ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இனப் பிரச்சினை தொடர்பான சவாலுக்கு முன்வைத்துள்ள யோசனையை தாம் வரவேற்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இனப் பிரச்சினை என்ற தீரா சவாலுக்கு தீர்வாக முன்வைத்துள்ள ஒரே யோசனை, 2015 முதல் 2018 வரை நல்லாட்சியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கிலான சர்வகட்சி கலந்துரையாடலை முன்னேடுப்போமென ஜனாதிபதி தெரிவித்ததாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மனோ கணேசன் இதனை கூறியுள்ளார்.
“ஜனாதிபதி அநுர ஆட்சிக்கு வந்த இந்த ஒரே மாதத்துக்குள்ளேயே நாட்டின் அனைத்து சவால்களுக்கும் பதில் தரவேண்டுமென்ற குறுகிய அரசியலையும் நாம் செய்யவில்லை.
அதேபோன்று புதிய அரசுக்கு நியாயமான அவகாசம் கொடுக்கவேண்டும் என நாம் எண்ணுகிறோம். இந்நோக்கில், தென்னிலங்கையில் தமிழ் முற்போக்கு கூட்டணியும், வட, கிழக்கில் இலங்கை தமிழரசு கட்சியும் வெற்றி பெற்று அரசியல் பலத்துடன் பாராளுமன்றத்தில் இடம்பெறுவது காலத்தின் கட்டாயமாகும். இதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
நல்லாட்சி காலத்தில் நாம் அனைவரும் அன்று ஆரம்பித்த, புதிய அரசியலமைப்பை எழுதும் சர்வ கட்சி பணியை தொடரப்போவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
மாறிவரும் இன்றைய அரசியல் சூழலில், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும், அரசியல் யாப்பை உருவாக்கும் உரையாடலில் ஆளுமையும், அனுபவமும் உள்ள சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் பங்குபெற வேண்டுமா? இல்லையா? என்பதை தமிழ் வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.