Home » காணி சீர்திருத்தம் மூலம் தோட்டத்தொழிலாளருக்கு காணி உரிமை வழங்கப்படும்

காணி சீர்திருத்தம் மூலம் தோட்டத்தொழிலாளருக்கு காணி உரிமை வழங்கப்படும்

by Damith Pushpika
October 27, 2024 6:32 am 0 comment

ஒரு காலத்தில் காணி உரிமை என்பதற்குப் பதிலாக லயத்து வீடும் அதற்கு முன்னுள்ள வாசலும், மரக்கறித் தோட்டமும் மக்களுக்குச் சொந்தம் என்று கூறினார்கள். இ.தொ.காவின் பைபிள் வசனமாக அது அன்று இருந்தது. அதற்கு மக்கள் வாக்களித்தார்கள் என்கிறார் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் மலையகத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளருமான கிட்ணன் செல்வராஜ். தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு

கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு, மலையகம் தவிர்ந்த நாட்டின் அனைத்து பகுதி மக்களும் மாற்றத்துக்காக வாக்களித்திருந்தனர். இம்முறை தேர்தலில் அவர்கள் மாற்றத்துக்காக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணுகின்றீர்களா?

பதில்: நாங்கள் ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்வோம் என்ற உறுதியில் இருந்தோம் ஏன் அவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தோம் என்றால், இதுவரை இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் எல்லோரும் ஓரணியில் திரண்டு தங்கள் பிரசாரங்களை முன்னெடுத்தார்கள். அது மாத்திரமல்ல இந்த நாட்டை 76 வருடங்களாக மாறி மாறி ஆட்சி செய்தவர்கள், இந்த நாட்டையும் இந்த நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தையும் சீரழித்து விட்டார்கள். அதன் காரணமாக இந்த நாட்டின் உற்பத்தி பொருளாதார முறை அழிவதற்கான சாத்தியங்கள் தென்படத் தொடங்கி விட்டன. இவர்கள் உற்பத்தி பொருளாதாரத்தை அழித்தது மட்டுமல்ல தேசிய ஒருமைப்பாடு அல்லது ஒற்றுமையையும் சீர்குலைக்க தொடங்கி விட்டார்கள். இதற்கு நல்ல உதாரணம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகளை, இனக்குரோதங்களை கட்டவிழ்த்து விட்டு துவேஷங்களை அவிழ்த்துவிட்டு, உயிர்த்த ஞாயிறை அடையாளமாக பதித்தார்கள். இதனால் இந் நாட்டு மக்கள் கோட்டாபய ராஜபக்‌ஷ மீது மாத்திரமல்ல நாட்டை இதுவரை ஆண்ட ஆட்சியாளர்கள் மீதும் கோபம் கொண்டு வீறுகொண்டு எழுந்தார்கள். கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுத்த பொருளாதாரத் திட்டம் நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றது. ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்களின் பொருளாதாரத் திட்டங்களாலும் கோட்டாபய ராஜபக்ஷவின் திட்டத்தாலும் நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைந்தது. பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் நாடு தள்ளப்பட்ட போது மக்களுக்கு ஆட்சி மாற்றம் ஒன்று தேவைப்பட்டது. முறைமை மாற்றம் ஒன்றை வேண்டி மக்கள் செயல்பட தொடங்கிய போது, கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறிச் சென்றார். அப்போது மக்களுக்கு புதிய முறை ஒன்று தேவைப்பட்டதால் அதனை தரக்கூடியது திசைகாட்டி என அவர்கள் தீர்மானித்தனர். அப்போதே ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் வெல்வோம் என்பது உறுதியாகியது கிராமங்கள் தோறும், பெருந்தோட்டங்கள் தோறும் மக்கள் முறை மாற்றத்துக்கு ஆதரவாக எங்களுடன் இணைந்து இருந்தார்கள். அப்போதே தோழர் அருண் குமார திசாநாயக்கவின் வெற்றி உறுதியாகிவிட்டது. ஏனைய பிரதேசங்களை விட, மலையக பெருந்தோட்டங்களிலும் என்னுடைய சமூகத்தின் மத்தியிலிருந்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகள் கிடைத்தன. ஆனால், அது குறைந்தளவிலான வாக்குகளாகவே காணப்பட்டன. இதுவரை காலமும் எமது சமூகத்தையும் தமிழ் சமூகத்தையும் ஏமாற்றிவந்த பிழைப்புவாத அரசியல் வாதிகள் எமக்கெதிராக அவதூறுகளை முன்வைத்தார்கள். அதன் எதிரொலி அந்த பொய்கள் உண்மைகளாக தென்பட்டன. அதனால் திசைகாட்டிக்கு வழங்கக்கூடிய வாக்குகள் அனைத்தும் பொய்யுரைத்தவர்களின் பக்கத்துக்கு திரும்பின. எனினும், மலையத்தில் இருக்கும் சிந்திக்கக்கூடிய இளைஞர், யுவதிகள், புத்திஜீவிகள், சிந்தனையாளர்கள், வர்த்தகர்கள், தோட்டத்தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகமும் பெருவாரியாக எமக்கு ஆதரவு வழங்கினார்கள். இன்று மலையகத்தில் மாறுதல் நோக்கிய பயணத்தில் அம் மக்கள் தங்களையும் பயனாளியாக மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். அதற்காக தேசிய மக்கள் சக்தியையும் அக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துக்கின்ற அதன் வேட்பாளர்களையும் வெல்வதற்கு வெல்லவைப்பதற்கு தாயாராகவுள்ளார்கள். எனவே இந்த பாராளுமன்ற தேர்தலில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்து வெற்றிபெற வைப்பதன் மூலம் அவர்களின் உரிமையையும் உறுதிப்படுத்துவார்கள்.

