2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி 247 இற்கும் அதிகமானவர்கள் கொல்ல ப்படுவதற்கும், 500 இற்கும் அதிகமானவர்கள் காயப்படுவதற்கும் காரணமாகவிருந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இலங்கை வரலாற்றில் மோசமான தாக்குதல் சம்பவமாகப் பதிவாகியிருந்தது.
இந்தத் தாக்குதலுக்கான சூத்திராதரிகள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், தாக்குதல் சம்பவத்தைத் தமது சுயலாப அரசியலுக்குப் பயன்படுத்தும் அரசியல் செயற்பாடு தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
மோசமான பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று ஐந்தரை வருடங்களுக்கு மேல் சென்றுள்ள போதும், தமது அரசியல் வங்குரோத்து நிலையை மறைப்பதற்கு ஒரு சில அரசியல்வாதிகள் இவ்விவகாரத்தை தமது கையில் எடுத்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் துரும்பாகப் பயன்படுத்திய உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்தை இரண்டாவது பொதுத்தேர்தலிலும் காவிச் செல்ல அதே தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
கடந்த பொதுத்தேர்தலில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்தே ராஜபக்ஷக்கள் வாக்குவேட்டையை நடத்தியிருந்தனர். அந்தக் காலப்பகுதியில் கோட்டாபயவை அரசியலுக்கு இழுத்துவருவதற்கு முனைப்புடன் செயற்பட்ட அரசியல்வாதியான உதய கம்மன்பில இரண்டாவது பொதுத்தேர்தலிலும் இந்த விடயத்தைக் காவிச்செல்ல முயற்சிக்கின்றார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பின்னர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்படும்வரை மூன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் பதவியில் இருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்தபோது இடம்பெற்ற இந்தத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டு அறிக்கைகள் கோரப்பட்டிருந்தன.
இதன் பின்னர் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவும் புதியதொரு ஆணைக்குழுவை அமைத்து விசாரணை அறிக்கை கோரியிருந்தார். இவ்வாறு கோரப்பட்ட அறிக்கையில் சில பகுதிகள் பகிரங்கப்படுத்தப்பட்ட போதும், முக்கியமான பகுதிகள் இரகசியமாகப் பேணப்பட்டன. அறிக்கைகள் கோரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் சூத்திரதாரிகள் யார், தாக்குதல்களுக்கு உண்மையில் காரணமானவர்கள் யார் என்பது இதுவரையில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
மக்கள் போராட்டத்தின் பின்னர் கோட்டாபய பதவி விலகிய பின்னர், ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் விசேட இரு குழுக்களை நியமித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அறிக்கைகளைப் பெற்றிருந்தார்.
இவ்வாறான பின்னணியில், அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து ஆசீ ர்வாதம் பெறச் சென்றபோது, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திக்கு ஜனாதிபதியை அழைத்துச் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தார் கர்தினால் மெல்கம் ரஞ்சித்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்றும், இச்சம்பவம் குறித்த பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு சூத்திரதாரிகளுக்கு எதிராக சட்டரீதியான தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையிலேயே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இவ்விடயத்தைக் கையில் எடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளில் முக்கியமான பகுதிகள் காணாமல் போயிருப்பதாகவும், இவை தன்னிடம் இருப்பதால் அவற்றைப் பகிரங்கப்படுத்தப் போவதாகவும் கூறி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
குறித்த அறிக்கைகளை அரசாங்கம் பகிரங்கப்படுத்தாவிட்டால் தான் அவற்றைப் பகிரங்கப்படுத்தப் போவதாகக் கூறிய அவர், கடந்த திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி இரண்டு அறிக்கைகளில் ஒன்றைப் பகிரங்கப்படுத்துவதாக அறிவித்தார்.
ஏதோ புதிய விடயங்களை அவர் அம்பலப்படுத்தப் போகின்றார், இதன் மூலம் அரசியல் களம் தலைகீழாக மாறப் போகின்றது என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு அவருடைய தகவல்கள் ஏமாற்றமாகவே அமைந்தன.
இதற்குக் காரணம் அவர் பகிரங்கப் படுத்தியது புதிய விடயமல்ல. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் நியமிக்கப்பட்ட இரண்டு விசேட குழுக்களின் அறிக்கைகளையே அவர் வெளிப்படுத்தினார். ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.ஜே.டி.அல்விஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு மற்றும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட மற்றுமொரு விசாரணைக் குழுவின் அறிக்கைகளே அவை.
இவற்றில் ஒரு அறிக்கையைப் பகிரங்கப்படுத்திக் கருத்துத் தெரிவித்திருந்த அவர், புதிய அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டும் நோக்கில் இந்த அரசியல் நாடகத்தை அரங்கேற்றினார் என்று கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் சொத்துக்களை மீட்கும் பிரிவுக்கு நியமிக்கப்பட்ட முன்னாள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோரின் நியமனங்களைக் கேள்விக்குட்படுத்துவது அவரின் நோக்கமாக இருந்தது.
