல் காலத்தில் மட்டும் அவர்கள் வெறுமனமே கோஷங்களை எழுப்புகின்றனர். ஆனால் சாதாரண ஏழை மக்களின் பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் என நிறையப் பிரச்சினைகள் அங்கு உள்ளன. முன்னைய பா.உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் மைக்கைப் பிடித்து பெரிய கதைகளை கதைக்கிறார்களே தவிர மக்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதான் எங்களது மையக் கருப்பொருளாகும். அரசியல் சார்ந்த, தமிழ் தேசியம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கத்தான் போகின்றது. அதனையும் நாங்களும் பேசத்தான் போகின்றோம். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதனைக் கதைக்கின்ற நேரத்தில் ஏன் மக்களது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு முடிவு காணக்கூடாது.
கேள்வி: அங்கு ஏற்கனவே தமிழரசுக் கட்சி, ஈ.பி.டி.பி போன்ற பல கட்சிகள் உள்ளன. பெரிய கட்சிகள் தேர்தல் குதிக்கின்ற போது உங்களது சுயாதீன வேட்பாளர்கள் ஆகக் குறைந்தது ஒரு பாராளுமன்ற உறுப்பினரையாவது பெற இயலுமா?
பதில்: மத்தியில் ஓர் ஆட்சி மாற்றம் வந்திருக்கின்றது. நாடளாவிய ரீதியில் மக்கள் புதிய இளைஞர்களை, படித்தவர்களை எதிர்பாக்கின்றனர். இதுவரை ஏமாற்று அரசியல் செய்து கொண்டிருந்த எங்களது அரசியல்வாதிகளை புறம் தள்ளுகின்ற மனப்பாங்கு மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அது நல்ல விஷயம்.
இதுவரை காலம் எப்படி இருந்தது ? புள்ளடி போட்டால் வீட்டுக்கு அல்லது சைக்கிளுக்கு, அல்லது வீணைக்கு போடுவது என்ற மனப்பாங்கிலேயே மக்கள் இருந்தனர். இப்ப இந்த வாக்கு வங்கி நன்றாகக் குறைந்து விட்டது. குறைந்து இவர்கள் எவரிடமும் தமக்கு நம்பிக்கை இல்லை. யாராவது புதிதாக வந்தால் அவர்களுக்கு ஒரு சர்ந்தர்ப்பத்தைக் கொடுத்துப் பார்க்கலாம் என்ற மனப்பாங்கு மக்களுக்கு வந்துள்ளது. இந்த இடத்தில் தான் ஓர் வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தினை நாங்கள் நிரப்பி மக்களுக்கு சரியான பாதைகளை காட்டுவதற்கு தேர்தலில் குதித்துள்ளோம். அடுத்தடுத்து அரசியல்வாதிகளுக்கு முன் உதாரணமாக இருத்தல் வேண்டும் என்றும் நாங்கள் ஆசைப்படுகின்றோம்.
கேள்வி: மக்கள் உங்களை எவ்வாறு வரவேற்கின்றார்கள் ஆதரவு இருக்கின்றதா ?
பதில்: நிறைய வரவேற்பு உள்ளது. நாங்கள் கூட்டங்களுக்கு போகும்போது. மக்களது காலடிக்குப் போகும்போது எங்களது குழுவை தெரியாத ஆட்கள் இல்லை. டொக்டர் அர்ச்சுனா என்றால் சகலருக்கும் தெரியும். எங்களை சிரித்த முகத்துடன் வரவேற்கிறார்கள். அவர்களது பிரச்சினைகளை எங்களிடம் மனம் விட்டு கதைக்கின்றார்கள். வாழ்வாதாரம், பாதை அபிவிருத்திகள், வீடமைப்பு, சுகாதாரம் , கல்வி போன்ற எல்லாப் பிரச்சினைகளையும் எங்களிடம் சொல்கின்றனர். எங்களிடம் நம்பிக்கை வைத்துத் தான் இதனை எங்களிடம் சொல்லுகின்றனர்.
கேள்வி: கடந்த 3 தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட ரீதியாக உங்களது குழு எவ்வாறான தீர்வுகளை வழங்கப் போகின்றது ?
பதில்: இந்த நாடு பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது தான் சிறுகச் சிறுக முன்னேறிக் கொண்டு வருகின்றோம். அந்த வகையில் தான் வெளிநாட்டு நேரடி முதலீடு தேவைப்படுகின்றது. டொலர் எமது நாட்டுக்குள் வருவதற்கு கட்டாயம் மத்தியில் இருக்கின்ற அரசங்கம் அதனைக் கொண்டு வருவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். அவர்களோடு நாங்களும் நின்று, இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து நிறைய முதலீடுகளை வடக்கு, கிழக்குக்கு கொண்டு வரமுடியும். அது புலம் பெயர் சமுகத்தால் மேற்கொள்ளப்படலாம். வேறு கட்டமைப்புகள் ஊடகவும் மேற்கொள்ளப்பட முடியும். வாய்ப்புக்கள் நிறைய உண்டு. முதலிடுவதற்கு நிறைய முதலீட்டாளார்கள் உள்ளனர். அதனை ஒருங்கிணைப்பதற்கு ஒழுங்கானவர்கள் எம் மத்தியில் இல்லை. எமக்கு வடமாகாண சபை முதன்முதலாக தரப்பட்ட காலத்தில் அந்த மாகாண சபைக்கே அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் மீண்டும் மத்திய அரசுக்குச் சென்றதை நாம் கண்டோம். இப்படிப்பட்டவர்கள் புதிதாக என்ன திட்டங்களை வகுத்து சேவைசெய்யப் போகின்றார்கள்? 2009 இல் போரட்டம் முடிந்த பிறகு 15 வருடமாக மக்கள் ஏமாந்து தான் உள்ளனர். இதனால் மக்கள் உடைந்து போய்விட்டார்கள். தற்பொழுது சிரேஷ்ட அரசியல்வாதிகளது பெயர்களைச் சொல்லி இவர் வரக்கூடாது என்ற கோஷங்கள் எழுகின்றன. இதனை பழைய அரசியல்வாதிகள் உணர்ந்து விட்டார்கள். இப்படியான மனநிலை வந்து விட்டது. அது எங்களுக்கு ஒரு பெரிய சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதனைப் பயண்படுத்தி அழகாகச் செய்து காட்டுவோம். யாழ்ப்பாணத்தில் 6 பாராளுமன்ற உறுப்பினருக்காக 23 பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் 21 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
பேட்டி கண்டவர்: அஷ்ரப் ஏ சமத்