வெலிகமவில் பிறந்த தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் முனீர் முளப்பர், அரபா கனிஷ்ட வித்தியாலயம், மீயல்ல அல் மினா வித்தியாலயம் என்பவற்றில் கற்றுள்ளதோடு பேருவளை நளீமிய்யா கலாபீடத்தில் இணைந்து உயர்கல்வி கற்று பட்டம் பெற்றவராவார். மாத்தறை சாந்த தோமஸ் கல்லூரி மற்றும் ஹம்பாந்தோட்டை ஸாஹிரா கல்லூரிகளில் ஆசிரியராகக் கடமையாற்றிலுள்ள இவர், 2014 முதல் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கான வளவாளராகச் செயற்பட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் இவர், தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த விஷேட பேட்டி இது.
கேள்வி: இலங்கையில் அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமான கம்பஹாவில் பொதுத்தேர்தலில் நீங்கள் போட்டியிடுவது குறித்து சுருக்கமாகக் குறிப்பிட முடியுமா?
பதில்: ஆம். கம்பஹா மாவட்டம் மிகச் சிறந்த மாவட்டம். நல்ல பண்பான மக்கள் நிறைந்து வாழும் முக்கிய பகுதி. இந்நாட்டின் அபிவிருத்திக்கு முக்கிய பங்களிக்கும் மாவட்டங்களில் ஒன்று இது. என்றாலும் எல்லா இன மக்களும் வாழும் இம்மாவட்டத்திலும் பொதுத்தேவைகளும் எதிர்பார்ப்புக்களும் நிறைந்தே உள்ளது. குறிப்பாக கல்வி, சுகாதாரம், வீட்டு வசதிகள், சுற்றாடல் என பல துறைகளிலும் குறைபாடுகள் பெரிதும் காணப்படுகின்றன.
அத்தகைய குறைபாடுகளையும் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் கடந்த கால ஆட்சியாளர்கள் தீர்த்து வைக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.
இதன் விளைவாக மழைக் காலங்களில் அடிக்கடி வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுப்பது தொடர்கதையாகியுள்ளது. மக்கள் பல்வேறுவிதமான அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். அதனால் இம்மாவட்டதிலுள்ள இத்தகைய –பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக் கொடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ள எமது தே.ம சக்தி, போக்குவரத்து, சுற்றாடல், உல்லாசப் பயணத் துறை உள்ளிட்ட 12 துறைகளை உள்ளடக்கி மூலோபாயத் திட்டமொன்றை தயாரித்துள்ளது.
அத்தோடு இம்மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கான பாடசாலைகளில் பௌதீக வளக்குறைபாடுகளும் நிறையவே உள்ளன. அவை தொடர்பிலும் குறிப்பாக, உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுப்பதிலும் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் தே.ம. சக்தி சார்பில் கம்பஹா மாவட்டத்தில் பொத்தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமைத்துவம் எனக்கு வாய்ப்பளித்திருக்கிறது. அதுவும் எமது கட்சியின் முக்கியஸ்தரான வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமை தாங்கும் அபேட்சகர் குழுவில் எனக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இவற்றை நான் ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன்.
கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றி, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் தே.ம.சக்திக்கு கிடைக்கப்பெறும் என நம்புகின்றீர்களா?
பதில்: ஆம். நிச்சயமாக. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டு மக்களின் மனநிலையை எடுத்துப் பார்த்தால் இது மிகவும் உறுதியானது. ஜனாதிபதி தேர்தலில் தே.ம. சக்தி அபேட்சகரான எமது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவுக்கு வாக்களிக்கத் தவறியமையை ஒரு குறையாகவே பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். இந்நிலைமை பொதுத்தேர்தலில் எமது தே.ம. சக்தி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான நல்ல சமிக்ஞையாகும்.
ஆனால், கடந்த ஜனாதிபதி தேர்தலின் ஆரம்ப காலப்பகுதியில், எம்மால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றனர். ஒரு சிலர் கணக்கு விளக்கங்கள் அளித்து, தே.ம. சக்தி அபேட்சகர் வெற்றி பெறுவது சாத்தியமில்லை. அவர்கள் 15 – 20 இலட்சம் வாக்குகள் தான் பெறுவர். அதற்கு மேல் வாக்கு பெற முடியாது என்று எம்மைப்பார்த்து கூறினர்.
அத்தோடு மக்கள் எமக்கு வாக்களிப்பை தடுப்பதற்காக போலியானதும் பொய்யானதுமான கதைகளை கட்டிவிட்டனர். குறிப்பாக அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் நிவாரணங்களை தே.ம. சக்தி பதவிக்கு வந்தால் நிறுத்திவிடும் என்றனர்.
இந்நாட்டில் ஜனாதிபதியாக வருவதற்கு அரசியல் கூட்டணிகள் அமைக்க வேண்டும். வேறுகட்சிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும். அதன் ஊடாகவே ஜனாதிபதியாக வெற்றி பெற முடியும் என்றனர். ஆனால் அவர்களது போலிப் பிரசாங்களைப் பொய்ப்பித்து எம்மால் இத்தேர்தலை வெற்றி கொள்ள முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். அதற்கு நாட்டின் பெரும்பாலான மக்கள் அளித்துள்ள ஆதரவு அடித்தளமாக அமைந்துள்ளது.
