நேர்காணல் : ஞானமுத்து சிறிநேசன் நேர்கண்டவர் : வ.சக்திவேல்
இதுவரைகாலமும் தமிழ் தேசியப் பரப்பில் வட, கிழக்கில் இருந்து அரசியல் பணி செய்துவரும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகள் ஒரு கூட்டமைப்பாகவேதான் செயற்பட்டு வந்தன. இந்நிலையில் இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொத்தேர்தலில் அக்கூட்டமைப்பிலிருந்து செயற்பட்ட பல கட்சிகள் இணைந்து ஒன்றாகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சி மாத்திரம் தனியாகவும் இத் தேர்தலுக்கு முகம் கொடுத்துள்ளன. இந்நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும், அக்கட்சியின் தற்போதைய பாராளுமன்ற வேட்பாளருமான ஞானமுத்து சிறிநேசன் வழங்கிய பிரத்தியேக செவ்வி.
கேள்வி : தற்போதைய தேர்தல் கள நிலவரம் எவ்வாறு அமைந்துள்ளது?
பதில் : தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க இருப்பதாக களுவாஞ்சிகுடி பிரதேச மக்கள் என்னிடம் நேரில் தெரிவித்தார்கள். இந்நிலையில் இந்த பொதுத் தேர்தலில் பல்வேறு பட்டவர்கள், பல்வேறு நோக்கங்களுக்காகவும், சுய நோக்கங்களுக்காகவும், களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள், மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சி மூன்று அல்லது நான்கு ஆசனங்களை பெற வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.
மக்கள் இந்த விதத்தில் மிகவும் நியாயமாக சிந்தித்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும். மக்கள் இந்த தேர்தலில் சரியாக சிந்தித்து சரியான நபர்களை தேர்வு செய்ய வேண்டும். அதனால் எதிர்வரும் 14 ஆம் திகதி தமிழரசு கட்சி வெற்றி பெற்றது என்பதை நாம் கேட்க வேண்டும். மக்கள் வீட்டு சின்னத்திற்கும் எனது 6 ஆம் இலக்கத்துக்கும் வாக்களிப்பதோடு தாம் விரும்பும் ஏனைய இரு வேட்பாளர்களுக்கும் தமது வாக்குகளை செலுத்த முடியும்.
கேள்வி : தமிழரசுக் கடசியைப் பற்றி பலர் பல விமர்சனங்களை முன் வைக்கின்றார்களே?
பதில் : விஷமத்தனமான செய்திகளை பரப்பக்கூடிய விதத்தில் சிலர் செயல்படுகின்றார்கள். அவையெல்லாம் பொறாமை காரணமாக காழ்ப்புணர்ச்சி காரணமாக, செய்யப்படுகின்ற செயற்பாடுகளாய் இருக்கும். அவற்றை நாம் உதறித் தள்ளிவிட்டு ஊழல் மோசடி லஞ்சம், கையூட்டல், இல்லாமல் அரசியல் செய்யக்கூடியவர்களையும், மக்களுக்கு சரியான வழிகாட்டுதல் செய்யக்கூடிய வேட்பாளர்களையும், தேர்வு செய்ய வேண்டும்.
அந்த அடிப்படையில் கடந்த காலத்தில் எமது பணிகள் சகல மக்களையும் பிரதேசங்களையும் மையமாகக் கொண்டுதான் நடைபெற்றன. அதற்கான ஆதாரங்களை இப்போது மக்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே நான் மீண்டும் தேர்வு செய்யப்படுகின்ற போது தமிழ் மக்கள் வாழ்கின்ற அனைத்து கிராமங்களுக்கும் எங்களுடைய உண்மையான நேர்மையான பணிகளை மேற்கொள்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
கேள்வி : பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் திட்டங்கள் உள்ளனவா?
பதில் : தேர்தல் முடிந்த பின்னர் ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும், இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகவும், இன்னும் பல முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாகவும், பேச வேண்டிய அவசியம். தமிழரசு கட்சிக்கு நிச்சயமாக இருக்கின்றது.
உண்மையில் பேசித்தான் ஆக வேண்டும் பேசுகின்றபோது அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றார்கள் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு. நீண்ட காலமாக 75 ஆண்டுகளுக்கு மேலாக புரையோடிப் போயிருக்கின்ற இனப் பிரச்சினைக்கான தீர்வை நாங்கள் பெறுவதற்காக அனைத்து பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்வோம்.
கேள்வி : ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளர் பாவித்த சங்கு சின்னத்தை தற்போது வேறு கட்சி ஒன்று பொதுத் தேர்தலுக்குப் எடுத்துக் கொண்டுள்ளதே?
பதில் : ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா. அரியநேத்திரன் சங்கு சின்னத்தில் போட்டியிட்டிருந்தார். தமிழ் மக்களின் ஒற்றுமை கருதி போட்டியிட்டிருந்தார். ஆனால் தற்போது அந்த சங்கு சின்னம் என்பது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னமாக மாற்றப்பட்டிருக்கின்றது.
மக்கள் தற்போது தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் போது சுயேச்சை சின்னமாகதான் அந்த சங்கு சின்னம் பயன்படுத்தப்பட்டது.
இப்போது அந்த சங்கு சின்னம் என்பது ஒரு கட்சியின் சின்னமாக மாற்றப்பட்டிருக்கின்றது. அதாவது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பானது தனது குத்து விளக்கு சின்னத்தை விட்டு விட்டு சங்கு சின்னத்தை எடுத்திருக்கின்றனது.
பொதுமக்கள் சபை சார்பாக நிறுத்தப்பட்ட அந்த தமிழ் வேட்பாளருக்கு ஒரு பகுதியினர் ஆதரவளித்தனர். இன்னுமொரு பகுதியில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருக்கு ஆதரவளித்திருந்தனர்.