நியமனங்களைக் கேள்விக்கு உட்படுத்துவது மாத்திரமன்றி, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த புதிய அரசாங்கத்தின் விசாரணை நடவடிக்கைகள் குறித்து மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி அதில் அரசியல் இலாபம் தேடுவது அவருடைய நோக்கம் என்று அரசியல்வாதிகள் பலர் கூறியுள்ளனர்.
ரவி செனவிரத்னவும், ஷானி அபேசேகரவும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த விசாரணைகளை நேர்மையாக முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் உண்மையை வெளிப்படுத்திவிடுவார்கள் என்பதற்காக இந்த நாடகமொன்று நடத்தப்பட்டதாகவும் அரசியல் களத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.
அது மாத்திரமன்றி குறித்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை ஆதரித்து தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படத் தொடங்கினர். இதனால் அவர்களை அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நோக்கில் விசேட குழுக்கள் இரண்டை நியமித்து இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் வகையில் அறிக்கைகள் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அவ்வாறு பெறப்பட்ட அறிக்கைகளைப் பிடித்துக்கொண்டே உதய கம்மன்பில தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருந்தபோதும், உதய கம்மன்பிலவின் புதிய வெளிப்படுத்தலையோ அல்லது அவர் பகிரங்கப்படுத்தியதாகக் கூறும் அறிக்கைகளையோ ஏற்றுக் கொள்ளப் போவதில்லையென அரசாங்கம் கூறியதுடன், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் தெளிவாகக் கூறிவிட்டார்.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் திட்டவட்டமாகக் கூறினார்.
ரணில் விக்கிரமசிங்கவின் தேவைக்காகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய நியமிக்கப்பட்ட குழுக்களினால் மேற்கொள்ளப்படவில்லையென்றும், இந்த அறிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும் அவர் தெரிவித்தார். அது மாத்திரமன்றி, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த விசாரணைகளை ரவி செனவிரத்னவும், ஷானி அபேசேகரவும் முன்னெடுத்துச் செல்வதைத் தடுக்கும் வகையிலேயே இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எனவே, குறித்த இருவரையும் அவர்களின் நியமனங்களில் இருந்து நீக்கப் போவதில்லையென்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மறுபக்கத்தில், உதய கம்மன்பில வெளிப்படுத்திய அறிக்கைகள் தமக்கு ஏற்கனவே கிடைத்துவிட்டதாகவும், அவற்றில் உள்ள விடயங்களை ஏற்றுக்கொள்ளவில்லையென்றும் கொழும்பில் நடத்திய ஊடகவியலார் சந்திப்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும், கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்களும் தெரிவித்தனர்.
இதுவரை காலமும் தூங்கிவிட்டுப் புதிதாகத் தோற்றம் பெற்றிருக்கும் உயிர்த்த ஞாயிறு ஹீரோக்கள் பற்றித் தாம் கவலைப்படவில்லையென அவர்கள் கூறியிருந்தனர்.
இந்தப் பின்னணியில், உதய கம்மன்பில ஏன் இந்த நாடகத்தை அரங்கேற்றினார் என்று பார்க்க வேண்டும்.
இதற்கான ஒரேயொரு காரணம் பொதுத்தேர்தல் மாத்திரமே. உண்மையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால் அவர் அமைச்சராக அங்கம் வகித்த கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இந்த முயற்சியை எடுத்திருக்கலாம்.
இல்லாவிட்டால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து உண்மையைக் கொண்டுவர முயற்சித்திருக்கலாம். இவை அனைத்தையும் விடுத்து தற்பொழுது இவ்விடயத்தைக் கையில் எடுத்தது ஏன்? என்ற வினா எழுகின்றது.
இனவாத அரசியல் இனியும் எடுபடாது என்ற செய்தி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டு விட்டது. இதுவரை காலமும் இனவாதத்தை மக்கள் மத்தியில் விதைத்து அதன் மூலம் அரசியல் இலாபம் தேடிவந்த உதய கம்மன்பில எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியற்றதாகியது.
இதனால் ஏதாவது ஒரு விடயத்தைப் பரபரப்பாக்கி அதன் மூலம் மக்களின் வாக்குகளைப் பெற்று எப்படியாவது பாராளுமன்றத்திற்குள் நுழைந்துவிடலாம் என்பது அவருடைய கணிப்பு என்கிறார்கள் அரசியல்வாதிகள்.
இந்த வெளிப்படுத்தல்களுக்கு இதுவே மூல காரணம் என்பது அப்பட்டமாகத் தெரிகின்றது. சுயநல பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை மீண்டும் பணயம் வைக்கும் எந்தவொரு முயற்சியும் முறியடிக்கப்படுவது அவசியம். அவர் மாத்திரமன்றி இதனைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு அரசியல் செய்ய மற்றுமொரு தரப்பும் தயாராகும் அறிகுறியும் உள்ளது.
இந்த அரசியல் நாடகங்களுக்கு மக்கள் மீண்டும் ஏமாந்து போகக் கூடாது.