அதனால் பொதுத்தேர்தலிலும் மக்கள் எமக்கு அமோக ஆதரவளிக்கத் தயாராகியுள்ளனர். ஏனெனில் ஜனாதிபதி பதவி ஒரு தரப்பிலும் பாராளுமன்ற அரசாங்கம் மற்றொரு தரப்பிலும் இருந்தால், அது நாட்டை நெருக்கடி நிலைக்கு இட்டுச் செல்லும். அத்தகைய நிலைக்கு நாடு உள்ளாவதை மக்கள் ஒரு போதும் விரும்பவில்லை. அதனால் எமது ஜனாதிபதி தலைமையில் உறுதியான அரசாங்கத்தை அமைப்பதில் தெளிவான நிலைப்பாட்டை மக்கள் கொண்டுள்ளனர்.
கேள்வி: ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தில் தே.ம. சக்தி நாட்டுக்கு அறிவித்திருந்தது. அதற்கான நடவடிக்கைகள் எவ்வாறுள்ளன?
பதில்: இந்நாடு வங்குரோத்து அடைந்ததற்கான முக்கிய காரணிகளாக ஊழல், மோசடிகள், இலஞ்சம், மக்கள் சொத்துக்களைப் பிழையாகப் பயன்படுத்தியமை போன்ற பல விடயங்கள் அமைந்துள்ளன. அதனை கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது மக்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறினோம். மக்கள் மத்தியிலும் இது தொடர்பில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பின்புலத்தில் நாட்டின் பெரும்பாலான மக்கள் எமது ஜனாதிபதி அபேட்சகருக்கு பெரும்பான்மை ஆணை வழங்கி வெற்றி பெறச் செய்துள்ளனர். அவர் நாட்டின் ஜனாதிபதிப்பதவியை ஏற்று ஒரு மாதமும் சில தினங்களும் தான் கடந்திருக்கின்றன. இக்காலப்பகுதியில் எமது அரசாங்கம் எவ்வாறு அமையப் போகிறது என்பதற்கான சமிக்ஞையை நாட்டுக்கு நாம் மிகத் தெளிவாக வழங்கியுள்ளோம். அவற்றில் மக்களின் சொத்துக்களை வீணாகப் பயன்படுத்தும் அரசியல் கலாசாரத்தை மாற்றி மக்களோடு நெருங்கி செயற்படும் மனித நேயம் மிக்க அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம் என்பது முக்கியமான செய்தியாகும்.
அதேநேரம் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எமது நடவடிக்கைகள் அரசியல் ரீதியில் பழிவாங்குவதற்கானவை அல்ல. சட்டம் தனது கடமையை உரிய முறையில் மேற்கொள்ளும். அவ்வளவு தான். நாட்டில் சட்டத்தின் ஆட்சி பலப்படுத்தப்படும்.
கேள்வி: மக்கள் மாற்றமொன்றை எதிர்பார்த்து ஜனாதிபதித் தேர்தலில் தே.ம. சக்திக்கு பெரும்பான்மை ஆணை வழங்கினர். அந்த மாற்றம் பொதுத்தேர்தல் ஊடாக சாத்தியமாகும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா?
பதில்: இந்நாட்டில் கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களாக உருவாகியுள்ள அரசியல் கலாசாரம் குறித்து பெரும்பாலான மக்கள் வெறுப்புடனேயே உள்ளனர். அதற்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பினார்கள். விமர்சனம் செய்தார்கள். போராட்டங்களைக் கூட முன்னெடுத்தார்கள்.
அந்த வகையில் இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றி புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டிய தேவை நாட்டில் ஏற்பட்டிருந்தது. அந்தத் தேவையை நிறைவேற்றக்கூடிய அணியாக தே.ம. சக்தியை மக்கள் பார்க்கின்றனர். அதுதான் தே.ம. சக்தியின் நிலைப்பாடும் ஆகும். ஏனைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைப் போன்று ஆட்சிக்கு வந்த பின்னர் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிழையான வழிகளில் சொத்துக்கள் சேர்ப்பதோ, அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதோ எமது நோக்கமல்ல. மாறாக இந்நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதே எமது இலக்கு. அதனால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக நாட்டில் உறுதியான அரசாங்கம் அமையும். அதன் ஊடாகப் பலமான நாட்டை உருவாக்கி மகிழ்ச்சியான வாழ்வை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
கேள்வி: பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான சிறப்பு சலுகைகள் மட்டுப்படுத்தப்படும் என்று தே.ம. சக்தி மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளனவே?
பதில்: ஆம். நாட்டில் பொதுச்சொத்து வீண்விரயம் மலிந்து காணப்படுகிறது. அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் எமது ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் ஆளுநர்கள் பதவி ஏற்பு வைபவங்கள் மிகவும் எளிமையாகவே நடத்தப்பட்டன.