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்துவிட்டது. இப்போது நாங்கள் சங்கு சின்னத்தையோ அல்லது தொலைபேசி சின்னத்தையோ பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. இப்போது நாங்கள் தமிழரசு கட்சியின் சார்பாக வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.
என்றால் தமிழ் மக்கள் தங்களுடைய தாய் கட்சியான தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
எனவே தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்ட தமிழர்களின் தாய் கட்சியான தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டியது தமிழ் மக்களின் பொறுப்பாக இருக்கின்றது.
இதில் குழப்பம் அடைய வேண்டாம் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். தமிழரசு கட்சி எந்த மாற்றமும் இன்றி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றது.
கேள்வி : பொதுத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர் தெரிவில் உங்களுடைய கட்சியில் பல இழுபறிகள் காணப்பட்டனவே?
பதில் : பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக எமது கட்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பல விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருந்தன அதில் 8 விண்ணப்பங்களை நியமன குழுவினர் தெரிவு செய்து தற்போது அவர்கள் போட்டியிடுகின்றார்கள். இந்த நிலையில் எட்டுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்திருந்த நிலையிலும் அதில் தெரிவுக்குள் இடம்பெறாத நிலையில் அவர்கள் வேறு கட்சிகளில் வேறு சின்னங்களில் போட்டியிடக்கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றன.
எது எப்படியாக இருந்தாலும் தமிழரசு கட்சியைப் பொறுத்தவரையில் சகல கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டிய தார்மீக பொறுப்பு இருக்கின்றது. இந்த தேர்தல் அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு தேர்தல் என்று சொல்லலாம்.
பல கட்சிகளையும் இணைத்து செயல்படுவதில் அவர்களை இணைக்கின்ற அந்த முயற்சியில் சில இழுப்பறிகள் ஏற்பட்டன. இதன் காரணமாக அவர்கள் தனித்துப் போட்டியிடுகின்ற போது அவர்களோடும் சில வேட்பாளர்கள் இணைந்திருக்கின்றார்கள்.
எனவே இனிவருகின்ற காலங்களில் சகல கட்சிகளும் இணைந்து பயணிக்க கூடிய விதத்தில் சகல கட்சிகளையும் இணைக்க வேண்டும் என்கின்ற பொது மக்களின் விருப்பத்துக்கிணங்க அடுத்த தேர்தலில் இந்த அனைத்து கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும்.
தற்போது தமிழரசு கட்சியைப் பலப்படுத்துவதன் மூலமாக தாய் கட்சியானது ஏனைய கட்சிகளையும் இணைத்துச் செல்வதற்குரிய சந்தர்ப்பத்தை நாங்கள் ஏற்படுத்த வேண்டும்.
என்னுடைய விருப்பமும் சகல கட்சிகளும் மீண்டும் இணைய வேண்டும் என்பதுதான். எனவே தமிழரசிக் கட்சியின் பலத்தின் ஊடாக ஏனைய கட்சிகளையும் அரவணைத்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்
கேள்வி: நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களித்திருந்த அரச உத்தியோகத்தர்களின் அதிகளவான வாக்குகளும் நிராகரிக்கப்பட்டிருந்தன. நீங்கள் முன்னாள் கல்வி நிருவாக சேவையின் அதிகாரி என்ற வகையில் இதுபற்றி என்ன கருதுகின்றீர்கள்?
பதில் : அரசு உத்தியோகத்தர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். நீங்கள் தபால் மூலமாக வாக்களிக்க இருக்கின்றீர்கள். அதன்போது அந்த வாக்குகளை முறையாக அளிக்க வேண்டும். சரியாக வாக்களிக்க வேண்டும்.
ஏனெனில் கடந்த காலங்களில் அஞ்சல் மூலமான வாக்குகளில் பல வாக்கு சீட்டுகள் நிராகரிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
வாக்களிப்பது என்பதைவிட உங்களது வாக்குச் சீட்டுக்களை நிராகரிக்கச் செய்வதற்கு ஏற்ற விதத்தில் சில மோசடிகளும் நடைபெறுவதுண்டு. அந்த நிலையில் வாக்குப் பதிவு நடைபெற்ற பின்னர் தபாலுறையில் போடப்பட வேண்டும். அதன் பின்னர் அதற்குரிய ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும்.
அவ்வாறு இல்லாதவிடத்து அந்த வாக்கு சீட்டுக்கள் வெளியில் எடுக்கப்பட்டு சில மோசடிகள் செய்யப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றன. உண்மையில் கட்சி முகவர்கள் இந்த விடயத்தில் கவனமாக செயற்பட வேண்டும்.
நீங்கள் அவ்வாறான மோசடியானவர்களின் வலைகளிலிருந்து தப்பி பிழைக்க வேண்டும். தற்போது கள்ள நோட்டுக்களைக்கூட அடுக்கி வைத்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
கள்ள நோட்டுகளை அடிப்பவர்கள் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களும் குறிப்பிட்டதொரு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் கள்ளநோட்டுகளை தந்தும்கூட உங்களுடைய வாக்குகளை காவு கொள்வதற்கு சில கட்சியைச் சேர்ந்தவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
எனவே இவ்வாறான குற்ற செயல்கள் செய்கின்றவர்களில் கட்சிகள் தொடர்பிலும் நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
தயவு செய்து ஊழல் மோசடி இலஞ்சம் கையூட்டு இல்லாத ஒரு மதுசார பாவனை இல்லாத ஒரு தேர்தலுக்கு உங்களை தயாராகிக் கொள்ள வேண்டும்.