கேள்வி: இதுவரைகால அரசியல் தலைமைகள்மலையக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்கிறீர்களா?

பதில்: நிச்சயமாக. இதுவரைகாலமும் தங்களை ஏமாற்றினார்கள் என்பது என்னுடைய சமூகத்துக்கும் தெரியும். அந்த ஏமாற்றத்திலிருந்து விடுபட வேண்டியது இன்றைய எனது சமூகத்தினது கடப்பாடாக இருக்கின்றது. மலையகத்தில் உள்ள புத்திஜீவிகள், சாதனையாளர்கள் அனைவரும் இன்று அந்த ஏமாற்றத்தில் இருந்து விடுபடுவதற்கான பிரசாரங்களை முன்னெடுக்கின்றார்கள். மலையக சமூகம் இனியும் ஏமாறது. ஒரு காலத்தில் காணி உரிமை என்பதற்குப் பதிலாக லயத்து வீடும் அதற்கு முன்னுள்ள வாசலும், மரக்கறித் தோட்டமும் அவர்களுக்குச் சொந்தம் என்று கூறினார்கள். இ.தொ.காவின் பைபிள் வசனமாக அது அன்று இருந்தது. அதற்கும் வாக்களித்தார். தோட்டங்களை கிரமமாக மாற்றுவோம் என்றார்கள் அதற்கும் வாக்களித்தார்கள். அதாவது எல்லாவித வாக்குறுதிகளையும் மக்கள் நம்பினார்கள். ஆனால் அவர்களின் தேவை என்ன? தேர்தலில் வெல்வது மட்டுமே. ஆனால் இன்று அது மறுபக்கம் திரும்பியிருப்பதால் மலையக மக்கள் இனியும் ஏமாறமாட்டார்கள்.

கேள்வி: மலையக சமுகத்தின் அவசரத் தேவையாக எதனைச் சொல்வீர்கள்?

பதில்: இன்று மலையக சமூகத்துக்கு தேவை என்னவென்றால் இதுவரை காலமும் ஆட்சி பீடத்திலிருந்து அந்த ஆட்சிக்கு கை தூக்கிகளாக இருந்த மலையகத்தின் பிரபல பிரதிநிதிகளை வீட்டுக்கு அனுப்பி விட்டு புதிய பிரபலங்களை தேடுவதாகும். மலையகத்தின் இளைஞர், யுவதிகள் திசைகாட்டியின் தமிழ் வேட்பாளர்களை அடையாளங் கண்டுள்ளார்கள். அவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொள்கின்றார்கள். இதுவரை காலமும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆட்சியிலிருந்தவர்கள் மலையக மக்களின் உரிமைகளை கண்டுகொள்ளாமையினால் சலுகைப்போராட்டத்துக்கு பதிலாக உரிமைப்போராட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். எனவே, இவர்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கான மாற்றத்தை நோக்கிய அச்சாணியாக மாறியிருக்கின்றார்கள். இந்த சமூகத்துக்கு காலாவதியான பழைய முகங்கள் அன்றி, எதிர்வரும் காலங்களில் நாட்டை ஆளக்கூடிய நாட்டுக்கு அடித்தளமிடக்கூடிய மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய சலுகை அரசியலுக்கு சோரம் போகாத மலையக சமூகத்தை மாற்றியமைக்கக்கூடிய, துணிவுடைய, முற்போக்கான அமைப்பும் சுயநலபோக்கை எதிர்பாராத தேசிய மக்கள் சக்தியின் புதிய முகங்களே தேவைப்படுகின்றார்கள். மலையகத்தின் பழைய பிரபல அரசியல்வாதிகள் தோட்டங்களுக்குச் சென்று வாக்குகளை கேட்க முடியாதளவுக்கு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் எக் கட்சியில் போட்டியிடுவதென்று அறியாது தர்மசங்கடநிலைக்கு ஆளாகியுள்ளதுடன், சிலர் நிறுவனம் வழிநடத்தும் கட்சியூடாக சுயேச்சையாக போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அதன்படி, பழைய பிரபலங்களுக்கு பிரியாவிடை கொடுப்பதற்கு எமது சமூகம் தயாராகிவிட்டது.

கேள்வி: தோட்டத்தொழிலாளர்களின் சம்பள, காணி உரிமைப் பிரச்சினைக்கு உங்களிடமுள்ள தீர்வு என்ன?

பதில்: நாட்கூலிகளை மாதாந்தச் சம்பளம் பெறுபவர்களாக மாற்ற வேண்டும் அது உடனடியாக மேற்கொள்ளப்பட முடியாதது. ஏனெனில் அதற்கு பாராளுமன்றம் கூட வேண்டும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். மறுபுறம் காணி உரிமைப் பிரச்சினை. மலையக மக்கள் 200 வருட கால வரலாற்றைக் கொண்டவர்கள். அவர்களது மறுதலிக்கப்பட்ட உரிமைகளில் ஒன்றுதான் காணி உரிமை. இதற்கு 1946 ஆம் ஆண்டின் சட்டம் ஒன்றிருக்கிறது. இந்த சட்டம் இருக்கும் வரை தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி உரிமை பெற்றுக்கொள்ளப்பட முடியாது. இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது புவக்பிட்டியவில் மலையக தோட்டத்தொழிலாளர்கள் இரவோடிரவாக அடித்து விரட்டப்பட்டனர். இதனை எதிர்த்து 21 நாட்கள் போராடினர். அந்த நியாயத்தையும் வேண்டுகோளையும் தேசிய மக்கள் சக்தி நிச்சயம் நிறைவேற்றும். காணி சீர்திருத்த சட்டத்தை கொண்டுவந்து அதனை நிறைவேற்றும்.

வாசுகி சிவகுமார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division