இவற்றின் நிமித்தம் எவ்வித அரச நிதியும் செலவிடப்படவில்லை. ஆனால் கடந்த காலங்களில் இத்தகைய வைபவங்களுக்காக கோடிக்கணக்கில் அரசநிதி செலவு செய்யப்பட்டமை முழு நாடும் அறிந்த விடயம்.
அதேபோன்று முன்னாள் ஜனாதிபதிகள் அதிக எண்ணிக்கையானோரை தங்கள் ஆலோசகர்களாக நியமித்திருந்தனர். அவர்களுக்கு கொடுப்பனவு, வாகனங்கள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டிருந்தன. அதேபோன்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் அதிக எண்ணிக்கையான பொலிஸாரையும் விஷேட அதிரடிப்படையினரையும் தங்களது பாதுகாப்புக்காக அமர்த்தி இருந்தனர்.
இதே போன்று அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியிருந்ததோடு அரச வாகனங்களையும் பயன்படுத்தினர். இவர்களுக்கு அனைத்து வசதிகளையும் கொண்ட வீடுகளும் வழங்கப்பட்டிருந்தன. சிலருக்கு அரச செலவில் வீடுகள் வாடகைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக பொருளாதார நெருக்கடிக் காலத்தில் நாட்டில் பெற்றோல், டிசல், மண்ணெண்ணைய் உள்ளிட்ட எரிபொருளுக்காக மக்கள் நாட்கணக்கில் நீண்ட வரிசைகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் காத்துக் கிடந்தனர். ஆனால் மக்கள் பிரதிநிதிகளான இவர்கள் எவ்வித சிரமமும் இன்றி விரும்பியபடி எரிபொருளைத் தேவைப்படும் சமயத்தில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு எரிபொருளுக்கென விஷேட கொடுப்பனவும் வழங்கப்பட்டிருந்தது. எமது பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வசதியை அனுபவித்தனர். இவ்வாறு இவர்களுக்காகவே நாட்டின் பொதுநிதியும் பொதுச்சொத்தும் அதிகளவில் செலவிடப்படும் கலாசாரம் உருவாக்கப்பட்டிருந்தது. எமது ஜனாதிபதி பதவிக்கு வந்ததும் இத்தகைய பொதுச்சொத்து நிதி விரயங்களை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அந்நடவடிக்கைகள் வலுப்படுத்தி பலப்படுத்தப்படும்.
கேள்வி: இளையோரின் வேலைவாய்ப்பு என்பது எமது நாட்டில் முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதனைத் தீர்த்து வைப்பதற்கான திட்டங்கள் குறித்து குறிப்பிடுவதாயின்?
பதில்: கடந்த கால அரசாங்கங்கள் பட்டாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இடங்களாக அரச நிறுவனங்களைப் பயன்படுத்தின. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அதில் தே.ம. சக்தி தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. தொழில் வழங்குவதற்காக அரசாங்க நிறுவனங்களை மாத்திரம் நம்பி இருக்க முடியாது. மாறாக தனியார் முதலீடுகளையும் வெளிநாட்டு முதலீடுகளையும் கொண்டு வந்து புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். அத்துறைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதன் ஊடாக எமது இளையோருக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பது இலகுவான காரியமாகிவிடும் என நம்புகிறோம். அரசாங்க நிறுவனங்கள் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் என்பதற்கு அப்பால் தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் முதலீட்டு திட்டங்களை கொண்டு வரக்கூடிய வகையில் அரசாங்கங்கள் அமைய வேண்டும். அத்தகைய அரசாங்கத்தை தே. ம. சக்தி அமைக்கும்.
கேள்வி: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்புவதற்கான எத்தனங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறதே.?
பதில்: இத்தாக்குதல் விசாரணை தொடர்பில் இன்று பலரும் கதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் இது தொடர்பில் கதைக்கவோ அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ முன்வராதவர்கள் இன்று பேசுவதுதான் மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலைப் பயன்படுத்தி ஆட்சியைப் பெற்றுக்கொண்ட இவர்கள் பதவியில் இருந்த போது இத்தாக்குதல் விசாரணை குறித்து உரிய நடவடிக்கையை எடுக்கத் தவறினர். பேராயர் உள்ளிட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கைகளைக் கூட பதவிக்கு வந்த பின்னர் கண்டு கொள்ளாத இவர்கள் இன்று இத்தாக்குதல் விசாரணை குறித்து கதைப்பதை மக்களே நகைப்புடன் பார்க்கின்றனர்.
இத்தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணையை முன்னெடுத்து அதில் சம்பந்தப்பட்டவர்களை பகிரங்கப்படுத்தி அவர்களுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுக் கொடுப்பதோடு இத்தகைய தாக்குதல்கள் எதிர்காலத்தில் இடம்பெற இடம்பெறாதிருக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். அதற்கேற்ப உரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட க்தோலிக்க சபையும் எமது அறிவிப்பிலும் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே தே.ம. சக்தி ஆட்சியில் அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழக்கூடிய வளமான தேசம் நிச்சயம் மலரும் அது உறுதியானது.
பேட்டி கண்டவர்: மர்லின் மரிக்கார்